Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாங்க வாழ்ந்துதான் பார்ப்போம்!  #SuicidePreventionDay

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், குடும்பத்தலைவிகள், உயர் அதிகாரிகள்...என்று சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் திடீரென தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணியாகக் கூறப்படுவது மன அழுத்தம் மட்டுமே.


சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, '' எங்களிடம் வரும் தற்கொலை தொடர்பான புகார்களை பார்க்கும்போது, 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் எந்த விஷயத்தையும் தைரியமாகவும், மனோ திடத்துடனும் அணுகுவதாக தெரிகிறது.  மேலும், சுய ஒழுக்கத்துக்காகப் பயந்து தங்களை சுற்றியுள்ளவர்களுக்காகவும் பயந்து வாழ கற்றுக்கொள்கிறார்கள். அதாவது கலாச்சாரத்தின் மீது பயம் கொண்டவர்களாக தெரிகிறார்கள். ஆனால், 15 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் தற்கொலை முடிவை அதிகம் எடுக்கிறார்கள். டெக்னாலஜிக்கு அதிக அளவு பழக்கப்பட்டவர்கள். சின்ன சின்ன கஷ்டங்களையும், தவறுகளையும் அவமானமாக பார்ப்பவர்களாக வளர்ந்து வருகின்றனர். இந்த இருவருக்கும் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது சாதரணமாகி வருகிறது. ஏன் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்குக் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள்.


இவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது. அது சரியான நேரத்தில் கிடைக்காதபோது, தவறான முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். கூட்டுக் குடும்பங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் தற்கொலை முடிவை தேடிப்போவதில்லை. தனிமையாக இருக்கிறவர்கள்தான் அந்த முடிவை அவசரகோலத்தில் எடுத்துவிடுகிறாரகள் " என்றார். 
தற்கொலை செய்ய முயற்சித்து அதற்கு பிறகு மீண்டு வந்த சிலரிடம் பேசினோம், யாருமே தங்களுடைய முகத்தை வெளியில் காட்ட முன்வரவில்லை தங்களின் முகாந்திரத்தை மறைத்துக் கொண்டே பேசுகிறார்கள், அதில் ஒருவர் கூறியது,

ஜாஸ்மின்:

''நான் ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறேன். பொதுவாக, வேலை செய்யும் சூழல் சரியாக அமைந்தாலே போதும் இது போன்ற எண்ணம் வராது. இன்று என்னதான் படித்து பெரிய இடத்திற்கு சிலர் வந்தாலும், எந்த இடத்தில் ஒருவரது தவறை சொல்ல வேண்டும், எந்த இடத்தில் சொல்லகூடாது என்கிற அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிப்பதில்லை. பல பேருக்கு மத்தியில் யோசிக்காமல் திட்டிவிடுவதால் மனமுடைந்து போகிற பல பெண்களுக்கு இது என்னடா வாழ்க்கைனு தோணும். இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய பெண்கள் தங்களுடைய நடை, உடைகளை நகரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளும்போது பல பேருடைய கிண்டலுக்கும், கேளிக்கும் ஆளாகக்கூடும். இதனால் இவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். நான் என்னுடைய வேலை பளு காரணமாகவும், என்னுடைய உயர் அதிகாரி திட்டியதாலும் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தேன். என்னுடைய பெற்றோர்கள் காப்பாற்றி நான் இருக்கிறேன் என்ற பிறகுதான் வாழ்க்கை மீதே நம்பிக்கை வந்தது.' என்றார்.

 


இது குறித்து மனநல ஆலோசகர் மருத்துவர் அபிலாஷாவிடம் பேசினோம், 

''தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். 39 மணித்துளிக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஓரளவுக்கு கையில் பணம் வந்தவுடன் ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் பலரும் அதை சரிவர சமாளிக்க முடியாமல் திணறி மற்றவர்களுடைய பேச்சுக்கும், ஏச்சுக்கும் பயந்து இறுதியில் தற்கொலை என்கிற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். சரி எந்தெந்த காரணிகள் பெரும்பாலும் தற்கொலைக்கு தள்ளுகிறது என்பதை பார்ப்போம், 

பொதுவாக இரண்டு விஷயங்களுக்காகத்தன தற்கொலைகள் நடிக்கிறது. ஒன்று படிப்பில் தோல்வி ஏற்படும்போது, இரண்டாவது காதலில் தோல்வியை சந்திக்கும் போது. குடும்பப் பிரச்னைகள் எல்லாம் அதற்குப் பிறகுதான். தற்போது வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படுவதால் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. காதலில் தோல்வியுரும்போது என பல சந்தர்ப்பங்களில் பலரும் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

“ஒரு மனிதன் தனிப்பட்ட பொதுநேக்கம் கருதி தானாகவே அல்லது பிறரால் தூண்டப்பட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ளுதல்” இந்த செயல்பாட்டையே தற்கொலை என்கிறோம். தற்கொலை சம்பந்தமாக சமூகவியளாளரான “எமில்ட் துர்கைம்” குறிப்பிடுகையில் தற்கொலைக்கு மனவிரக்தி, காதல் தோல்வி, வறுமை, சட்ட ரீதியாக ஏற்படும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் போன்றவை காரணங்களாக அமைகின்றன எனவும் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் திருமணமாகாதவர்களே எனவும் குறிப்பிடுகிறார்.  

2013 ன் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மனநல கவனிப்பு மசோதாவில் தற்கொலையை சட்டவிரோதம் என கூறும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்கொலைக்காக முயற்சிப்போரின் மனநலம் கருத்தில் கொள்ளப்படும். இந்த மசோதா நிலைப்படி தற்கொலை என்பது கிரிமினல் செயல்பாடு அல்ல. தற்கொலை முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படும். தற்கொலை சட்ட விரோதமானது என கூறும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 309 ல் தற்போதைய மசோதா விலக்குஅளிக்கும். இந்த மசோதாபடி தற்கொலை முயற்சியும் மனநல ஆரோக்கியமும் ஒன்றிணைத்து பார்க்கும் நிலையை அளிக்கும். இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது.

தற்கொலை முயற்சி மேற்கொள்பவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். புதிய மசோதாப்படி , மனநல நேயாளிகளுக்கு மின்சார சிகிச்சை அளிப்பது, சங்கிலியால் பிணைத்தல் மற்றும் தலையை மொ ட்டை அடித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும் அங்கீகாரமற்ற மன நல மையம் நடத்துபவர் களுக்கு ரூ 50ஆயிரம் அபரா தம் விதிக்கப்படுகிறது.

மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும். மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 


இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் ஒரு பெண் வந்தார். கிராமத்தில் நன்றாக படித்து, கட்டுக் கோட்பாக வளர்க்கப்பட்டவளுக்கு எப்போதும் தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆசை. நல்ல மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைகழகத்தில் சேர்ந்தார். கிராமத்தில் இருந்து வந்ததால் 
அவளின் நடை, உடைகளை வைத்து சக மாணவர்கள் கிண்டல் செய்யவும் விரக்தியில் தான் தற்கொலை செய்யப்போவதாக முடிவெடுத்தவர், என்னை பற்றி அறிந்து என்னிடம் ஆலோசனைக்காக வந்தார். நான் துப்பட்டா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன். இரவு விடுதியில் எல்லோரும் தூங்கியப்பிறகு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றாள். 
அதற்கு நான், 'நீ இறந்த பிறகு உன்னை எப்படி பேசுவார்கள் என்று தெரியுமா என கேட்டதற்கு., 'நானே இறந்திடுவேன் அதற்கு பிறகு என்ன நடக்குனு என பார்கவாப் போகிறேன்' என்றார். அதற்கு பிறகு அவரிடம் பேசி ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக் கொண்டுவந்தேன்.

இதேபோலத்தான் ஒருவர் என்னிடம் வந்து, நான் காதலித்தப் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. அவளை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொண்டு இறக்க போகிறேன். நான் இறந்தப் பிறகு இதை மற்றவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள் என்றார். அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அதிலிருந்து வெளி கொண்டுவந்தேன். இப்போது ஒரு ஐ.ஏ.எஸ் அக்காடமியை நடத்திவருகிறார். 

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி அந்த நிமிடத்தை தாண்டிப் போக முடியாதவர்கள் தான் பெரும்பாலும் உடனடியாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தற்கொலை முயற்சியில் பெண்களை விட ஆண்களே திடமாக இருக்கிறார்கள். கையில் பிளேடால் கோடுபோடும்போது கூட, பெண்கள் அழுத்தமாகப் போடமாட்டார்கள். ஆனால், ஆண்கள் எதையும் யோசிக்காமல் அழுத்திப் மார்க் போடுவார்கள். கீபிளி வின் அறிக்கையின் படி, கஷ்டப்படும் சூழல் அல்லது மன அழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு முறையான ஆறுதல் மற்றும் அவருக்கான ஆலோசனைகளும், உதவியும் கிடைத்தாலே தற்கொலையில் இருந்து மீண்டு வருவார்கள் என்கிறது.

-வே.கிருஷ்ணவேணி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement