Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழைக்கால நிவாரணப் பணிகள்... நோய் தவிர்க்கும் வழிகள்!

மிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையானது, சற்றே ஓய்வெடுத்திருக்கிறது. இந்நிலையில், இனி மழைக்கால நோய்கள்தான் வெடித்துக் கிளம்பும். அவற்றில் பெரும்பாலான நோய்கள் மழை விட்டபின் வருகிற நோய்களாகத்தான் இருக்கும். வருமுன் காப்போம் என்பது போல நிவாரணப் பணிகளுக்கு நேரடியாகச் செல்லும் அன்பர்களுக்கு சில டிப்ஸ்கள்...

1. பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பதால் அவர்களின் கால்களில் மழைக்கால சேற்றுப் புண்களும், எரிச்சலுடன் கூடிய தோல் உரிதலும் இருக்கும். ஆகவே கையோடு WHITFIELD என்ற ஆயின்மென்ட்டை கொண்டு செல்லலாம். அதேபோல 'சைபால்' ஆயின்மென்ட்டும் கொடுக்கலாம். (இரண்டுமே வெளிப்பூச்சுக்கு மட்டுமே!)

2. தரமான வெண்ணை பொட்டலங்கள், தேங்காய் எண்ணை சாஷேக்களை கொண்டு போகலாம். சிறு குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் உள்ள இடங்களில் ஆயின்மென்ட் தடவுவதற்கு பதில் வெண்ணை தடவச் சொல்லிக் கொடுக்கலாம். இதனால், எரிச்சல் இல்லாமல் இருக்கும். அதேபோன்று எரிச்சலை கொடுக்காத விக்ஸ் டப்பாக்களை சிறியவர்களுக்கும், நீலகிரி (யூகலிப்டஸ் தைலம்) தைலத்தை பெரியவர்களுக்கும் கொடுத்து விட்டு வரலாம்.

3. உணவுப் பொருட்கள் தேவையிருக்கிற இடங்களில் மட்டுமே வழங்க வேண்டும். ஸ்பாட்டுக்கு நாம் போகும் போதே அங்குள்ள மக்கள் பசியுடன் இருக்கிறார்களா அல்லது உதவிப் பொருட்களை மட்டுமே எதிர்பார்த்து உள்ளனரா என்பதை அறிந்து கொள்கிற திறன் உள்ள நபரை உடன் வைத்துக் கொள்வது அவசியம்.

4. உணவுப் பொருட்களை வழங்குவதாக இருந்தால் அன்றாடம் பேக்கரிகளில் தயாரித்து ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே தாங்கக் கூடிய 'பேக்கரி பிரட்'களையோ, க்ரீம் பிஸ்கட்டுகளையோ தவிர்த்து விடுவது நல்லது.

மாற்றாக பத்து நாட்கள் வரை தாங்கக் கூடிய அளவில் தயாரித்து 'காலாவதி' தேதி குறிப்பிட்டு பேக்கிங் செய்யப்படுகின்ற  கம்பெனி வகை பிரட்களையே வாங்கிக் கொடுக்க வேண்டும். அதிக நாட்கள் தாங்க வேண்டும் என்பதற்காக அதில் 'மால்ட்' அதிகமாக கலந்திருப்பார்கள். அது பலகீனமான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றி வைக்கும்.

5. டெட்டால் பாட்டில் மற்றும் சோப்புக் கட்டிகளை கொண்டு போய் கொடுக்கலாம். அதேபோன்று ஐந்து கிராம் எடை கொண்ட கற்பூரக் கட்டிகளை கொடுத்து, அவைகளை சிறு பாத்திரத்தில் கரைத்து சுற்றுப்புறத்தில் தெளித்து வைத்து விட்டால் சில மணி நேரங்களுக்கு கொசு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்காது என்பதை அவர்களுக்கு மெதுவாக விளக்கிச் சொல்லி நாமே செய்து காட்டி விட்டு வர வேண்டும்.

6. வீடுகளில் வளர்க்கப்படுகின்ற கற்பூரவல்லிச் செடிகள் (இதன் சாற்றை சிறிதளவு குழந்தைகளுக்கு உள்ளுக்கும் கொடுக்கலாம். மழைக்காலச் சளித் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை இது பெரிதும் காப்பாற்றும்) ஒரு கொத்து நிலவேம்புக் குடிநீரை 20 மி.கி கொள்ளளவு கொண்ட சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொடுக்கலாம்.

நொச்சி இலைகள் கிடைத்தால் ஒரு குடும்பத்துக்கு பத்து இலைகள் என்று கொடுக்கலாம். இது கொசுத் தொல்லை இல்லாமல் தடுத்துக் காப்பாற்றும் என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, முடிந்தால் வருங்காலத்தில் இருக்கிற இடத்திலேயே ஒரு நொச்சிச் செடியை வளர்ப்பது நல்லது என்று சொல்லி விட்டு வரலாம்.

7. தண்ணீர் பாட்டில்கள், மங்கி குல்லாய்கள், நாப்கின்ஸ்கள், பாய்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், காற்றால் நிரப்பிக் கொள்ளப்படும் ரப்பர் தலையணைகள், சிறிய ரீபிள் கட்டைகள் (மின்சார தாக்குதல் சமயங்களில் இதன் தேவையானது மிகவும் அவசியம் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லி விட்டு வர வேண்டும்) கொடுக்கலாம்.

* ஏதோ போனோம், நான்கு பேரைப் பார்த்தோம், உணவு வழங்கினோம், அவர்களும் மனதார வாழ்த்தினார்கள் என்று இந்த செயல்பாடுகளுக்கு 'தர்ம முத்திரை' குத்திக் கொள்வதை முதலில் விட்டு விட வேண்டும்.

* உதவிகளை கொடுக்கும் போதும், அவர்கள் பெறும் போதும்  அதை புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் கைவிடுதல் அவசியம். நிறைய பேர் உதவிகளை பெற்றுக் கொள்ள தயங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கொள்வார்கள்.. இதை அனுபவத்தால்தான் உணரமுடியும். அப்படி அனுபவித்து உணர்தலுக்காக பல வயிறுகளின் பசியை பலி கொடுக்க வேண்டாமே.

* உதவி பெறுவோரில் நோயாளிகள், சீனியர் சிட்டிசன்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் போக்கறிந்து செயல்படுதல் மிகவும் அவசியம். அதேபோல் இதயநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கான மருந்துகளை உரிய மருத்துக் குழுவின் ஆலோசனைப் படி பெற்று அவைகளை கையோடு கொண்டு செல்லலாம்.

* நம் குழுவில் ஒரு மருத்துவர் இருப்பது உதவிக்காக காத்திருப்போரையும், சில ஜிம் பாய்கள் இருப்பது உதவிக்கு போகிற நம்மையும் காத்து இதுபோன்ற உதவிகள் தொடர வழிவகுக்கும்...

 - ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement