Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜயகாந்த் வரை... ஃபிட்டாக இருக்க என்ன செய்கிறார்கள்?

93 வயதிலும் கருணாநிதி எப்படி ஃபிட்டாக இருக்கிறார்? உடல்நிலை சரியில்லை என்று சொல்லப்பட்டாலும் ஜெயலலிதா எப்படி மேடைகளில் கம்பீரமாக பேசுகிறார்? விஜயகாந்த்  முதல் வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வரை  உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு என்ன செய்கிறார்கள்? தலைவர்களின் ஃபிட்னெஸ் ரகசியம் இதோ...

கருணாநிதி (தி.மு.க. தலைவர்):

தமிழக அரசியல் தலைவர்களிலேயே இன்னமும் ஃபிட்டான ஒரு தலைவர் என்றால் அது  கருணாநிதிதான். 45 வயதில் அவர் முதல்வராகும் வரை,  பெரிதாக நடைபயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்தது இல்லை. இருந்தும் அவரது உறுதியான உடல் அமைப்புக்கு காரணம், ஆரம்ப காலத்தில் அவரது மிகக் கடுமையான உழைப்பு. 45 வயதில் நடைபயிற்சி ஆரம்பித்த கருணாநிதி 30 ஆண்டு காலம் இடைவிடாமல் அதைத் தொடர்ந்தார். புகழ்பெற்ற யோகா ஆசிரியர் கிருஷ்ணமாச்சாரியாரிடம் யோகா கற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூச்சுப் பயிற்சி, 
 
 
சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசனங்களை செய்வார். அதனால் தான் இன்று வரை அவருக்கு சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ இல்லை. கருணாநிதியின் பற்கள் இந்த வயதிலும் உறுதியாக இருக்கின்றன. ஆனால், மூட்டு வலி தான் அவருக்கு எதிரி. 2006 காலகட்டத்தில் அவரது எடை கூடியது. இதனால், மூட்டுகள் உடம்பை தாங்கும் சக்தியை இழந்துவிட்டதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தார். நடப்பது குறைந்துவிட்டதால், வாரம் ஒருமுறை கை,கால்களுக்கு ஆயில் மசாஜ் செய்கிறார்கள். இப்போதும் தினமும் காலை ஒரு மணிநேரம் எளிய முறையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்கிறார்.  பயிற்சி முடிந்தவுடன் கொஞ்சம் ஏலக்காய் டீ அருந்துவார். காலை உணவாக 2 இட்லி எடுத்துக் கொள்கிறார்.  காலை 11 மணிக்கு எனர்ஜிக்காக கொஞ்சம் பிஸ்கெட்,ஒரு கிளாஸ்  ஜூஸ். மதியம் சிறிதளவு உணவில் நிச்சயம் கீரை இருக்கும். அடிக்கடி மால்டோவா, போன்விட்டா போன்ற பானங்கள் எடுத்துக் கொள்வார். எந்த சாதமாக இருந்தாலும் அதை மிக்ஸியில் போட்டு திரவமாக்கிச் சாப்பிடுவது கருணாநிதியின் ஃபிட் டயட்.

ஜெயலலிதா (அ.தி.மு.க. பொதுச் செயலாளர்):
 
சினிமாவில் இருக்கும்வரை உடற்பயிற்சி, யோகா மறக்காமல் செய்வார். அவரே செய்யாவிட்டாலும் அவரது அம்மா செய்யவைத்துவிடுவார். அதேபோல உணவு விஷயத்திலும் பக்கா டயட் பின்பற்றுவார். அரசியலுக்கு வந்த பிறகு பெரிய அளவில் உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனால், தொடர்ந்து நடைப்பயிற்சி செய்துவந்தார். சிறையில் இருந்தபோது கூட, மிகவும் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக உடற்பயிற்சி மேற்கொண்டாராம்.  இருந்தும் அதிக எடை போட்டுவிட்டதால், கொஞ்சம் சிரமப்பட்டார். அதன் விளைவாகத் தான், 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கொடநாடு பங்களா சென்று சிகிச்சை மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ததன் காரணமாக 10 கிலோ வரை எடை குறைத்துவிட்டுதான் பிரசாரத்துக்கே வந்தார். கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை.
 
இப்போது காலை உணவுக்கு  இடியாப்பமும், தேங்காய்ப் பாலும் தான் ஜெயலலிதாவின் ஃபேவரைட். சில நாட்களில் ஆப்பம் சாப்பிடுவார். கொஞ்சம் காய்கறிகளும் காலை உணவில் சேர்த்துக்கொள்கிறார். காலை 11 மணிக்கு பழங்கள் சாப்பிடுகிறார். சப்பாத்தி, தயிர் சாதம் இரவு உணவு. சர்க்கரை நோய், தைராய்ட், கால் வலி போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. கால்வலி அதிகம் இருப்பதால் நடைபயிற்சி பெரிய அளவில் இல்லை. வெஜிடபிள் சூப், எனர்ஜி ட்ரிங்க் ஆகியவற்றை அடிக்கடி குடிக்கிறார். கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது இவை எப்போதும் ஃப்ளாஸ்க்கில் பக்கத்திலேயே இருக்கும். சர்க்கரையின் அளவு கூடியிருப்பதால் விரும்பி சாப்பிட்டு வந்த சாக்லெட், ஸ்வீட்ஸ் கூட இப்போது எல்லாம் சாப்பிடுவதில்லை.  குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரையேப் பயன்படுத்துகிறார்.

ஸ்டாலின் (தி.மு.க. பொருளாளர்):

பள்ளி, கல்லூரி காலங்களில் ஹாக்கி, புட்பால் என்று விளையாடிக்கொண்டிருந்தவர், இப்போது அரசியல் தளத்தில் விளையாடி வருகிறார். தினமும் காலையில் 5.30 மணிக்கு எழுந்து, அடையாறு தியோசோபிக்கல் சொசைட்டியிலும், ஐ.ஐ.டி வளாகத்திலும் குறைந்தது 5 கி.மீ  நடைப்பயிற்சி செய்கிறார். எப்போது வெளியூர் போனாலும் அந்த ஊரில் இருக்கும் ஏதோ ஒரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.
 
 
காலையில் எழுந்ததும் மூன்று பேரீச்சை பழங்கள், நான்கு பாதாம் பருப்புகள் சாப்பிடுவது வழக்கம். வாக்கிங் முடிந்த பின் இளஞ்சூட்டில் தேநீர் எடுத்துக்கொள்வார். குளித்துமுடித்த பின் இட்லி, தோசை தான் எப்போதும் காலை உணவு. மதிய உணவாக விரும்பிச் சாப்பிடுவது மீன் குழம்பு, ரசம், தயிர். ஆனால், சாதம் குறைவாகவே சாப்பிடுவார். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, கண்டிப்பாக அரை மணி நேரம் தூக்கம் இருக்கும்.  இரவு பெரும்பாலும் சப்பாத்தி அல்லது தோசைதான். ஃப்ரை வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்த்துவிடுகிறார்.
 
அதேபோல காய்கறிகளில் பீட்ருட், முட்டைக்கோஸ் பொரியல், கீரை கண்டிப்பாக இடம்பெறும். மாதத்துக்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்துகொள்வார். சென்னையில் இருந்தால், ஹோட்டல் சோழாவில் இருந்து வீட்டுக்கே வந்து மசாஜ் செய்வார்கள்.

வைகோ (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்):
 
’காலையில் ஒரு மணி நேரம் நடக்கிறேன்’ என்று சொன்னால், ’ஆமா, இவர் பெரிய வைகோ' எனஉங்கள் நண்பர்கள் கிண்டல் செய்யலாம். ஆனால், அந்த வைகோ தினமும் என்ன செய்கிறார்? அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறார்.  பிறகு கொஞ்ச நேரம் மூச்சுப் பயிற்சி. அதன்பிறகு,  ஒரு கிரீன் டீ. காலை உணவாக இட்லி, எண்ணெய் இல்லாத கோதுமை உப்புமா, கோதுமை தோசை தான் வைகோவின் ஃபேவரைட். 11 மணிக்கு காய்கறி சூப், கொய்யா அல்லது வெள்ளரிப் பிஞ்சு சாப்பிடுவார். மாலை 4 மணிக்கு வேகவைத்த பயிர்கள், நிலக்கடலை, சுண்டல் இவற்றில் ஏதாவது ஒன்று சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்.
 
 
கடலை மிட்டாய் அடிக்கடி விரும்பி சாப்பிடுவார். சர்க்கரை நோய் இருப்பதால் இப்போது அதையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்.  இரவு சப்பாத்தி மட்டும். பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு கிரீன் டீ சாப்பிடுவார். மேடையில் தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு உணவு சாப்பிடுவது இல்லை. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் கதகதப்பான நீரைப் பயன்படுத்துகிறார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர்):
 

''நான் ஃபிட்னெஸுக்கு ஒரு சதவிகிதம்கூட தகுதியற்றவன். நடைப்பயிற்சி எதுவும் செய்வதில்லை. அதனால் என் மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறேன். நான் ருசிக்காகச் சாப்பிடுகிறவன் அல்ல. பசிக்காகச் சாப்பிடக்கூடியவன்.'' என்று உண்மை விளம்பியாக இருக்கிறார் அண்ணன் ஈ.வி.கே.எஸ். ஆனால், எப்போதாவது டென்னிஸ் விளையாடுவாராம்.

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்):
 

இரவு 2 மணிக்குப் படுத்து, காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அலுவலகத்தில் உள்ள மாடியில் உடற்பயிற்சி செய்வார். வெளியூர் செல்லும்போது நடைப்பயிற்சி செய்வார். அசைவப் பிரியராக இருந்தவர், ஈஷா யோகா மையம் சென்று வந்த பிறகு கடந்த 15 வருடங்களாக அசைவம் சாப்பிடுவதில்லை. முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்கிறார். காலையில் டிபனுடன் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை எடுத்துக்கொள்கிறார். மதியம் சாப்பாட்டுடன் கீரை எடுத்துக்கொள்கிறார். இரவு தோசை, ஃபுல்கா போன்ற உணவு வகைகள் மட்டுமே இந்த போராட்ட வீரனின் டயட்.

தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க. மாநில தலைவர்):
 

காலை 5 மணிக்கு எல்லாம்  எழுந்துவிடுகிறார் டாக்டர் தமிழிசை. அரைமணி நேரம் சைக்கிளிங். பிறகு அரை மணி நேரம் யோகா. தினமும் காலையிலும், மாலையிலும் இஞ்சி டீ குடிப்பார். காலை  2 இட்லி, ஆயில் இல்லாமல் ஒரு தோசை சாப்பிடுவார். மதிய உணவை பிற்பகல் 2 மணிக்குள் சாப்பிட்டு விடுவார். மதிய உணவாக கீரை சாதம், ஒரு ஆப்பிள், ஒரு கிளாஸ் மோர் எடுத்துக்கொள்வார். அதிகமாக பயணங்களிலேயே இருப்பதால் பெரும்பாலும் காரிலேயே சாப்பாட்டை முடித்துவிடுவார். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக உணவு வீட்டில் இருந்து மட்டுமே வரும். இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிடுவார். எப்போதும் வெந்நீரையே பயன்படுத்துவார். அசைவ உணவுகளில் மீன் மட்டும் எடுத்துக்கொள்வார் டாக்டர் தமிழிசை.

அன்புமணி ராமதாஸ் (பா.ம.க):
 

காலை எழுந்ததும் ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வார். வெளிநாடுகளுக்குச் சென்றால் சாகச விளையாட்டுகள், கடலில் மீன் பிடிக்கச் செல்வது மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. எங்கு எப்போது மாரத்தான் நடந்தாலும் கலந்துகொள்வார். வீட்டில் தினமும் இரண்டு மணி நேரம் பேட்மின்டன் விளையாடுவார். ''வியர்வை அதிகம் வெளியேறுவதால் கை, கால், உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. மனசு எப்போதும் புத்துணர்ச்சியா இருக்கிறது’’ என்கிறார் அன்புமணி. தினமும் சாண்ட்விச்தான் அவரது காலை உணவு. ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ஃபிளான் பானங்கள் அருந்துவார். 11 மணிக்கு ஒரு டம்ளர் மோர் குடிப்பார். மதிய உணவில் சாதம், பருப்பு, நெய், கீரை, காய்கறி இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் அசைவம். நாட்டுக்கோழி குழம்பு, மீன் ஃப்ரை சாப்பிடுவார். தோல் பளபளப்புக்காக பழங்கள், ஜூஸ் எடுத்துக்கொள்வார்.

 

ராமதாஸ் (பா.ம.க. தலைவர்):
 

காலை 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வார். பிறகு அரை மணி நேரம் யோகா செய்வார். வெளியூர்களுக்குச் சென்றாலும் 1 மணி நேரம் யோகா செய்வார். காலையில் கொஞ்சமாக டீ. காலை உணவில் சிறுதானிய உணவுகள் மட்டும் இருக்கும். மதியம் 12 மணிக்கு ஒரு தோசை. மதியம் 1.30-க்கு 1 கப் சாதம், 1 கப் கீரை, 2 கப் காய்கறி எடுத்துக்கொள்வார். இரவு கோதுமை கலந்த சப்பாத்தி, தோசை, உப்புமா போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வார்.  ராமதாஸ் சாப்பிடும் எந்த சாப்பாட்டிலும் உப்பு, காரம், புளிப்பு எந்த சுவையும் இருக்காது என்பது ஹைலைட்.

சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி):
 
 
இரவு நெடுநேரம் கழித்து தூங்கினாலும் காலை 7  மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார் சீமான். காலையில் குறைந்தது 5 கி.மீ நடைப்பயிற்சி செய்கிறார். பிறகு, வீட்டிலேயே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வார். காபி, டீ பழக்கத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே விட்டுவிட்டதால், காலையில் எழுந்து தண்ணீர் மட்டுமே குடிக்கிறார். காலை உணவாக மாப்பிள்ளை சம்பா அரிசி உணவு. அதன்பிறகு கருப்பட்டி, சுக்கு, மல்லி நீர் குடித்துவிட்டு காலை வேலைகளைத் தொடர்கிறார். மதியம் சரியான ஒன்றரை மணியளவில், குதிரைவாலி அரிசி, கம்பு, கேழ்வரகு சாதம், ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி உணவுகளை எடுத்துக் கொள்கிறார். 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்துக்கொள்கிறார். மாலை வேளையில் வீட்டிலேயே தயார் செய்யப்படும் சூப், கம்மங்கூழ் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்கிறார்.

ஜி.ராமகிருஷ்ணன் (சி.பி.எம்., மாநில தலைவர்):
 

இரவு எவ்வளவு லேட்டாக உறங்கினாலும் காலையில் 6 மணிக்கு எழுந்துவிடுவார். சென்னையில் இருந்தாலும் வெளியூர்களில் இருந்தாலும் சுமார் 45 நிமிடம்  வாக்கிங் செல்வார். பிறகு ஒரு கிரீன் டீ. இட்லி, தோசை போன்றவைதான் காலை உணவு.11 மணிக்கு சாதாரண டீ. மதியம் சைவ உணவு மட்டுமே. வீட்டில் மட்டும் என்றாவது ஒருநாள் அசைவ உணவு சாப்பிடுவார்.வெளியூர்களுக்குச் சென்றால் தோழர்களிடம் சொல்லி துளசி, கற்பூரவள்ளி இலைகளைக்கொண்டு வரச் சொல்லி சாப்பிடுவார். முதுகுவலி வரும்போது மட்டும் பிஸியோதெரப்பி டாக்டரின் ஆலோசனைப்படி சின்னச்சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வார்.

முத்தரசன் (சி.பி.ஐ., மாநிலத் தலைவர்):
 
காலையில் நேரம் கிடைத்தால் கை, கால்களை வேகமாக அசைத்து வியர்வை வரும்வரை வாக்கிங் செல்வார். இரவு லேட்டாக படுத்தால் காலையில் நோ வாக்கிங். நடைபயிற்சி  முடித்து விட்டு சாதாரண டீ. பிறகு 3 அல்லது 4 இட்லி. சைவம், அசைவம் என்று பார்க்காமல் மதிய உணவு. அதேபோல இரவு 3 இட்லி. இடையிடையே டீ சாப்பிடுவார். டீயும், இட்லியும் இவரது விருப்ப உணவு.
ஜி.கே. வாசன் (தலைவர், த.மா.கா.):
 
 

 

டெல்லியில் இருந்தபோது மட்டும் காலையில் உடற்பயிற்சி செய்வாராம். சென்னையில் செய்வது இல்லை. காரணம், இரவு தூங்க 1 அல்லது 2 மணி ஆகிவிடுமாம். காலை 6 மணிக்கு எழுந்து சின்னதாக ஒரு நடைபயிற்சி. பின் 7 மணியில் இருந்து 10 மணிவரை தொண்டர்களை சந்திக்கிறார். டயட் எதுவும் பின்பற்றுவது இல்லை. ஏன் என்று கேட்டால், ' தொண்டர்கள் வீட்டுக்கு போறப்ப, அது சாப்பிடமாட்டேன், இத சாப்பிடமாட்டேன்னு சொன்னா நல்லா இருக்காதுல்ல... அவங்க மனசு கஷ்டப்படும்' என்கிறார். ஆனால், அரிசி சாதத்தை மட்டும் குறைத்து இருக்கிறார். பிரியாணி பிரியர். எல்லாவிதமான பிரியாணியையும் விரும்பி சாப்பிடுவாராம். அதேபோல, அசைவ உணவுகளையும் ஒரு கை பார்த்துவிடுவார்.

கடைசியா வந்தாலும், கண்டிப்பாக வந்தே ஆக வேண்டிய தலைவர் நம்ம கேப்டன் !


விஜயகாந்த் (தே.மு.தி.க தலைவர் ) :
 

 


விஜயகாந்த் எப்போதுமே மிஸ்டர் ஸ்மார்ட். 30 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ, கிட்டத்தட்ட அதே தோற்றத்தில்தான் இப்போதும் இருக்கிறார்.பெரிதாக எந்த உடற்பயிற்சியும் செய்வது இல்லை. வீட்டில் இருக்கும் ட்ரட்மில்லில் முன்பு மகன்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வாராம். இப்போது அதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் கொடுத்த கர்லா கட்டைக்கு சத்யராஜ் மட்டும் பிரபலம் அல்ல. விஜயகாந்துக்கும் எம்.ஜி.ஆர்., ஒரு கர்லா கட்டை கொடுத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அதை வைத்துதான் உடற்பயிற்சி செய்தாராம். அசைவப்பிரியராக இருந்தவர் இப்போது உடல்நிலை சரி இல்லாததால், அதிகம் சாப்பிடுவதில்லை. சினிமாவில் நடிப்பதைக் குறைத்தபோதே, சாப்பாட்டையும் குறைத்துவிட்டாராம் கேப்டன். கடந்த 5 வருடமாக உணவுகளில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறாராம். அவரது தாத்தா,அப்பாவை போலவே இவர் கண்ணில் இருந்து தொடர்ந்து நீர் வருவதால் எப்போதும் கூலிங்-கிளாஸ் அணிந்துதான் வெளியே செல்கிறார் கேப்டன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement