வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (10/09/2016)

கடைசி தொடர்பு:19:51 (12/09/2016)

இதயத்தை இதமாக்கும் 10 வழிகள்!

                                         

தாயின் வயிற்றில் கரு உருவாகி, நான்கு வாரத்தில் தொடங்குகிறது முதல் இதயத் துடிப்பு. அன்று முதல் மனிதன் இறக்கும் வரை நிற்காமல் சதா சர்வ காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது இதயம். இதன் நான்கு அறைகள், வால்வுகள் மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாடு அளப்பரியது. உடல் முழுவதும் ரத்தத்தை அழுத்திச் செலுத்தி, பிராணவாயுவைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதய அறுவைசிகிச்சையில் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பலப்பல வந்துவிட்டபோதிலும், எந்த ஓர் இதய நோயும் வருமுன் காப்பதே சிறந்தது. 


இதயத்தைக் காக்கும் 10 வழிகள் இதோ...
மாதத்துக்கு ஒரு முறை உடல் எடையைச் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு முக்கியக் காரணி  உடல்பருமன். உடல் எடையின்  பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 30-க்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

இதயத் துடிப்பின்போது, தசைகள் சுருங்கி விரிய நார்ச்சத்து முக்கியமானது. இன்று பலர், கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளை வாங்கி அருந்துகிறார்கள். பழத்தைச் சாறாக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து போய்விடும். எனவே, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடுவது நல்லது. 
புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். இன்று பலர் சிகரெட்டை கைவிட, எலெக்ட்ரானிக் சிகரெட்டை நாடுகின்றனர். இதுவும் தவறு. எலெக்ட்ரானிக் சிகரெட் சாதாரண சிகரெட் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், அதிலும் நிகோடின் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

                                          
யோகா, காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் தவிர, இதய நலத்துக்கு அதிகாலை மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். இதனால், ரத்தத்துக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. 
20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். அதற்குக் குறைவாகத்  தூங்குபவர்களுக்கு இதய நாளங்களில் கால்சியம் குறைபாடு ஏற்படும். இதுவே, பின்னர் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். 
இன்று நிறைய பேர் பலவகையான டயட் முறைகளைப் பின்பற்றுகின்றனர். எந்த வகை டயட்டை பின்பற்றினாலும், அவை உடலின் அமிலத்தன்மையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
மனஅழுத்தம் என்பது நமது அன்றாட வாழ்வில் இயல்பாக ஏற்படும் ஒரு விஷயம். இதனை முற்றிலும் ஒழிக்க  முடியாது. வேலைப் பளு, குடும்பப் பிரச்னை காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தைக்  கட்டுக்குள் வைக்கலாம். புத்தகம் படிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, நீச்சல், நடைப்பயிற்சி என தினமும் ஏதாவது பிடித்த விஷயம் ஒன்றைச் செய்வதன் மூலம் மனஅழுத்தத்தைக்  குறைக்கலாம். 
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதய நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் நாளடைவில் இறுகி, ரத்தம் செல்லும் பாதை அடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. நிறைவுறா கொழுப்பு அமிலம் (Unsaturated fat) அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை அளவாகச் சாப்பிட வேண்டும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவை கவனிக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் (6 கிராம்) உப்பு தேவைப்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  மூன்று கிராம் போதுமானது. 

இதய நோய்கள் வராமல் தடுப்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். இந்த அமிலம் அதிகம் உள்ள  பிஸ்தா, முந்திரி ஆகிய நட்ஸ் வகைகள், மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்