Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பில் கிளின்டன், மல்லிகா ஷெராவத்... இருவருக்குமான ஒற்றுமை  தெரியுமா?

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கும் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவாக இருக்கும் என்று குழப்பமா? இவர்கள் இருவரும் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வீகன் உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர் என்பது தான் அது. மேலே குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமல்ல.. ஒலிம்பிக் போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் கார்ல் லூயிஸ், டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ், மார்ட்டினா நவரத்திலோவா, பில் கேட்ஸ், என ஏராளமான ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும்கூட வீகன் டயட்டை விரும்பிப் பின்பற்றுகின்றனர்.

“தினமும் எவ்வளவு வாக்கிங், உடற்பயிற்சி செய்தாலும், இந்த தொப்பை மட்டும் கரையவே மாட்டேங்குது!” எனப் புலம்பும் இளைஞர்கள் இன்றைக்கு அதிகமாகிவிட்டார்கள். உடற்பயிற்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இவர்கள் டயட்டைப் பின்பற்றுவதற்குக் கொடுப்பதில்லை. இதய நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவை ஏற்பட முக்கியக் காரணியாக இருப்பது அதீத உடல்பருமன். உடல் பருமனைக் குறைக்கப் பல உணவு முறைகள் வந்துவிட்டபோதிலும், வீகன் டயட் (நனிசைவ உணவு முறை) உடனடி பலன்களைத் தருவதில் கில்லாடியாக இருக்கிறது.

 

பேலியோவுக்கு நிகராக உடல் எடையைக் குறைக்கும் டயட் முறைதான், வீகன் டயட். சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் விலங்குகளிலிருந்து பெறும் ஊட்டச்சத்து உணவுகளான பால், தேன் போன்றவற்றைக்கூட நனிசைவர்கள் உண்பதில்லை. பால் பொருட்களை அறவே தவிர்த்துவிடும் இந்த உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதுதானா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஆனால், இந்த உணவு முறை, உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததுதான் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் ஆரோக்கியத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தாத உணவு முறை, வீகன் டயட் எனப்படும் நனிசைவ உணவுமுறை. இதன் எட்டு சிறப்பு அம்சங்களைத் தெரிந்துகொள்வோமா...

・உடல் பருமனுக்குச் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும் அலர்ஜி, சில வகைச் சரும நோய்கள், மலச்சிக்கல் போன்ற பல உபாதைகளிலிருந்தும் விடுபடலாம்.

 


・விலங்கினங்களில் இருந்து பெறப்படும் தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் தேன் என எந்த உணவும் இதில் இடம்பெறுவது இல்லை. தாவரங்களிலிருந்து பெறப்படும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், கொட்டைகள், உலர் பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வீகன் டயட்.


・இந்த உணவுமுறையில் நமக்குத் தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட், மற்றும் பைட்டோநியூட்ரியன்ட் சத்துகள் நிறைந்துள்ளன.


・குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் இந்த உணவு முறையைப் பின்பற்றலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் இந்த டயட் ஒரு வரப்பிரசாதம்.


・40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்றவை வராமல் தவிர்க்கவும் வீகன் டயட் உதவும். உலகம் முழுவதும் இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்கூட வீகன் டயட்டைப் பின்பற்றி, நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்டு, நலமாக இருக்கிறார்கள்.

 


・பசும்பாலைக் காட்டிலும், தாவர உணவுகளில் நிறையவே கால்சியம் உள்ளது. பாலுக்கு பதிலாக பாதாம் பால், வேர்க்கடலைப் பால், தேங்காய்ப் பால், சோயா பால், எள்ளுப்பால் ஆகியவற்றை பருகலாம். 100 மி.லி பாலில் இருந்து 120 மி.கி கால்சியம் கிடைக்கும். ஆனால், 100 கிராம் எள்ளிலோ 1160 மி.கி கால்சியம் உள்ளது.


・வீகன் டயட்டில் கொலஸ்ட்ரால் சிறிதளவும் இல்லை. மாறாக, உடலுக்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்புச்சத்து நிறைவாக உள்ளது. மேலும், வைட்டமின் பி12 சத்தை செறிவூட்டப்பட்ட சோயா பாலின் மூலமாகவும், வைட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்தும் பெறலாம்.


・நம் உடலுக்கு உகந்த ஆரோக்கியமான, எளிமையான இந்த உணவு முறையை நடைமுறைப்படுத்துவது மிக எளிது. சத்துக்கள் நிறைந்த இந்த உணவுமுறையுடன் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது, நோய்கள் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்​

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement