கிரீன் டீயின் 6 பலன்கள்!

நான் கிரீன் டீக்கு மாறிட்டேன்...’ என்று கிரீன் டீ குறித்த பேச்சுக்கள் ஊரெங்கும் இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு. ஆனால், எப்படி வாங்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு பலரிடம் இல்லை.

இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...

கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்த கூடாது. உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி,  வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும். இதில், சர்க்கரை சேர்க்காமல், தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் முழு பலன்களும் கிடைக்கும். க்ரீன் டீயில் பால் சேர்க்கக்கூடாது.

1.கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க,  தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

2. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

3.கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

4.கிரீன் டீ  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

5. கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன.  இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

6. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.

 - பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!