சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 4 உணவகங்கள்! | 4 Restaurants You Shouldn't Miss in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (07/04/2016)

கடைசி தொடர்பு:12:01 (09/05/2017)

சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 4 உணவகங்கள்!

கோழி இட்லி

அ.தி.மு.க பிரமுகர்களுக்கு நன்றாக தெரிந்த கடை இது. லாயிட்ஸ் ரோட்டில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கிறது இந்த கடை. இட்லிதான் இங்கே ஸ்பெஷல். ஆனால், இட்லிக்கு சட்னி கிடையாது. நல்ல சுவையான காரமான கோழிக்குழம்பு கொடுக்கிறார்கள். கூடவே கோழி கொத்துக்கறி. மூன்று இட்லியுடன் ஒரு கப் சிக்கன் குழம்பு வித் ஒரு சிக்கன் பீஸ் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இட்லி கேட்டதும் உடனுக்குடன் எலக்ட்ரிக் குக்கரில் போட்டு கொடுப்பதால் எந்த நேரத்தில் சென்றாலும் சுவையான இட்லி உடனே கிடைக்கும்.

 முகவரி - 155, அவ்வை சண்முகம் சாலை, அதிமுக அலுவலகம் அருகில், ராயப்பேட்டை, சென்னை - 14

தட்டுவடை செட்டுகடை

சேலத்தில் ரொம்பவே பிரபலமானது தட்டுவடை. அதை சென்னையில் விற்கிறார்கள். ஒரிஜினல் அளவுக்கு இல்லையென்றாலும் நிச்சயம் புதிய சுவை விரும்பிகள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கலாம். தட்டையான வடையோடு சில மசாலா ஐட்டங்கள் சேர்த்து சான்ட்விச் போல கொடுக்கிறார்கள். அதிலேயே பலவித வெரைட்டிகளும் கிடைக்கிறது. மாங்கசெட்டு, தக்காளி செட்டு, ஆனியன் செட்டு என எல்லாமே நாவுக்கு நல்ல வேட்டையாக இருக்கும். கூடவே குடிக்க கோலிசோடாவும் கொடுக்கிறார்கள். ஒரு ப்ளேட் ரூ.30 முதல் ரூ.50 வரைதான் என்பதால் பாக்கெட்டும் பழுக்காது.

முகவரி - தட்டுவடை செட்டுகடை, கடை எண் 23, க்ராசெட்டேரியா, டி.ஏ.வி ஆண்கள் பள்ளிக்கு அடுத்து, லாயிட்ஸ் சாலை, கோபாலபுரம், சென்னை.

கண்ணப்பா பாஸ்ட்ஃபுட் இட்லி

நெய்யில் பொறித்த இட்லிக்கு இந்த கடை ரொம்ப ஃபேமஸ். எந்நேரமும் கூட்டம் அம்முகிற ஒரு சின்ன கடை. சூடான இட்லியின் மீது நெய் ஊற்றி அதில் காரப்பொடி போட்டு வித்தியாசமாக கொடுக்கிறார்கள். கார இட்லிக்கு தருகிற தேங்காய் சட்னியும் நன்றாகவே இருக்கிறது. கூடவே இங்கே பன்னீர் தோசையும் நிச்சயம் முயற்சி செய்யலாம். விலையும் அதிகம் கிடையாது என்பதால் வயிறார சாப்பிடலாம். கடை மிகச்சிறியது என்பதால் கொஞ்சம் காத்திருந்து சாப்பிட வேண்டியிருக்கும்.

முகவரி - கண்ணப்பா பாஸ்ட்புட் - 4/2, ஒர்ம்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை - 10

 

 

சீனாபாய் இட்லி ஊத்தப்பம்

சவுக்கார் பேட்டையில் இருக்கிறது இந்த இட்லிகடை. சீனாபாய் என்றதும் ஏதோ சீனாக்காரர் கடை என்று நினைத்துவிடவேண்டாம். சீனுவை சவுக்கார்பேட்டை இந்திவாலாக்கல் பாய் ஆக்கியதால் சீனாபாய் ஆனதால் வந்த பெயர். இந்தக்கடை இட்லிக்கு சௌகார்பேட்டையே அடிமை! ஒரே தட்டில் பன்னிரெண்டு குட்டி இட்லிகள் வைத்து கொடுக்கிறார்கள். அதன்மீது நெய் ஊற்றி பொடி போட்டு மணக்க மணக்க பரிமாறுகிறார்கள். முதல் இட்லிக்கும் பன்னிரெண்டாவது இட்லிக்கும் நடுவில் சாப்பிடும்போது நடந்தது தெரியாத அளவுக்கு அபார ருசி.

முகவரி - என்.எஸ்.சி போஸ் ரோட்டில் இறங்கி சீனாபாய் இட்லிக்கடை கேட்டால் யாருமே சொல்லிவிடுவார்கள்.

- வினோ


டிரெண்டிங் @ விகடன்