Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு - இதுதான் பேலியோ டயட் !

இப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ’ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி வருகிறது.

ஒவ்வொருவரும், ’நான் இன்று இந்த உணவை சாப்பிட்டேன், நான் இத்தனை கிலோ எடை குறைந்துள்ளேன், பேலியோவுக்கு மாறிய பிறகு எனக்கு இருந்த பி.பி. போய்விட்டது’ என அதில் தங்கள் அனுபவங்களை உற்சாகமாகப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ’பேலியோவுக்கு முன், பேலியோவுக்குப் பின்’ என அவர்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால், ஏதோ அதிசயம் போல இருக்கிறது.

உடல் எடை மட்டுமல்ல, அவர்களின் தோற்றப் பொலிவு பெற்று, வயதே குறைந்ததுபோல் இருக்கிறார்கள். No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை. அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது. இது இரண்டையும் தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது? ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’ ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா?

பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்லிதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்? ஏனென்றால் நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம்.இந்தக் கொழுப்பு சேரக் காரணம், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள். நாம் கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும்போது, நம் உடம்பு அதை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, உடம்பில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம்தான் எடை குறைகிறது. ‘ஆனால் நாம் நேரடியாக கொழுப்பையே சாப்பிடுகிறோமே... அது என்ன ஆகும்?’ என்றால், அது கொழுப்பாக சேராது. அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும். முள்ளை முள்ளால் எடுக்கும் அதே டெக்னிக்.

உண்மையில் பேலியோ டயட் என்பது நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. இது ஆதி மனிதனின் உணவுமுறை. விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும். தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் வலுவடையும்.

இந்தமுறையில் தன் உடம்பைக் குறைத்த பிரபல இணையப் பதிவரும், திரைப்பட இயக்குநருமான கேபிள் சங்கரிடம் பேசினோம்.

‘’நான் கடந்த ஒரு வருஷமா பேலியோவை ஃபாலோ பண்றேன். 2 மாதத்தில் 91 கிலோவில் இருந்து 80 கிலோவாக எடை குறைந்தேன். எனக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அதுவும் கண்ட்ரோலுக்கு வந்தது. பி.பி. அளவு நார்மல் ஆனது. இப்போது சுகர் மாத்திரையை முழுமையாக விட்டுவிட்டேன். எனக்கு சுகர் பிரச்னையே இப்போது இல்லை. காலையில் கார்ப் இல்லாத காய்கறி பொரியல், பகலில் பன்னீர், பன்னீர் டிக்கா, சீஸ், சிக்கன் சூப், மட்டன் சாப்ஸ், இரவில் முட்டை, ஆஃப் ஆயில், பன்னீர், மறுபடியும் காய்கறி பொறியல் இவைதான் என்னுடைய ஒரு நாள் டயட்.

வீட்டில் இருந்து செய்து சாப்பிடுவர்களுக்கு இது பிரச்னை இல்லை. என்னை மாதிரி வெளியில் சுற்றுபவர்களுக்கு இது ஒரு பிரச்னைதான். ஒரு ஹோட்டலுக்கு சென்று டேபிளில் அமர்ந்தால் சர்வர் வருவார். அவரிடம், ‘நாலு ஆம்லேட்’ என்றால் ஒரு மாதிரி பார்ப்பார். அதை முடித்து, ‘ரெண்டு அவிச்ச முட்டை’ என்றால் இன்னும் ஒரு மாதிரிப் பார்ப்பார். பொறியல்தான் இன்றைய இரவு உணவு என்று முடிவு செய்துவிட்டால் நேராக சரவண பவன் போவேன். அங்கே கால் கிலோ பொறியல் 30 ரூபாய்க்கு பார்சல் தருவார்கள். அதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவேன். ஆரம்பத்தில் வித்தியாசமாகப் பார்த்தார்கள். இப்போது அவர்களே பழகிவிட்டார்கள். எனக்கும் ஒரு மாதிரி செட்டாகிவிட்டது.’’ என்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement