டெங்குவைத் தொடர்ந்து ஜப்பானிய மூளைக் காய்ச்சல்! உஷார் டிப்ஸ்

 

 

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என கொசுவால் வரக்கூடிய காய்ச்சல் வரிசைகட்டி வருவதைத் தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னும் ஒரு புதிய காய்ச்சல் வரவாக வந்திருக்கிறது. சமீபத்தில் ஒடிஸா மாநிலத்தில் 34 நாட்களில் 50 குழந்தைகளைப் பலி வாங்கியிருக்கிறது ‘ஜப்பானிய மூளைக்காய்ச்சல்’. நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த செய்தி. அது என்ன  ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்று டாக்டர் குழந்தைசாமியிடம் கேட்டோம். 1871 ம் ஆண்டு முதன்முறையாக ஜப்பானில் இந்த வைரஸ் பரவியது. அதனாலேயே இந்த வைரஸ்ஸுக்கு, “ஜாப்பனீஸ் என்செபாலிடிஸ் வைரஸ்- ஜேஇவி” (Japanese Encephalitis Virus - JEV) என்று பெயர். இந்த வைரஸ், கியூலெக்ஸ் (Culex) வகை கொசுக்களால் பரப்பப்படுகிறது.

எப்படிப் பரவுகிறது?

கிராமப்புறங்களில் உள்ள வயல், வாய்க்கால் நீர் வரப்பில் இந்த வகைக் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. வயல்களில் உள்ள புழு, பூச்சிகளைத் தின்னும் பறவைகள் மற்றும் பன்றிகள் ஆகியவற்றை இந்த கியூலெக்ஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலமாக கொசுக்களின் உடலில் உள்ள இந்த வைரஸ் வீரியம் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தக் கொசுக்கள் மனிதனைக் கடிக்கும்போது, வைரஸ்கள் மனிதனுக்குத் தொற்றி ஜாப்பானிய மூளைக்காய்ச்சல் உருவாகிறது. பறவைகளையோ பன்றிகளையோ கடிக்காமல் இந்தக் கொசு நேரடியாக மனிதர்களைக் கடித்தால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே இந்த வைரஸ் கிருமியை அழித்துவிடும்.  பறவைகள், விலங்குகளைக் கடித்துவிட்டு மனிதரைக் கடிப்பதுதான் பாதிப்புக்கு முக்கியக் காரணம்.  

வெப்பமண்டல நாடுகளில் (Tropical area) மழைக் காலங்களிலும், வயலில் நெல் அறுவடைக்குத் தயாராவதற்கு முந்தையக் காலங்களிலும் இந்த வைரஸ் பரவுகிறது. வடதுருவத்துக்கு அருகே உள்ள (Temperate area) ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கோடை காலங்களில் இந்த வைரஸ் பரவுகிறது.

 

கிராமப்புறங்களில் உள்ள கிணறு, ஏரி, வாய்க்கால், முதலிய நீர்நிலைகளில் இந்தக் கொசுக்கள் அதிகமாகக் காணப்படும். நகரங்களில் இதன்தாக்கம் குறைவுதான். பெரும்பாலும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக இந்த வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஜப்பான், இந்தியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை இந்த வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் வருடத்துக்கு 68,000 பேர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுள் 30 சதவிகிதத்தினர் இறக்கின்றனர். இந்தக் காய்ச்சலிலிருந்து தப்பித்தவர்களில் 30 முதல் 50 சதவிகிதம் பேர் மனஅழுத்தம் அல்லது நரம்பு சம்பந்தப் பட்ட கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட 250 பேரில் ஒருவருக்கு நோய் தீவிரம் அடைகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள்!

பெருபாலான வைரஸ் காய்ச்சல்கள் போல, மனித உடலுக்குள் சென்ற 5-15 நாட்களில் இந்த வைரஸ் அறிகுறிகளைக் காட்டும்.

தலைவலி, காய்ச்சல், கழுத்துத் தசை இறுக்கம், வாந்தி ஆகியவை இந்தக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள். அடுத்த கட்டமாக மனஅழுத்தம், படபடப்பு, உடல் சோர்வு, கைகால் மூட்டுவலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து கவனிக்காமல் விடும்போது பக்கவாதம் ஏற்பட்டு கோமா  நிலைக்குப் போய் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தக் காய்ச்சலில் இருந்தது தப்பித்தவர்களுக்குப் பின்னாட்களில் பக்கவாதம், வலிப்பு, மனஅழுத்தம் ஆகியவை ஏற்படவும், சிலருக்குப் பேச்சு வராமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

சிகிச்சைகள்

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸை முற்றிலுமாக அழிக்க மருந்துகள் இல்லை. நோயாளிகள் முதற்கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். ரத்தத்தில் உள்ள சீரம் (Serum) அளவு மற்றும் மூளை திரவம் (Cerebrospinal fluid) ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோயின் தீவிரம் தீர்மானிக்கப்படும்.  காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்துகள் தரப்படும். காய்ச்சலின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வலிநிவாரண மாத்திரைகள், திரவ உணவுகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். 

 

தடுப்பு மருந்துகள்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு உலக அளவில் நான்கு வகைத் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட எஸ் ஏ14-14-2 (SA 14-14-2) எனப்படும் தடுப்பு மருந்துதான் வீரியம் அதிகம் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள்

தமிழகத்தில் வேலூர், தஞ்சை மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் அதிக மக்களைத் தாக்குகிறது. பீகார், ஒடிஸா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் இந்த வைரசின் தாக்கம் அதிகம். மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுப்படி அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைரஸ் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கிப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதிய அளவு தடுப்பு மருந்துகள் இருப்பில் உள்ளன. குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் ஆகியோர் வயல் வரப்புகள், கொசுப் பெருக்கம் உள்ள நீர் நிலைகளுக்கு அருகில் போகாமல் இருப்பது நல்லது.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!