Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபலங்களின் டயட்டீஷியன் ருஜுதா சொல்லும் 7 உணவு விதிகள்!

அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் ருஜுதா திவேகர். இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை. சமீபத்தில் இவர் எழுதியுள்ள ‘இந்தியன் சூப்பர் ஃபுட்ஸ்’ (Indian super foods) புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார்.  ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே. 


1.  உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, “அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட். எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 


2. நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள். நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள். 


3. தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை. தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது; கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி. பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள். 
4. கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.


5. தைராய்டு பிரச்னை பலரை வாட்டி  வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு. முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள். குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள். நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.  

6. சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். 

 

 

7. பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும். ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு  ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள். சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள். உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான். வாழ்த்துகள். 


- பு.விவேக் ஆனந்த்

படம் : உ.கிரண் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement