வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (29/08/2016)

கடைசி தொடர்பு:17:52 (30/08/2016)

நல்லா தூங்குங்க பாஸ்... மறதிநோயை ஏற்படுத்தும் உறங்காமை!

ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவரா நீங்கள்? அப்போது இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள். ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு ஞபாகமறதி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கம் நமது நினைவுத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எவ்வளவு மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினாலும், இரவு நன்கு தூங்கி அதிகாலை எழுந்தவுடன் நினைவுத்திறன் அதிகரிப்பதை நம்மால் அனுபவப்பூர்வமாக உணர முடியும். நினைவுத்திறன், கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை இயக்குவது  மூளையின் ஹிப்போ கேம்பஸ் (Hippocampus) என்னும் பகுதி.

15 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வில் நாம், பேசியது, நம் கண்கள் எதிராளியைப் பார்த்த கோணம், சுற்றி இருந்த மனிதர்கள், மரங்கள் மற்றும் செடிகள் எனக் காட்சிகள் திரைப்படம் போல நம் நினைவில் பதிந்திருக்கும். அதற்கு முக்கியக் காரணம் ஹிப்போகேம்பஸில் இருந்து வரும் அதிர்வலைகளால் செயல்படும் நியூரான்களின் தகவல் பரிமாற்றம்தான். நமது அன்றாடச் செயல்களையும், வழக்கமற்ற நிகழ்வுகளையும் ஹிப்போகேம்பஸ் நியூரான்கள்  சேமித்துக்கொள்ளும். இந்தத் தகவல்களே பின்னாட்களில் நமக்குத் தேவைப்படுபோது நினைவில் தோன்றும். பல வருடங்களுக்கு முன்னர் சென்ற இடங்களுக்கு செல்லும்போது, முந்தைய நினைவுகளை வரவழைக்கும். செல்போனில் ரிமைண்டர் வைத்தது போல, சில வேளைகளில் நமது முக்கியப்  பணிகளைத் தக்க நேரத்தில் ஞாபகப்படுத்தும்.

நெதர்லாந்து நாட்டில் உள்ளது 'குரானின்ஜென்' பல்கலைக்கழகம். இதன் ஒரு கிளை, பரிணாம வாழ்வு அறிவியலுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. அதன் உதவிப் பேராசிரியர்    ராபர்ட் ஹேவகேஸ் அப்படி ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  அதன்மூலம், தூக்கமின்மை காரணமாக மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியில் உள்ள நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது எனக் கண்டுள்ளார். குறைந்தது மூன்று மணி நேரம் ஆழ்நிலைத் தூக்கத்துக்குச் சென்றால், ஒருநாளைக்குத் தேவையான நினைவுத்திறன் ஆற்றலை ஹிப்போகேம்பஸ் நியூரான்கள் தயாரித்துவிடும். ஆழ்நிலைத் தூக்கத்தை அடைய குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகும்.

டெண்ட்ரைட் (dendrite) மூளை நியூரான் செல்களின் தகவல் பரிமாற்றத்துக்குத் தேவையான மின் ரசாயனத் தூண்டுதலில் (Electrochemical stimulation) முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த டென்ட்ரைட்கள் பல கிளைகளாகப்  பிரிந்திருக்கும். இந்தக் கிளைகள் அனுப்பும் அதிர்வலைகள் மூலமாகவே மற்ற நியூரான்களிடம் இருந்து தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்தக் கிளைகளின் நீளம், ஆழ்நிலைத் தூக்கத்தின் அளவைப் பொறுத்து அதிகமாகும்.

இந்த ஆ​ராய்​ச்சிக்காக விஞ்ஞானிகள் சோர்வான ஒரு சோதனை எலியின் மேல் சிறிய அளவில் மின்சாரம் பாய்ச்சி ஐந்து மணி நேரம் தொடர்ந்து தூங்கவிடாமல் செய்தனர். மற்றொரு எலியை மூன்று  மணி நேரம் ஓய்வெடுக்க அனுமதித்தனர். பின்னர், தூங்காத எலியின் மூளையின் ஹிப்போகாம்பஸ்ஸின்  சிஏ1 பகுதியை ஆராய்ந்தனர். டென்ரைட்டுகளின் நீளத்தை ஆராய்ந்தபோது, அவை குறைந்து காணப்பட்டன. நன்கு தூங்கி எழுந்த எலியின் டென்ரைட்டுகளின் நீளம் அதிகமாக இருந்தது. பிறகு, தூங்காமல் சோர்வுற்று இருந்த எலியை மூன்று மணி நேரம் தூங்க அனுமதித்தபோது டென்ட்ரைட்டுகள் நீளம் அதிகரித்துள்ளது.

டென்ட்ரைட் கிளைகளில் காப்லின் (Cofilin) என்னும் புரதம் உள்ளது.டென்ட்ரைட்டுகள் செயல்பாட்டுக்கு இது முக்கியக் காரணியாகும். இந்தப் புரதத்தைத் தூக்கமின்மை பாதிக்கிறது. அதனால், டென்ட்ரைட்களின் நீளம் குறைந்து நினைவுத்திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. அதுமட்டும் இல்லாமல், நாளாக ஆக நினைவுத்திறன் குறைபாட்டுக்கு ஏற்ப ஆழ்நிலைத் தூக்கமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்குகிறது. இதனால், உடல் அசதி மிகுந்தபோதும்,  நள்ளிரவு வரை தூக்கம் வராமல் போகிறது என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். என்ன கொட்டாவி வருதா? அதேய்!

-  வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்