'சித்த மருத்துவத்தின் அருமையை உலகம் உணரத்தொடங்கி உள்ளது!'

சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறை மற்றும் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் சார்பில் பேராசிரியர் ச.இன்னாசி முத்து , பெ.பாண்டிக்குமார் மற்றும் சு.முத்தீசுவரன் ஆகியோர் இணைந்து எழுதிய 'அனுபவ சித்த மருத்துவ முறைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி முன்னிலையில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் இராமசுவாமி, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் இராமசுவாமி பேசும்போது,"  'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நாம். இதை மறந்து போனதால், இன்று நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது வணிக நலனுக்காக, 'ஆங்கில மருந்துகள்தான் சிறந்தவை' என்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே  ஏற்படுத்தியுள்ளன. நமது சித்தமருத்துவ முறை ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. நாம்தான் அதன் பெருமையை உணராமல் இருக்கிறோம். மூட்டில் வலியோ, கழுத்தில் சுளுக்கோ இருந்தால் மருத்துவமனை சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. சித்தமுறையில் வலி உள்ள இடத்தில் வர்ம சிகிச்சை மூலம் கைகளால் பிடித்துவிட்டாலே போதும், சில நிமிடங்களில் வலி குணமாகும்.

அலோபதி மருத்துவம், நோயாளியாக மனிதனைப் பார்க்கும். சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்த்து நோயைக் குணப்படுத்த தீர்வை சொல்லும். இதனால்தான் சித்த மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் உயிர்ப்போடு இருக்கிறது. தமிழகத்தில் பாளையங்கோட்டையில்தான் சித்த மருத்துவக்கல்லூரி முதன்முதலாக தொடங்கப்பட்டது.  சித்த மருத்துவத்தில் தாதுக்கள், சிறிய உயிரினங்கள் கடலில் கிடைக்க கூடிய முத்து, சிப்பி, பவளம், கடல் நுரை உள்ளிட்டவை கூட  மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள சித்த மருத்துவ ஞானத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், எங்கள் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடான இலங்கையில், சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிவருகிறது. உலகம் முழுக்கவே சித்த மருத்துவத்தின் அருமை, பெருமையை உணரத் தொடங்கியுள்ளார்கள்"  என்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும், உயிர் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சித்த மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் உயிரி பூச்சியியல் துறை சார்பில் இயற்கை உணவு பரிமாறப்பட்டது.

- அ.பா.சரவண குமார்
படங்கள்: அ.சரண் குமார்

(மாணவர் பத்திரிகையாளர்கள்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!