வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (15/10/2016)

கடைசி தொடர்பு:12:28 (15/10/2016)

வாங்க... கை கழுவலாம்! - #GlobalHandwashingDay

 

‘அந்த ஆளைக் கை கழுவிட்டேன்பா’ என்று யாராவது வேதனையோடு சொல்லியிருப்பார்கள்; அதையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் கேட்டிருப்போம். நெருக்கமாக நேசித்த ஒருவரை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளுவதை விடுங்கள்! கை கழுவுதல் அத்தனை சாதாரண விஷயம் அல்ல பாஸ்! சுத்தமாகக் கைகளை வைத்திருந்தால், வயிற்றுப்போக்கு, நிமோனியா உட்பட பல வியாதிகளைத் தடுக்கலாம்; நோய்த்தொற்று வராமல் காக்கலாம்; ஆரோக்கியமாக வாழலாம். இவையெல்லாம் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். அதனால்தான் அக்டோபர் 15-ம் தேதியை உலக கை கழுவுதல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். 

சுவாசப் பிரச்னைகள் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இறக்கும் குழந்தைகளின் இறப்பைக் குறைக்கவே ஆரம்பத்தில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. அதாவது, சோப் போட்டு கைகளைக் கழுவினால் இந்த பாதிப்புகளைப் பெருமளவுக்குக் குறைத்துவிடலாம். சோப், கிருமி நாசினியால் கைகளைச் சுத்தமாகக் கழுவுவது எப்படி என்பது ஒரு பிரசாரமாகவே மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டது. சாப்பிடுகிறோம்... கை கழுவுகிறோம்; கழிவறைக்குச் செல்கிறோம்... கை கழுவுகிறோம்; வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய பிறகும் கால்களையும் கைகளையும் கழுவுகிறோம்... ஆனால், அதை முறைப்படி செய்கிறோமா என்று கேட்டால் நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் செய்வது இல்லை என்பதே உண்மை. அப்படிச் செய்யாத காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகுறோம்; ஆரோக்கியத்தையும் இழக்கிறோம்.  

2008-ம் ஆண்டு `குளோபல் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ஃபார் ஹேண்ட்வாஷ்’ அமைப்பு இந்த தினத்தை ஆரம்பித்து வைத்தது. ஐநா பொதுக்குழு, 2008-ம் ஆண்டை ‘உலக சுகாதார ஆண்டாகக்’ கடைப்பிடித்தது. அதன் ஓர் அங்கமாகத்தான் அக்டோபர் 15-ம் தேதி ‘உலக கைகழுவுதல் தினம்’ என அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். முதல் கை கழுவுதல் தினத்தன்று இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் சக தோழர்களுடனும் கலந்துகொண்டார். அன்று, இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 10 கோடி மாணவர்கள் இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்த பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். 

முறையாகக் கைகளைக் கழுவுவது எப்படி? 

* குழாய்த் தண்ணீரில் கைகளை நீட்டிக் கழுவ வேண்டும்.
* சோப்பு அல்லது லிக்விட் சோப்பை உள்ளங்கை, புறங்கையில் பரவலாகப் பூச வேண்டும். 
* இரு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
* இப்போது வலது உள்ளங்கையால் இடது புறங்கையைத் தேய்க்கவும்; அதேபோல இடது உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்க வேண்டும்.
* இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, விரல்களைக் கோர்த்து, விரல் இடுக்குகளைத் தேய்க்க வேண்டும்.
* இப்போது விரல்களை மடக்கி, இடது உள்ளங்கையின் மேல் வலது கை விரல்களை வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும். அதேபோல வலது உள்ளங்கையின் மேல் இடது கை விரல்களை மடக்கி வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும்.
* இடது கை கட்டை விரல் நுனியை, வலது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்கவும். அதேபோல வலது கை கட்டை விரல் நுனியை, இடது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்க வேண்டும்.
* வலது கை விரல்களால் இடது உள்ளங்கையிலும், இடது கை விரல்களால் வலது உள்ளங்கையிலும் சுழற்றிச் சுழற்றித் தேய்க்க வேண்டும்.
* இப்போது கைகளை குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். 
* துண்டால் கைகளை நன்கு துடைக்கவும். 

கை கழுவ இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்று யோசிக்க வேண்டாம். இவ்வளவையும் ஒரு சில விநாடிகளில் முடித்துவிட முடியும். இதனால், கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு ஆரோக்கியம் காக்கப்படும்.

வாங்க... கை கழுவலாம்! 

- பாலு சத்யா

படம்: கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்