ஆரோக்கியத்தில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலக அளவிலான ஆரோக்கியம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டதில் நம் நாட்டுக்கு 143-வது இடம் வழங்கப்பட்டுள்ளது என ஐ.நா கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகாக மொத்தம் 188 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மலேரியா போன்ற நோய்கள் முதல் காற்று மாசுபடுதல் வரை, சுகாதாரம் உட்பட பல்வேறு மருத்துவ சவால்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில் நாம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“வேகமான பொருளாதார முன்னேற்றம் ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியத்தில் நாம் கானா, காமரோஸ் போன்ற நாடுகளைவிட பின் தங்கிய நிலையில் இருக்கிறோம்” என நியூயார்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு நிகழ்வான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) பற்றிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை லான்செட் (Lancet) என்ற இதழ் வெளியிட்டுள்ளது. இது ஆறுதல் தரும் விஷயம் என்னவெனில் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் நம்மைவிட பின்தங்கி 149 மற்றும் 151-வது இடங்களைப் பிடித்திருக்கின்றன என்பதுதான்.

 

சுகாதாரம், காற்று மாசு போன்ற விஷயங்களில் நாம் ஶ்ரீலங்கா, பூட்டான், போஸ்ட்வானா, சிரியா போன்ற நாடுகளைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். மலேரியாவைப் பொறுத்தவரை 10 புள்ளிகள் மட்டுமே பெற்று, இன்னும் அபாயக் கட்டத்தில்தான் இருக்கிறோம். சுகாதாரத்துக்கு எட்டு புள்ளிகளும் காற்று மாசுக்கு 2.5 புள்ளிகளும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஐந்து வயதுக்குள் ஏற்படும் குழந்தை மரணங்களில் 39 புள்ளிகளும், பிரசவ கால மரணங்களில் 28 புள்ளிகளும் பெற்றுள்ளோம். வெப்பமண்டல நோய்கள் அலட்சியம், பாக்டீரியாவைக் கட்டுப்படுத்துவதில் 80 புள்ளிகளை பெற்றுளோம்.

2015ல் ஐஸ்லேண்டு, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகியவை இந்த எஸ்டிஜி இண்டெக்ஸ் பட்டியலில் முன்னணியில் இருந்தன. யுனைட்டெட் கிங்டம் ஃபின்லாந்தைவிட ஒரு இடம் முன்னனியில் 5ம் இடத்தில் இருந்தது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சோமாலியா, தெற்கு சூடான் ஆகியவை மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன. உலக அளவில் 2000-ம் ஆண்டிற்கு பிறகு குழந்தைகள் மரணம், குடும்பக்கட்டுபாடு ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘நூற்றாண்டுக்கனக்கான வளர்ச்சி இலக்குகள்’ Millennium Development Goals (MDGs) 2000 முதல் 2015-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பதில் ஓரளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கான உடல் பருமன், வாழ்க்கைத் துணை மீதான வன்முறை, குடும்ப வன்முறை, மதுப் பழக்கம் ஆகியவை மேலும் மோசமடைந்துள்ளன” என்று இந்த ஆய்வு கவலை தெரிவித்துள்ளது.

- இளங்கோ கிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!