Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் இயற்கை உணவகங்கள்!

சென்னை வாசிகள் தங்கள் விருப்பமானவர்களோடு பொழுதை கழிக்க வேண்டுமானல் முதலில் தேர்ந்தெடுப்பது மெரினா கடற்கரையைதான். காலை வேளையில் உடற் பயிற்சி செய்பவர்கள், நடை பயிற்சி செய்பவர்கள்,  விளையாடுபவர்கள் என பலரின் ஆரோக்கியத்திலும் மெரினாவுக்கு பங்கு உண்டு.

மெரினாவில் நம் பாரம்பர்ய உணவுகளை விற்கும் உணவகத்தை தொடங்கி, அதன் செயல்பாட்டை இரட்டிப்பாக ஆக்கியுள்ளார் ‘தாய் வழி உணவகம்’ மகாலிங்கம்.

காலை வேளையில் விவேகானந்தர் மண்டபம் எதிர்புறம் உள்ள இவரது உணவகத்தில் சந்தித்தோம்.

பொதுவாக கடற்கரையில் எல்லாரும் பஜ்ஜி கடை, பாஸ்ட் ஃபுட் என ஆரம்பிக்கும் போது நீங்கள் இது போல் இயற்கை உணவகத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? என்ற கேள்வியோடு பேச துவங்கினோம்,

“நானும் இதே போல் செட்டிநாடு மற்றும் ஃபாஸ்ட் புட் எல்லாம்தான் முதல் விற்பனை செய்து கொண்டு இருந்தேன். பின்பு ஆன்மிகம் மேல் ஈடுபாடு அதிகமானது. அதற்கு பிறகும் இதே போல் ஆரோக்கியமற்ற உணவை விக்கிறதுக்கு மனசு வரல. அதான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இந்த உணவகத்தை தொடங்கினோம்.  ஆரம்ப்த்தில முதியவர்கள் மட்டும்தான் சாப்பிட வந்தாங்க. மத்தவங்க எல்லாரும் கேலியாக பாத்துட்டு, கலாய்ச்சுட்டு சிரிச்சுட்டு போனங்க. இதே பீச்ல கடை வெச்சு இருக்குற மத்தவங்க எல்லாம் அச்சுறுத்த கூட செஞ்சாங்க. இருந்தாலும் நாங்க எங்க கொள்கையில இருந்து கீழ இறங்க கூடாதுனு கண்டிப்பாக இருந்தோம். அதுக்கு இப்போ நல்ல பலன் கிடைச்சுருக்கு” என பேசிக் கொண்ட இருக்கும்பொழுது கடையில் கூட்டம் அதிகரிக்க,  ‘ஒரு நிமிஷம்’ என சொல்லி விட்டு நகர்ந்தார்.

வேட்டி கட்டிய முதியவர்கள் முதல் ‘ஷார்ட்ஸ்’ அணிந்து இருக்கும் இளசுகள் வரை ரசித்து புசித்துக் கொண்டு இருந்தனர்.


நாமும் அவர் கொடுத்த பருத்தி பாலை பருகிய படி பேச்சை தொடர செய்தோம்.

“இந்த கடை ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆச்சு. முன்ன விட இது போன்ற இயற்கை உணவுகளோட முக்கியத்துவம் மக்களுக்கு தெரிஞ்சு இருக்கு. சுத்தியுள்ள எல்லாம் விஷமா மாறிட்டு வரும் இந்த வேளையில், இதுபோல் இயற்கை உணவுகள் கொஞ்சமாவது அதன் நஞ்சு தன்மையை குறைக்கும்னு மக்கள் நம்புறாங்க. அதேபோல் நாங்க பயன்படுத்துற எல்லா மூல பொருட்களும் இயற்கை முறையில் அறுவடை செய்யறதுதான். குதிரை வாலி, தூதுவளை சூப், பருத்தி பால், தேனில் ஊறப்போட்ட அத்திப்பழம், நெல்லிக்காய், மண தக்காளி என கிட்டதட்ட 20-க்கும் மேற்பட்ட உணவுகளை இரவு 2 மணி முதலே தயார் செய்து காலை 5 மணிக்கு எல்லாம் எடுத்துட்டு வந்துருவோம். காலை வேளைதான் இந்த உணவுகளை எல்லாம் உண்ண சரியான நேரம். அதே சமயம் விளையாடுறவங்களுக்கு தெம்பு சேர்க்கும் வகையில் இருக்கும்” என்ற படி மீண்டும் வியாபாரத்தை கவனிக்க கிளம்பினார்.

வியாபாரத்தையும் தாண்டி,  இந்த உணவுகளை சமைக்க குறிப்புகள் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்புகளுடன் மூல பொருட்களையும் சேர்த்து தருகிறார். இதற்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக தற்போது  சென்னையின் மேலும் சில இடங்களில் இத்தகைய கடைகளை தொடங்கி உள்ளார் மகாலிங்கம்.

இவரைப்போன்றே மேலும் பலரும் மக்கள் அதிகமாக கூடும்  பூங்காக்கள், நடைபயிற்சி மைதானங்கள் போன்றவற்றில் இத்தகைய இயற்கை உணவகங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தொலைந்த நம் பாரம்பர்யத்தை மீட்டு எடுக்க, இதுபோன்ற கடைகள் ஏராளமாக முளைக்க வேண்டும்.

சந்திப்பு: பி.நிர்மல்
படங்கள்: மா.பி. சித்தார்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement