Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புற்றுநோய்- 10 உண்மைகள்!

புற்றுநோய் இன்று உலகையே அச்சுறுத்திவரும் மிக முக்கியமான லைஃப் ஸ்டைல் நோய். தொற்றா நோய்களில் இதுவே அதிகமான உயிர்களைக் காவு வாங்கிவருகிறது என  தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் குறித்த அச்சம், எண்ணற்ற தவறான எண்ணங்களையும் மூடநம்பிக்கைக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 10 நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்.

1) ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது:

இல்லை. இது மருத்துவ ரீதியாக உண்மை இல்லை. மார்பகப் புற்றுநோய் பாதிப்பாளர்களில் ஒரு சதவிகிதத்தினர் ஆண்கள் என்று ஒரு மருத்துவத் தகவல் தெரிவிக்கிறது. இந்த பாதிப்பு உள்ள ஆண்களில் 80 சதவிகிதம் பேருக்கு இதுகுறித்த விழிப்பு உணர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்புப் பகுதியில் கட்டி போன்று இருந்தால்,  உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

2) புற்றுநோய் ஏற்பட்டால் காப்பாற்றவே முடியாது:

இல்லை. இதில் உண்மை இல்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், வாழ்வியல்முறை மாற்றம் மற்றும் தகுந்த சிகிச்சைகள் மூலம் குணப்பட்டுத்திவிட முடியும். தற்போது, புற்றுநோய் சிகிச்சையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கானோர் புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

3) சிலவகை புற்றுநோய்கள் தொற்றும் தன்மை உள்ளவை:

இல்லை. எந்தப் புற்றுநோயும் தொற்றும் தன்மை உடையன அல்ல. ஆனால், இரண்டு தொற்றும் தன்மை உடைய வைரஸ்களான ஹெச்பிவி மற்றும் ஹெபடைட்டிஸ் சி ஆகியவை முறையே செர்விக்கல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவு தீவிரமானவை. இந்த இரண்டு வைரஸ்களுமே முறையற்ற பாலுறவு மூலம் பரவும்தன்மை உடையவை. ஹெபடைட்டிஸ் சி சுகாதாரமற்ற ஊசிகள் மூலமாகவும் பரவும் தன்மை உடையது.

4) நேர்மறை எண்ணங்கள் இருந்தாலே, புற்றுநோய் குணமாகிவிடும்:

இது உண்மைதான். புற்றுநோய் குணமாக நேர்மறையான எண்ணங்கள்,  அணுகுமுறைகள் மிகவும் முக்கியம். ஆனால், தொடர்ந்து தடையற்ற மருத்துவ சிகிச்சைகளும், வாழ்வியல்முறை மாற்றங்களும் இதே அளவு முக்கியமானவை.

5) புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வரும்:

புகைப் பழக்கம், பாஸிவ் ஸ்மோக்கிங் இரண்டும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனோடு, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், ஆர்சானிக் வாயு போன்றவையும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

6) குறைந்த அளவு புகைத்தல் அல்லது லைட்ஸ் சிகரெட்டுகள் புகைத்தல் ஆபத்தற்றவை:

இது மிகவும் தவறான கருத்து. லைட்ஸ் சிகரெட்கள் ஆபத்தற்றவை என்ற மனப்பாங்கு நிறைய சிகரெட்டுகளை ஊதித்தள்ள தூண்டுகின்றன. இதனால், புற்றுநோய்க்கான வாய்ப்பு இரண்டு மடங்காகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சிகரெட் பாக்கெட்டுகளில் லைட்ஸ், மைல்டு என அச்சிட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  புகைப்பிடிப்பதை முழுமையாகக் கைவிடுவது ஒன்றே புற்றுநோய் வராமல் காக்கும் வழி.

7) புற்றுநோய் வருவதைத் தடுக்க வழியே இல்லை:

இல்லை. தவறான கருத்து இது.  சிகரெட், புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவது,  ஆரோக்கியமான உணவுப்பழக்கம், போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் மாசிலிருந்து தற்காத்துக்கொள்ளுதல் போன்ற முறையான வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க்கைத் தடுக்க முடியும்.

8) அறுவை சிகிச்சையால் புற்றுநோய்க் கட்டிகள் உடல் முழுதும் பரவும்:

இது முழுக்க முழுக்க மருத்துவத்துவத்துக்கு புறம்பான மூடநம்பிக்கை. புற்றுநோய் முற்றி, உடல் முழுதும் பரவத் துவங்கிவிட்ட நிலையில், சிலருக்கு அறுவைசிகிச்சை செய்வதால், சிகிச்சையையும் மீறி புற்றுநோய்கட்டிகள் உடலெங்கும் பரவும். அதிலிருந்து இந்த மூட நம்பிக்கை உருப்பெற்றிருக்க வேண்டும். மற்றபடி, அறுவை சிகிச்சையால் புற்றுநோய் பரவியதாக இதுவரை எந்த ஒரு மருத்துவப் பதிவும் இல்லை.

9) செயற்கை கார்சினோஜன்கள் இயற்கையான கார்சினோஜனைவிட ஆபத்தானவை: 

பொதுவாக, புற்றுநோய் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட நோய். செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் தேடிக்கொண்டது இந்த நோய். ஆனால், இயற்கையான சில பொருட்களில்கூட புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜன்கள் உள்ளன. உதாரணமாக, டீ, காபி, கோக் போன்றவற்றில் உள்ள டன்னின் என்ற பொருள்,  புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜனாக செயல்படக்கூடியது.

10)  எல்லா அப்நார்மல் கட்டிகளும் புற்றுகளே:

இல்லை. உடலில் கொழுப்புக்கட்டிகள் உட்பட பல தீங்கற்ற கட்டிகள் உருவாகக்கூடும். அனைத்துமே புற்றுக்கட்டிகளாக இருக்கும் என்றோ; எல்லா கட்டிகளும் புற்றுநோயைக் கொண்டுவரும் என்றோ தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.

- பா. இளங்கோவன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement