வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (21/09/2016)

கடைசி தொடர்பு:17:42 (21/09/2016)

கோலா பானங்கள் புற்றுநோயைத் தூண்டுமா?

சில வருடங்களுக்கு முன்பு பிரபல கார்பனேட்டட் குளிர்பானம் ஒன்றின் நூற்றாண்டு கால ரகசியம் வெளிப்பட்டது. அதில், சுவையைக் கூட்ட, திரும்பத் திரும்ப குடிக்கத் தூண்ட ஆல்கஹால் கலக்கப்படுகிறது எனத் தெரியவந்தது. தற்போது, மற்றொரு பிரபல குளிர்பானம் ஒன்றில் புற்றுநோய்க்குக் காரணமான ரசாயனம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்புவது குளிர்பானங்களைத்தான். பல்வேறு நிறங்களில், சுவைகளில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், காண்போரை சுலபமாக ஈர்க்கும் தன்மை உடையவை. இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, குளிர்பானங்கள் தயாரிக்க எவ்வளவுதான் வரைமுறைகள் நிர்ணயித்தாலும், நிபந்தனைகள் விதித்தாலும், குளிர்பான நிறுவனங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை, மதிப்பது இல்லை. யாரும் எளிதில் கண்டுகொள்ள முடியாதவாறு சாமர்த்தியமாக மீறவே செய்கின்றன.

அமெரிக்காவில் உள்ள ・சென்டர் ஃபார் என்விரான்மென்டல் ஹெல்த்・அமைப்பு, குளிர்பானத்தில் (பெப்சி, டயட் பெப்சி, பெப்சி ஒன்) கேரமல் நிறமியாகச் செயல்படும் 4 - மெதிலிமிடசோல் (4-Methylimidazole) எனும் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என 2013-ம் ஆண்டே ஆதாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. டெஸெர்ட்ஸ், ஐஸ்கிரீம்கள், குளிர்பானங்கள், கேக் ஆகியவற்றில் இனிப்பு மற்றும் மணம் சேர்க்க இந்த கேரமல் நிறமி பயன்படுத்தப்படுகிறது. பெப்சி பருகுவோருக்கு இதனை அறிவுறுத்தும் வகையில், பெப்சி குளிர்பான பாட்டில்களின் மேல் புற்றுநோய் எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. `தங்கள் குளிர்பானங்களில் புற்றுநோயை உண்டாக்கும் எந்த வேதியியல் பொருட்களும் இல்லை' என அப்போது அடித்துக் கூறியது பெப்சி நிறுவனம். மக்களின் பாதுகாப்புக் கருதி, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், `ஒரு பாட்டில் பெப்சியில் 29 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் கேரமல்தான் சேர்க்கப் பட வேண்டும்' என்று நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, குளிர்பான நிறுவனம் நிறமியின் அளவு கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டது. ஆனால், 2014-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வில், அந்த நிறுவனத்தின் குளிர்பானத்தில், 29 மைக்ரோ கிராமுக்கு மேல் கேரமல் பயன்படுத்துவது    தெரியவந்தது. 29-க்கு மேல் ஒரு மைக்ரோ கிராம் அதிகமாக கேரமல் சேர்த்தாலும், அந்தக் குளிர்பானம் பருகும் ஒரு லட்சம் பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக , கலிஃபோர்னியாவின் சுற்றுச்சுழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைப்பின் ஆய்வு முடிவுகள் கூறின.   

தற்போது, இந்தக் குற்றச்சாட்டு ஆய்வு மூலம் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டதும்,    சுதாரித்துக்கொண்ட குளிர்பான நிறுவனம் உண்மையை ஒப்புக்கொண்டது. "எங்கள்  வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் சராசரியாக ஒரு கேன் அளவைவிட குறைவாகத்தான் குளிர்பானத்தைப் பருகுகிறார்கள். எனவே புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஆகையால் எச்சரிக்கை வாசகம் அச்சடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இனிமேல் குளிர்பானத்தில் கேரமல் அளவு 29 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறிச் சமாளித்தது.


“எவ்வளவு குடிக்கிறார்கள் என்பது பிரச்னை இல்லை. அதில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் பிரச்னை. மக்கள் உணவுகளின் சுவையை விட, நிறத்துக்கு    அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இது மிகவும் தவறு. உலகம் முழுவதும் உள்ள பிரபல உடல் ஆரோக்கியம் சார்ந்த இதழ்கள் பிரசுரிக்கும் மருத்துவக் கட்டுரைகளால் மக்கள் ஓரளவு விழிப்புஉணர்வு பெற்றுவருகிறார்கள். அதீத சர்க்கரை மற்றும் கொழுப்பைச்  சேர்க்கும் இதுபோன்ற குளிர்பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்” என உணவுக் கலப்படஆய்வு நிபுணர் ஊர்வசி ரங்கன் கூறுகிறார்.

உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இதைக் குடிப்பதுதான் ஃபேஷன், டிரெண்ட், மாடர்ன் என்றெல்லாம் யோசிப்பதைவிட ஆரோக்கியமானதா என்பதுதானே முக்கியம்? எனவே அலெர்ட் ப்ளீஸ்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க