வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (01/10/2016)

கடைசி தொடர்பு:11:32 (03/10/2016)

அலுவலகம் செல்லும் கர்ப்பிணிப் பெண்களின் கவனத்துக்கு..!


மகப்பேறு காலத்தில் பெண்கள், அலுவகத்திற்கு செல்வதே பெரும் போராட்டம். இதில் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறந்துவிடுபவர்கள்தான் அதிகம். ஆனால் அவர்களுக்காக இல்லாவிட்டாலும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவே சிலவற்றை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன என்று மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா வழங்குகிறார்.

அலுவலகத்திற்கு செல்லும் நிதானமாக சாப்பிட நேரம் கிடைக்காமல் நிறைவாக சாப்பிட முடியாமல் போகலாம். எனவே உணவைப் பிரித்து, ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம்.

 

 

வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்லவும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து குடிக்கலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும். 
 
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். எனவே உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களை, அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.                                                                                             

பொதுவாக ஃபேசன் என்ற பெயரில் ஹீல்ஸ் அணிவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அலுவகலம் சென்றாலும்கூட கர்ப்பக் காலத்தில், கட்டாயம் ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது இடுப்பில் "லம்பார்" எலும்பு பாதிக்கப்படலாம். இதனால் இடுப்பு வலி ஏற்படலாம். மேலும் கர்ப்பக் காலத்தில் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன் பெண்கள் உடலில் அதிகமாகும். அந்த நேரத்தில் ஹீல்ஸ் அணியும் போது கால், மூட்டு மற்றும் இதர இணைப்பு பகுதிகளில் இடைவெளி அதிகரிப்பதுடன் பிரசவ வலியைத் தாங்கும் சக்தியையும் இழக்கச்செய்துவிடும்.

அலுவலகம் செல்லும் போது மிகவும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.

கர்ப்பகாலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் எடுத்துக்கொண்டிருப்பீர்கள். வேலை பளுவில் அதை சாப்பிட மறந்துவிடக் கூடாது.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்கக்கூடாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கர்ப்பிணிப் பென்கள் அலுவலகத்திற்கு டூ வீலரில் செல்வதைத் தவிர்க்கலாம். தவிர்க்க முடியாமல் செல்ல நேர்ந்தால் குழந்தைக்கு அதிர்வு ஏற்படாதவாறு மேடு பள்ளம் பார்த்து வண்டியைச் செலுத்த வேண்டும்.

 

 

- சு.சூர்யா கோமதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்