Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறு பல்லும் சாதனை புரிய உதவும்; பற்கள் சேகரிப்பில் லிம்கா சாதனை புரிந்த மருத்துவர்!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பல் மருத்துவப் பிரிவு தலைமை நிபுணர் டாக்டர் ஜிப்ரீல். பல்லில் ஏற்படும் வீக்கம், ஈறுகளில் தொற்றுக் கிருமிகள் தாக்கம், ஈறுகளை முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால் பாதிப்படைந்த 10000 பற்களை பல ஆண்டுகளாக சேகரித்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றுசாதனை படைத்துள்ளார்.

மருத்துவர் ஜிப்ரீலிடம் பேசினோம்., “ பற்களை நான் சேகரித்தது விருதுகளை எதிர்பார்த்து அல்ல. சிறு வயதிலிருந்தே எனக்கு சேமிக்கும் பழக்கம் உண்டு. எந்த பொருட்களையும் எளிதில் தூக்கி எறியமாட்டேன். பின்னாளில் பல் மருத்துவராக ஆனபின்பு மருத்துவத் தொழிலில் பணம் சம்பாதிப்பது மட்டும் தான் நம் நோக்கமா வேறு ஏதேனும் மக்களுக்காக செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

பல் மருத்துவமனை மாணவர்களின் ஆய்விற்கும், பற்கள் பற்றிய விழிப்புணர்வின்றி அறியாமையினால் பற்களை முறையாக பராமரிக்காமல் போனால் இத்தகைய பாதிப்புகள்தான் ஏற்படும் என்பதை எடுத்துக்கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தேன். நோயாளிகளிடம் இருந்து கண்டிப்பாக இதனை பிடுங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த பற்களை பிடுங்கியபின் அவற்றை வீசி எறிந்திடாமல் சேகரித்தேன். ஒவ்வொரு பற்களுக்கும் அதன் விபரங்களை பதிவுசெய்தேன். யாருடைய பல், எப்போது பிடுங்கப்பட்டது, என்ன நோய் தாக்குதளினால் பிடுங்கப்பட்டது போன்ற முழு விபரமும் இருக்கும் படி சேகரித்தேன்.

என் சேகரிப்பை பார்த்து என் மகள்தான் ஒருநாள் இதை நீங்கள் லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாமே என்றாள். பொதுவாக பல் மருத்துவர்கள் அவசியம் ஏற்படும் போது மட்டுமே பற்களை பிடுங்குவார்கள். ஆனால் யாரும் அந்த பற்களை சுத்திகரித்து சேகரிக்கமாட்டார்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். இங்கு எனக்கு தூக்கிப்போடும் பற்களே சாதனைக்கு உதவிசெய்துள்ளது” என்றார்.

'பற்கள்தானே என்று நீங்கள் உங்கள் பற்கள் பராமரிப்பில் மெத்தனம் காட்டினால் அது உங்கள் இதயப்பிரச்னை சிறுநீரகப்பிரச்னைவரை கூட கொண்டுசென்றுவிடும்' என்று பற்களின் பாதுகாப்பு குறித்து பேசிய டாக்டர் ஜிப்ரீல், “ மனிதனின் மொத்தம் 32 நிலைப்பற்கள். சிறுவயதில் தோன்றி வாழ்நாள் முழுவதும் இவை நிலைத்திருக்கும் தாடையில் மையக்கோட்டை நீட்டி இருக்கும் பற்கள் வெட்டும் பற்கள். தொடர்ந்து பக்கவாட்டில் கோரைப்பற்கள், முன்கடைவாய்ப்பற்கள், பின்கடவாய்ப்பற்கள் என நான்கு வகை உள்ளது. தாங்க முடியாத வலி, வீக்கம், உண்ண முடியாமை, விழுங்க முடியாமை நாக்கு நீட்ட முடியாமை, ஈறுகளில் இரத்தக்கசிவு போன்ற தொல்லைகள் வாயிலும், பற்களிலும் தோன்றும். இதனால் ஏற்படும் நச்சுப்பொருட்கள் உடலெங்கும் பரவி இதயம், சிறுநீரகம், இரைப்பை மூட்டுகள், தொண்டை முதலிய உறுப்புகளை பாதிப்படையச் செய்யும்.

பற்களில் படியும் பற்படலத்தை அகற்ற வேண்டும். நாளடைவில் அது பற்கரையாய் மாறி, உறுத்தலினால் சிவந்து வீங்கி இரத்தம் கசியும் நிலை உருவாகும். ஈறுகள் காயமடையும் போதும் பிறபொருள்கள் உறுத்தும்போது, நுண்ணுயிர்க் கிருமிகள் ஈறுகளை தாக்கும்போது ஈறுகள் தடித்து புண்ணாகி இரத்தம் கசியும். இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். பற்களைப் பெருமளவில் தாக்கும் நோய் பற்சொத்தை நோயாகும். இது ஒரு சிதைவு நோய், பற்களை நாள்தோறும் சரிவரத் துலக்காத போது உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைப் பொருட்களும் , சாக்லேட் ஐஸ்கீரிம், பிஸ்கட், மிட்டாய் போன்ற திண்பண்டங்கள் பற்களின் இடைவெளிகளிலும், பற்களின் குழிகளிலும் தங்குகின்றன. அவைகளை உமிழ்நீர் தாக்குகின்றன.

இந்த அமிலம் பற்களில் தங்கி பற்சிப்பியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. இச்சிதைவே நாளடைவில் பற்சொத்தையாக வடிவெடுக்கிறது. குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது தவறாமல் தக்க பல் மருத்துவரிடம் பற்களை பரிசோதனை செய்திட வேண்டும் அப்போது தான் பற்களை பாதுகாக்க முடியும்” என்கிறார்.

பல்நலம் குறித்த விழிப்புணர்விற்காக இவர் மேற்கொண்ட இந்த சேகரிப்பு இந்திய சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருப்பதோடு தற்போது கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- சே.சின்னதுரை
படங்கள்;
ஈ.ஜெ.நந்தகுமார் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close