நீங்கள் ஏன் யோகா செய்ய வேண்டும்? - 9 காரணங்கள் | 9 Reasons Why You Should Practice Yoga

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (21/06/2016)

கடைசி தொடர்பு:12:58 (30/06/2016)

நீங்கள் ஏன் யோகா செய்ய வேண்டும்? - 9 காரணங்கள்

 

நீங்கள் யோகா செய்யலாம் என எண்ணுகிறீர்களா? எதற்காக யோகா செய்ய வேண்டும் எனும் கேள்விக்கான பதில் இதோ...

உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் யோகா அளிக்கும் பலன்கள் ஏராளம். மன அமைதி, நிம்மதியான தூக்கம், மனதை ஒருநிலைபடுத்துதல் என அதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். பல நாட்களாக யோகா செய்ய திட்டமிட்டு செய்யாமல் இருப்பவராயின், யோகா தரும் பலன்களை அறிந்து கொண்டு இனியும் தாமதிக்க வேண்டுமா என முடிவெடுங்கள்....

1. மன அமைதி:

பரபரப்பான பணம் தேடும் இந்த உலகில், நாம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான விஷயம் மன அமைதி. நாம் நம் வாழ்வில் நடந்தவற்றையெல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பதால்தான் பல பிரச்னைகள். ஆனால் யோகா செய்வதன் மூலம், நம் மனதை நிகழ்காலத்தில் தக்கவைத்துக் கொள்ள முடியும். மேலும் நாம் எதிர்பார்த்திராத மன அமைதியும், நிம்மதியும் நமக்கு கிடைக்கின்றன. இந்த மனநிலையில் நாம் எடுக்கும் முடிவுகளும், நம் செயல்களும் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

2. மனநிலை மாற்றம்:

எப்போதும் மனது சரியில்லை எனக் கூறுபவர்கள், யோகா செய்வதன்மூலம் ஒரு தீர்வு காணலாம். நம் மூளையில் gamma-aminobutyric acid (GABA) எனும் ரசாயனம் யோகா செய்யும் போது அதிகரிக்கிறது. இதனாலேயே நமக்கு மன அழுத்தம் குறைகிறது. பல மருத்துவர்களிடம் சென்றும் தீராத மன பிரச்னை உள்ளவர்கள், மனப் போராட்டங்களுக்கு எதிராக  யோகாவை  தங்கள் ஆயுதமாக எடுக்கலாம்!

3. விளையாட்டின் சகா!

நீங்கள் எந்தத் துறையில் வீரராக இருந்தாலும் சரி, யோகா உங்களுடைய சிறந்த தோழன்! நடனம், கூடைப்பந்து, நீச்சல் என உடல்சார்ந்த வீரராகவோ,  படிப்பில் சுட்டி, எழுத்தாளன் என உளவியல் சார்ந்த நிபுணராகவோ இருந்தால் யோகா உங்களை இன்னும் மேம்படுத்தும். உங்கள் உடல் வலுவை அதிகரித்து, மனதிடத்தை உருவாக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி உங்களை உங்கள் துறையில் மென்மேலும் சாதிக்க வைப்பது யோகா!

4. ஆழ்ந்த தூக்கம்:

இன்று பலருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்னை தூக்கம். ஆம், வேலைகளில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் நமக்கு சரியாக தூங்க நேரமில்லை. இரவில் பதற்றத்துடன் எழுவது, கனவுகளால் ஏற்படும் தொந்தரவுகள் என அனைத்திற்கும் யோகா ஒரு தீர்வு. நன்றாக உறங்க வேண்டும் என நெடுநாள் ஆசை கொண்டவர்கள் இன்றே யோகா செய்ய புறப்படுங்கள்!

5. எளிமை:

யோகா என்பது யார் வேண்டுமானாலும் செய்யக் கூடிய அளவு எளிமையானது. வயது, எடை, உயரம், பாலினம் என எதையும் பார்க்காமல் யோகா செய்யலாம். ஒருமுறை முறையாக எப்படி யோகா செய்ய வேண்டும் என்பதை படித்தால் மட்டும் போதும். நம் வாழ்நாள் முழுவதும் யோகா செய்யலாம்!

6. நெகிழ்வுத்தனமை:

இறுக்கமாக இருக்கும் நம் உடலை யோகா நெகிழ்விக்கும். நம்மால் எவ்வித பிரச்னையும் இன்றி எந்த வேலையையும் செய்ய முடியும். நாம் பார்த்திருப்போமே, பல குழந்தைகள் ரப்பர் போல தங்கள் உடலை வளைப்பதை... இப்படி வளைக்கும் தன்மை நம் ஒவ்வொருவர் உடலிலும் இருக்கிறது. நாம் அதை வெளிக்கொணர பயிற்சி மட்டும் செய்தால் போதுமானது. ரப்பர் போல வளைக்க எண்ணமில்லை என்றாலும், நம் தினசரி வேலைகளை தடங்களின்றி செய்யலாமே!

7. தைரியம்:

யோகா நம் மன தைரியத்தை அதிகரிக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? நம் உடலுக்கு நாம் எண்ணுவதைக் காட்டிலும் பலமும், சக்தியும் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் அதிபயங்கரமான தைரியம் உருவாகும்தானே? அதுதான் நிகழ்கிறது. நம்மால் மூச்சுப் பிடித்து ஒற்றைக்காலில் நிற்க முடியும் எனத் தெரிந்து விட்டால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியும், கர்வமும் அதனால் ஏற்படும் தைரியமும் விலைமதிக்க முடியாதவை. ஆதலால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தைரியத்தை வெளிக்கொணர, யோகா செய்தாலே போதும்.

8. வலி நிவாரணி:

யோகா ஒரு சிறந்த வலி நிவாரணி. ஆம், தலைவலி, மூட்டுவலி, இடுப்புவலி என ஒவ்வொரு வலிக்கும் ஒவ்வொரு யோகா உள்ளது. மருந்து மாத்திரையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏராளம். யோகா செய்வதன்மூலம் எவ்வித பக்கவிளைவும் இன்றி வலியில் இருந்து விடுபடலாம்.

9. அலுக்கவே அலுக்காது!

என்றுமே அலுக்காதது யோகா. ஒருமுறை பழகி விட்டோம் என்றால், நம்மால் யோகா செய்யாமல் இருக்க முடியாது. ஆம், நாம் யோகாவிற்கு அடிமையாகி விடுவோம். உண்ணல், உறங்கல்போல யோகாவும் நம் அன்றாட செயலாக மாறிவிடும்.

இப்படி யோகா என்னும் ஒரு வார்த்தை, ஒரு செயல் நம் வாழ்வையே மாற்ற வல்லது. அதனால்தான், யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த சர்வதேச அளவில் "யோகா தினம்" கொண்டாடுகிறோம். நம் நாட்டில் தோன்றிய யோகாவை உலகமே கொண்டாடும் நிலையில், நாம் நமது உடல் நலனை கருத்தில்கொண்டாவது செய்யாமல் இருக்கலாமா...?

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close