சர்க்கரை நோய்: நம்பிக்கைகள் Vs உண்மைகள்"இனிப்பு அதிகமா சாப்பிடறவங்களுக்குத்தான் சர்க்கரை நோய் வரும்" என்று சிலர் சொல்வதுண்டு... "அதெல்லாம் பணக்கார வியாதி. நமக்கு எல்லாம் வராது. நமக்குத்தான் ரேஷன்லயே சர்க்கரை இல்லையே?!" - இது சிலரின் நம்பிக்கை. "சர்க்கரை நோய் வந்தா காப்பாற்றவே முடியாது, ஆளே அவ்வளவுதான்!" - இப்படி பயமுறுத்துகிறவர்களும் உண்டு. 

பொதுவாகவே நோய்கள் குறித்த தவறான நம்பிக்கைகள் நம்மிடம் அதிகம்; அதிலும், சர்க்கரைநோய் குறித்த தவறான நம்பிக்கைகள் இன்னும் அதிகம். சர்க்கரை நோய் குறித்த மூன்று நம்பிக்கைகளும், உண்மையும் என்னென்ன என்று பார்ப்போம்.

நம்பிக்கைஎன் தாய், தந்தை இருவருக்குமே சர்க்கரை நோய் இல்லை. எனவே, எனக்கும் வராது.

உண்மை: சர்க்கரை நோய் வருவற்கு மரபியல் காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். நம் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், சர்க்கரை நோய் வந்தவர்கள் எல்லோருமே மரபியல் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. வாழ்வியல்முறையில் உள்ள கோளாறுகள்தான் சர்க்கரை நோயைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல்பருமன், முறையற்ற தூக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்வதன்மூலம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்க முடியும்.

நம்பிக்கைநான் ஸ்லிம்மாக இருக்கிறேன். எனவே, எனக்குச் சர்க்கரை நோய் வராது.

உண்மை: எடை அதிமாக இருப்பதும், ஒபிஸிட்டி என்பதும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அளவான எடையுடன் ஒல்லியாக இருப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான்.  ஆனால், பொதுவாக மேற்கத்தியர்களோடு ஒப்பிடும்போது இந்தியர்கள் எடை குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ள உடல் வாகைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது, சராசரியாக 65 கிலோ உடல் எடை உள்ள மேற்கத்தியரின் உடலில் தசை அதிகமாக இருக்கும். அதே எடை கொண்ட இந்தியரின் உடலிலோ தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும். நம் உள்ளுறுப்புகளில் படியும் தேவையற்ற கொழுப்பு இன்சுலின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதுதவிர, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே,  சராசரி எடையுடன் ஒல்லியாக இருந்தாலும்கூட சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


நம்பிக்கை: எனக்கு ப்ரீ டயாபடீஸ் உள்ளது. ஆகவே, எனக்கு சர்க்கரை நோய் வரக்கூடும்.

உண்மை: ப்ரீ டயாபடீஸ் நிலையை மதில்மேல் பூனை என்று சொல்லலாம். இவர்கள் மருத்துவர் ஆலோசனையை பின்பற்றி வாழ்க்கைமுறை மாற்றம், ஆரோக்கியவாழ்வு வாழ்ந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தள்ளிப்போட முடியும். அல்லது வராமல் தடுக்கக்கூட முடியும்.  எனவே, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, சீரான எடை பராமரிப்பு போன்ற மாற்றங்களால் ப்ரீ டயாபடீஸ்காரர்கள் சர்க்கரை நோயை வெல்ல முடியும்.

- இளங்கோ கிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!