Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் முறை ஜிம் போறீங்களா...? இந்த 9 டிப்ஸை படிங்க!

ஆர்வக் கோளாறில் ஜிம் சேர்ந்து, ஒரு வாரம் உற்சாகமாக சென்று, அத்தோடு ஜிம்முக்கு டுக்கா விடுபவர்கள்தான் அனேகம் பேர். உண்மையில் முதல் முறை ஜிம் செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன? அவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? சென்னையைச் சேர்ந்த பர்சனல் ஃபிட்னெஸ் ட்ரெயினர் ராஜேஷ் தரும் டிப்ஸ் இதோ...

நோக்கம் முக்கியம் பாஸ்

ஆர்வம் இருப்பதால்தான் ஜிம்மில் சேர்கிறீர்கள். அதனால் அது ஓ.கே. ஆனால் ஆர்வக் கோளாறில் நோக்கம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஜிம்மில் சேரக்கூடாது. நீங்கள் எதற்காக ஜிம் போக வேண்டும்? இந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ‘ஃப்ரெண்டு போறான்; நானும் போறேன்’ என்ற பதில் எல்லாம் செல்லாது. 1. நான் பாடி பில்டிங் செய்ய வேண்டும். 2. உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். 3. முதுகுவலி இருக்கிறது. அதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்... இப்படி நீங்கள் ஜிம் செல்வதற்கு ஒரு குறிப்பான நோக்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து செல்வீர்கள்.

உண்மையை சொல்லுங்க ப்ரோ...
 
 
டாக்டரிடம் மட்டும் அல்ல... ஜிம் ட்ரெயினரிடமும் உங்கள் உடல்நிலையைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ’அதை எல்லாம் இவர்கிட்ட ஏன் சொல்லனும்?’ என்றோ, ‘இதை எல்லாம் போய் சொல்லனுமா?’ என்றோ நினைக்க வேண்டாம். முட்டி வலியோ, முதுகு வலியோ, சர்க்கரையோ, பி.பி-யோ, சைனஸோ, டயாபடிஸோ... எதுவாக இருந்தாலும் எனக்கு இன்னப் பிரச்னை என்பதை சொல்லுங்கள். அப்படி சொன்னால்தான் உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை அவர் முடிவு செய்ய முடியும்.

பழசை விடுங்க... ஃப்ரெஷ்ஷா வாங்க

இங்கிலீஷ் பேச ஆசைப்படுபவர்கள், தன் வாழ்நாளில் குறைந்தது 5 ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ்களுக்குப் போயிருப்பார்கள். அதுபோல தன் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்பும் பலர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஜிம்களுக்கு நிச்சயம் செல்வார்கள். ஒவ்வொரு ஜிம்மிலும் ஒவ்வொரு கருவியை இயக்கியிருப்பார்கள். அந்த அனுபவத்தில் ஒரு ஜிம்மில் உள்ளக் கருவிகள் குறித்து ஒரு மேலோட்டமான அறிவு அவர்களுக்கு இருக்கும். இதனால் புதிதாக சேரும் ஒரு ஜிம்மில் பழகிய வீட்டைப் போல எல்லா கருவிகளையும் இஷ்டத்துக்கு இழுத்து விளையாடுவார்கள். இது ஆபத்தானது. நீங்கள் ஒரு ஜிம்மிக்குச் செல்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் முற்றிலும் புதிய நபர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடம்பையும், மனதையும் ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ளுங்கள். ஜீரோவில் இருந்து தொடங்குங்கள். ஏனென்றால் ஆண்ட்ராய்ட் போன் அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பதைப் போல ஜிம்  வொர்க்-அவுட்களும் ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன.ஸ்டெப் பை ஸ்டெப் முக்கியம்

ஜிம்மில் சேர்ந்து ஒரே மாதத்தில் அடித்துத் தூக்க வேண்டும் என்பது பலரது கனவு. அதனால் day 1-ல் இருந்து வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்வார்கள். மாஸ்டர் ‘10 கிலோ தூக்கு’ என்றால் இவர்கள் 15 கிலோவில் இருந்து ஆரம்பிப்பார்கள். உங்க ஆர்வக் கோளாறை ஓரமா வெச்சுட்டு ஸ்டெப் பை ஸ்டெப்பா போங்க. வருடக் கணக்கில் எந்த வேலையும் கொடுக்காமல் உடம்பை சுகவாசியாக வைத்திருந்துவிட்டு, திடீரென ஹெவியாக வேலைக் கொடுத்தால் அது பாவம், என்னத்துக்கு ஆகும்?

வார்ம் - அப் அவசியம்


நீங்கள் ஜிம்மிலேயே கதியாகக் கிடக்கும் அப்பாடக்கராக இருக்கலாம். அதற்காக நேரடியாக ஹீரோ கேரக்டரில்தான் நடிப்பேன் என அடம் பிடிக்கக் கூடாது. வொர்க்-அவுட் செய்வதற்கு முன்பு உடல் தசைகளை தயார்ப்படுத்துவது அவசியம். அதற்கு வார்ம்-அப் முக்கியம். அதை எக்காரணம் கொண்டும் ஸ்கிப் செய்யக் கூடாது. ’நாலு மாசத்துக்குப் பிறகும் வார்ம்-அப் செய்யச் சொல்லி இந்த மாஸ்டர் நம்மளை சின்னப் பிள்ளையாவே ட்ரீட் பண்றாரே’ என  நினைக்காதீர்கள். அவர் உங்கள் நன்மைக்காகவே சொல்கிறார்.

அளவா தண்ணீர் குடிங்க...

வொர்க்-அவுட் செய்யும்போது அதிகமாக வியர்வை வெளியேறும். தாகம் எடுக்கும். அதற்காக தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து கடகடவென குடித்துவிடக் கூடாது. கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து குடிக்க வேண்டும். இதற்காகவே இப்போது sipper bottle-கள் வந்துவிட்டன. பாட்டில் நீரை அப்படியே வாயில் கவிழ்த்து மொத்தமாகக் குடிக்கும்போது, நீங்கள் ஏற்கெனவே மூச்சிரைத்துக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.வெறும் வயிற்றுக்கு நோ..!

ஜிம்முக்கு செல்லும்போது வீட் ப்ரெட், வாழைப்பழம் என மாஸ்டர் பரிந்துரைக்கும் ஏதோ ஒரு உணவை சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். வெறும் வயிற்றில் வொர்க்-அவுட் செய்தால் வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரும். மேலும் விரைவில் சோர்வடைந்துவிடுவீர்கள்.

காத்திருத்தல் நலம்


ஜிம் சேர்ந்த ஒரே மாதத்தில் உடல் தசைகள் முறுக்கேற வேண்டும் என எதிர்பார்ப்பது நம் இளைஞர்களின் உளவியல். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமே இல்லை. ஒரு மாதம் தொடர்ந்து ஜிம் சென்றாலும், கண்ணால் பார்க்க ஒரு மாற்றமும் தெரியாது. ஆனால் உடம்பின் உள்ளே தசைகள் துடிப்புடன்  செயல்பட தொடங்கியிருக்கும். ஆண்டுக் கணக்கில் சோம்பேறி கழுதைகளாக இருந்த உங்கள் உடல் தசைகள் ஆக்டிவேட் ஆகவே ஒரு மாதம் தேவை. அதன்பிறகுதான், ‘என்னப்பா, ஜிம்மிக்கு எல்லாம் போற போல’ என மற்றவர்கள் சொல்லும்படியான தோற்றம் வரும். எனவே பொறுமையாக காத்திருத்தல் முக்கியம்.

வலி பொறுத்தால் வெற்றி நிச்சயம்


திடீரென ஜிம் செல்லும்போது, அது வெறும் வார்ம்-அப் பயிற்சி என்றால் கூட உடம்பு பயங்கரமாக வலிக்கும். முதல் மூன்று நாளைக்கு கொடுமையாக வலிக்கும். மாடிப்படி ஏறினால் கூட கெண்டக்கால் சதை இழுத்துக்கொள்ளும். உடனே அடுத்த ஒரு வாரத்துக்கு ரெஸ்ட் எடுப்பார்கள். மறுபடியும் ஜிம் சென்றால் திரும்பவும் மூன்று நாளைக்கு வலி பின்னி எடுக்கும். அதனால் இந்த வலியை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான்கைந்து நாள் சென்றுவிட்டால் வலியும் ஓடோடிவிடும். அதை செய்யாமல் இப்படி ரெஸ்ட் ரெடுத்து, ரெஸ்ட் எடுத்து ஜிம் போனால் அதனால் ஒரு பலனும் இல்லை.

வலி பொறுப்போம்... வலிமை பெறுவோம்...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement