Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று வார்த்தை சக்சஸ் ஃபார்முலா!

 


`பிரச்னை இல்லாத மனிதர் ஒருவர் இருக்கிறார்’ என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ‘அட போங்கப்பா, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு... இப்போல்லாம் வாழுறதே பெரிய பிரச்னையா இருக்கு’ என்று சலிப்போடு் சொல்வோம். பிரச்னை இல்லாத மனிதர் இருக்கிறார் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் பிரச்னைகளையே முன் வைத்திருக்கிறது.


பணக்காரராக இருந்தாலும் சரி, பரம ஏழையா இருந்தாலும் சரி, இந்தப் பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் இல்லாமல் நடுவே கிடந்து அல்லாடும் மெஜாரிட்டியான நடுத்தர மக்களானாலும் சரி... எல்லோரும் எதிர்கொள்வது பிரச்னை... பிரச்னை... பிரச்னைகளே!


 `இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று அப்படியே விட்டுவிடவும் முடியாது. காரணம், மனஅழுத்தம், மன இறுக்கம், மனச்சோர்வு தொடங்கி மனச் சிதைவு எனும் மனோவியாதிவரை கொண்டுபோய்விடுவதற்கு இவையே காரணம். குறிப்பாக, இந்தத் தலைமுறையினருக்கு உளவியல் சம்பந்தமான பிரச்னைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக  சொல்கிறார்கள் மன நல மருத்துவர்கள். இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது பற்றி இங்கே நாம் ஆராயப் போவதில்லை. ஆனால், அதைக் கடந்து செல்லவும் புதிதாக பிரச்னைகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓர் எளிய வழிமுறை இருக்கிறது. அது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை. மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தினால் போதும், பெரிய சங்கடங்களிலிருந்து சிறிய மனக்கிலேசம் வரை தவிர்த்துவிடலாம். அவை, ‘சாரி...’, ‘தேங்க்யூ...’, ‘ப்ளீஸ்...’ இவை வெறும் வார்த்தைகள் அல்ல. நம் வாழ்க்கைக்கான சக்சஸ் ஃபார்முலா என்றே சொல்லலாம். 

நன்றி - தேங்க்யூ


2014-ம் ஆண்டு, அமெரிக்காவின் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோ தத்துவ நிபுணர் சாரா அல்கோ (Sara Algoe) என்பவர் ’தேங்க்யூ’ என்ற வார்த்தை தரும் பலன்களைப் பரிசீலிக்கும்படி ஒரு பரிந்துரையை முன்வைத்தார். அதன்படி, ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு, ஆச்சர்யமான பல முடிவுகளை வெளியிட்டது. ` ‘நன்றி” (Thank you) என்கிற வார்த்தை ஒரு மரியாதையான சொல் மட்டுமல்ல; அதையும் தாண்டி, அது சமூகத்தில் பலருடன் நல்ல உறவை வளர்ப்பதற்கு மூல காரணமாகவும் இருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு. இதுதான், அந்த ஆய்வின் அடிநாதமாக இருக்கும் விஷயம். 


உங்களுக்கு யாரோ ஒரு வேலையை  செய்து கொடுக்கிறார்; உதவுகிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ‘தேங்க்யூ’ சொல்லிப் பாருங்கள். எதிராளி அந்த ஒரு வார்த்தையில் பரம திருப்தி ஆகிவிடுவார். திரும்பவும் உங்களுக்கு உதவத் தயாராகவும் ஆகிவிடுவார்.  

மன்னியுங்கள் - சாரி!

    
வீடு, அலுவலகம் எதுவாகவும் இருக்கட்டும்... ஒரு பெரிய பிரச்னை ஒரு சிறு புள்ளியில்தான் தொடங்கும். அது வெடிப்பதற்கு முன்பாக அதன்முன் சரணாகதி ஆகிவிடுவதே புத்திசாலித்தனம். கணவன்- மனைவிக்கு இடையில், பேருந்தில் பயணம் செய்யும்போது பக்கத்தில் நிற்பவர் காலை மிதிப்பது, பைக்கில் போகும்போது எதிரே வரும் வண்டியை இடிப்பது, என பிரச்னை எதுவாகவும் இருக்கட்டும், ஒரு ‘சாரி’ போதும். நிலைமையை கூலாக்கிவிடும். ’சாரி’ கேட்பது ஒன்றும் கௌரவக் குறைச்சலான விஷயம் அல்ல. ‘அந்த ஆள்கிட்ட போய் நான் மன்னிப்பு கேக்கணுமா? அதுக்கு வேற ஆளப் பாரு’ என்கிற மனோபாவம், பிரச்னையின் தீவிரத்தை அதிகமாக்குமே தவிர, குறைக்க உதவாது. அதேபோல, ’சாரி’ கேட்பதால், நமக்கொன்றும் நஷ்டம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், பாதிக்கப்பட்டது நாம் இல்லை.

தயவு செய்து... ப்ளீஸ்!


வங்கிக்கு செல்கிறவர்கள், முக்கியமாக பணம் செலுத்தவோ, எடுக்கவோ போகிறவர்கள் மறக்கக் கூடாத பொருள் ஒன்று உண்டு. அது பேனா. 100-க்கு 10 பேர் பேனாவை மறந்துவிடுவார்கள் என்பதே யதார்த்தம். நமக்கே அது நடந்திருக்கும். அப்படியான சந்தர்ப்பத்தில், ‘கொஞ்சம் பேனா குடுக்குறீங்களா?’ என்று கேட்கும்போது, அந்த வாக்கியத்தின் முன்னால், ‘தயவு செய்து...’ அல்லது ‘ப்ளீஸ்’ என்று ஒரு வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்களேன். வங்கி வேலை முடிந்து கிளம்புகிறவரே ஆனாலும், அவரால் உங்களுக்கு பேனா இல்லை என்று மறுக்க முடியாது. ‘ப்ளீஸ்...’ என்கிற வார்த்தைக்கு அத்தனை மகத்துவம் உண்டு. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், `ப்ளீஸ்... உங்களால முடியும். தயவுசெஞ்சு கொஞ்சம் இதை பண்ணிக் கொடுங்களேன்’ என்று கேட்டுப் பாருங்கள். எல்லா சந்தர்ப்பத்திலும் அது கை கொடுக்கும். அதேபோல ஒரு க்ளையன்டுக்கு ஒரு வேலையை குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து கொடுப்பதாக ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், நேரத்துக்கு வேலை முடியவில்லை. அந்தச் சமயத்தில், `ப்ளீஸ்... இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்களேன்’ என்று தன்மையாகக் கேட்டுப் பாருங்கள். க்ளையன்ட் கண்டிப்பாக இறங்கிவருவார். 


அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, ‘தேங்க்யூ’, ‘சாரி’, ‘ப்ளீஸ்’ என்று சொல்வதை ஒரு பழக்கமாக, வாழ்க்கை முறையாகவே வைத்துக்கொள்ளலாம். அது நமக்கு வரும் எத்தனையோ இன்னல்களை தவிர்த்துவிடும்; உறவுகளோடு சுமுகமாக இருக்க உதவும்; நம் வெற்றிக்கு உதவும். திரும்பவும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம். ‘தேங்க்யூ’, ‘சாரி’, ‘ப்ளீஸ்...’ இவை வெறும் வார்த்தைகள் அல்ல; நம் வாழ்க்கைக்கான சக்சஸ் ஃபார்முலா!


- ஜி.லட்சுமணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement