Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ந்து இணையம் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

                                                    

அலுவலகத்தில் மணிக்கணக்காக இணையத்தில் அமர்ந்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியதும், செல்போன்,  லேப்டாப், டேப்லெட்டில்  நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வீடியோ சாட்செய்வது, இரவுப் போர்வைக்குள்  மூழ்கி, ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்பில் விடிய விடிய அரட்டை அடிப்பது என ஒரு நாளில்  15 மணி நேரத்துக்கு மேல் இணையத்தில் மூழ்கியிருப்பவரா நீங்கள் ? அப்படி என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். 

'இவான் கோல்டுபர்க்' என்னும் உளவியல் நிபுணர், இப்படி  அதீதமாக இணையத்தைப் பயன்படுத்துவதை  " இன்டர்நெட் அடிக்சன்  டிஸ்ஆர்டர்" என்று பெயரிட்டு உள்ளார். இணைய பயன்பாட்டாளர்களை பல வகைகளாக அவர் பிரித்துள்ளார். "பாலியல் தளங்களின் பிரியர்கள், இணைய சந்தைப் பிரியர்கள், பிளாக்-சமூக வலைதளப் பிரியர்கள், இமெயில்  பிரியர்கள் எனப் பல வகை இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர்" என்கிறார் அவர்.  இப்படி, நேரம் காலமின்றி இணையத்தைப் பயன்படுத்துவதால்,  மூன்று வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன  என்கிறார்.  ஒன்று, மனம் சார்ந்த, உணர்வுரீதியான பிரச்சனைகள், இரண்டு, சமூகம் அவர்களை நடத்தும் விதம், மூன்றாவது அவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்பு. உதாரணமாக, பல மாதங்களாக இணையத்தில் சூதாட்டம் ஆடுபவர்கள் , பொருட்களை ஏலம் எடுப்பவர்கள் அந்தப் பழக்கங்களைக் கைவிட முடியாமல், தொடர்ந்து பணத்தை இழக்க நேரிடுகிறது. 

தொடர்ந்து, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதன் மூலம், ஒரு கட்டத்தில் தங்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை வாங்க நேரிடும். பாலியல் தளங்களைப் பார்ப்பவர்கள், திருமணமான பின்னும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் பார்த்துவந்தால்,  தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டாகும். உணர்ச்சி பாதிப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இணையத்தைத் தோழனாக நினைக்கும் விர்ச்சுவல் மீடியா மனநிலை. இவர்கள், தங்கள் தனிமையைப் போக்கிக்கொள்ள இணையத்தை நாடுகின்றனர். காலப்போக்கில் இது பழகிவிட, நண்பர்கள் சுற்றி இருந்தாலும், இவர்கள் இணையத்திலேயே மூழ்கிவிடும் நிலை உருவாகும். இதனால், இவர்கள் மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள். 

 

ஐரோப்பாவில் "இன்டெர்ஸ்பெரியன்ஸ்"  (Intersperience) என்னும் சர்வதேச நுகர்வோர் ஆராய்ச்சி மையம், 18 - 65 வயதுக்கு உட்பட்ட1,000 ஐரோப்பியர்களை வைத்து, இது தொடர்பான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. 24 மணி நேரம் இவர்களிடம் இருந்து ஸ்மார்ட் போனைப் பறிமுதல் செய்து, தனியறையில் அமர்த்தப்பட்டனர். இவர்களுள், இளைஞர்கள் பலர் கதவை உடைத்து வெளியே வர முயற்சி செய்துள்ளனர். 24 மணிநேரம் முடிந்து அவர்கள் வெளியே வர அனுமதித்தபோது, அவர்களது அனுபவத்தை உளவியல் மருத்துவர்கள் கேட்டனர். சிலர், "தங்களால் தங்கள் நண்பர்களிடம் தொடர்புகொள்லாமல் இருக்க முடியவில்லை, தனிமை வாட்டுகிறது" என்றனர். சிலர், "இப்போதுதான் ஏதோ சிறையிலிருந்து விடுபட்டது போல் உள்ளது; இது நாள் வரை இணையம் தங்களை அடிமைப்படுத்தியதைத்  உணரவில்லை, உணர்த்தியமைக்கு நன்றி, இனி, இணைய பயன்பாட்டைக் குறைத்துக்கொள்கிறோம்" என்றனர்.  

மனோதத்துவ நிபுணர் பவுல் ஹட்சன் கூறுகையில் "இருட்டில் எலெக்ட்ரானிக்ஸ்  திரையைப் பார்ப்பது தவறு. இதனால், பார்வைத்திறன் பாதிக்கப்படும். இது தெரிந்தும் பலர் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது இல்லை. ஆனால், அதைவிட முக்கியமான பிரச்னை என்னவென்றால், இந்த ஆராய்ச்சியில் தூங்கும்போது மூளையின் செயல்பாடு கவனிக்கப்பட்டது. அதிக நேரம் இணையம் பயன்படுத்துவதால், அட்ரினலின் சுரப்பு அதிகமாகி, நைட்மேர் எனப்படும் பயம் உண்டாக்கும் கனவுகள் தோன்றுகின்றன எனத் தெரியவந்துள்ளது. இரவு, நெடுநேரம் இணையதைப் பார்த்துவிட்டு, பின்னிரவில் தாமதமாகத் தூங்கினால், காலை தாமதமாக எழுவது முதல் அலுவலக வேலையில் கவனமின்மை, சோர்வு,  முன்கோபம், படபடப்பு வரவும் வழிவகுக்கிறது." என்கிறார். 

இன்றைய நவநாகரிக உலகில் பெருகும், இணையத் தேவைகளுக்கு மத்தியில் யாராலும் இணையத்தை முழுதுமாக  ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.வர்த்தகம், வேலை, உலக அறிவு, பொழுதுபோக்கு என பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், தகவல்களைப் பரிமாறவும் இணையம் பயன்படுகிறது. ஆனால், இது, உடல், மனஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.


- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement