Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெயில் நல்லது! அக்டோபர் 20, எலும்பு அடர்த்திக் குறைவு நோய் தினம்

லும்பு, மனித உடலுக்கு வடிவத்தையும் வலிமையையும் கொடுத்து, நடமாடும் இயக்கத்தைக் கொடுக்கிறது. மூளை, இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உள் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதும் எலும்புகள்தான். எலும்புகள்,  நமது உடல்நலத்துக்குவேண்டிய கால்சியத்தை சேமித்துவைத்து, தேவையானபோது உடலுக்குத் தருகின்றன. எலும்பின் மஜ்ஜையில்தான் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் உருவாகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எலும்பின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப் பலருக்கும் நேரமில்லை. எலும்பு ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவே ‘ஆஸ்டியோபொரோசிஸ் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. ‘எலும்பை நேசியுங்கள், எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ ( Love Your Bones: Protect Your Future)  என்ற இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன வாழ்க்கைமுறை...  டி.வி., கணினி, டேப்லெட், மொபைல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் வரவு... வீடியோ கேம் தொடங்கி ஆண்ட்ராய்டு வரை உட்கார்ந்த இடத்திலேயே விளையாட்டு... அவ்வளவு ஏன், உடற்பயிற்சிக் கூடம்கூட வீட்டுக்குள்... இப்படி மனிதர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட எண்ணற்ற விஷயங்கள்! விளைவு... நம்மில் பலரும் தேடிப்போய் வாங்கி வந்திருக்கும் சீதனம்... `ஆஸ்டியோபொரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய்!

 இந்த நோய் ஏற்பட முக்கியமான காரணங்களில் வெயிலும் ஒன்று என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. பகல் நேரங்களில் மொட்டை மாடிக்குச் செல்வதற்கு நமக்கு நேரமில்லை. நகரக் குழந்தைகளின் நிலையோ இன்னும் மோசம். வீட்டின் வாசலுக்கே வந்து ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள்; விடுமுறை நாட்களில்கூட மாலை நேர சிறப்பு வகுப்புகள்... பல வீடுகளில் குழந்தைகள் கூண்டுக்கிளிகளைப் போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். வெயிலில் விளையாட அனுமதி இல்லை; நேரமும் இல்லை.

`வெயில்ல விளையாடினால் என்ன..? அதனால என்ன பாதிப்பு வந்துடப் போகுது..?’ என்று தோன்றலாம்.   

எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதுமை, பொதுவான ஒரு காரணம்.  அதேபோல, இளம் வயதிலேயே விளையாட்டுகளில் ஈடுபாடு இன்மை,  உடற்பயிற்சியின்மை, சூரிய ஒளி உடலில்படாததால் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு போன்றவையும் எலும்பு தன் வலிமையை இழப்பதற்கான காரணங்களே!

குறிப்பிட்ட  கால இடைவெளியில் ஒவ்வோர் எலும்பும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும்.  அந்தச் சமயங்களில் எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகும். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். சிலருக்குப் பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும்.  
அதோடு எலும்புகளில் கால்சியம் சேர்வது குறைந்து, பலவீனம் அடையும். அதனால், எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படும்.
 
இதன் காரணமாக, `ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய் ஏற்படுகிறது என எச்சரிக்கிறார்கள் மூட்டு எலும்பு நோய் மருத்துவர்கள்.

பிற காரணங்கள்...
இது தவிர, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால், இவர்களுக்கும் எலும்பு பலவீனம் அடைந்து இந்த நோய் வந்துவிடுகிறது.  

இது வயது முதிர்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் வரலாம். ஊட்டச்சத்து குறைபாடு, தைராய்டு நோய் மற்றும் சர்க்கரைநோய் உள்ள குழந்தைகளையும் இந்த நோய் அதிகம் பாதிக்கும்.

பரிசோதனை
ஆஸ்டியோபொரோசிஸை துல்லியமாகக் கண்டறிய ‘டெக்ஸா ஸ்கேன்’ (Dua X-ray absorptiometry Scan - Dexa Scan) எனும் பரிசோதனை முறை உள்ளது. மேலும் ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மூலமும் கண்டறியலாம். எலும்பு மீளுருவாக்கம் (Bone Turnover) சோதனை மூலமாக இந்த நோய் கண்டறியப்படுகிறது.

அமைதியாகக் கொல்லும் நோய்!
இந்த நோய் வரும்முன் அறிகுறிகள் தெரிவதில்லை. எலும்பு முறிவு அல்லது வலி தோன்றும்போது மட்டுமே அறிய முடியும். எனவே, இந்த நோய் `ஆபத்தான, அதேநேரம் அமைதியாகக் கொல்லும் நோய்’ எனப்படுகிறது.

ஆஸ்டியோபொரோசிஸில் இருந்து தப்பிக்க...
கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகளான  பால், தயிர், மோர், பசலைக்கீரை மற்றும் உலர்ந்த பழங்களைச் சாப்பிட வேண்டும். சூரிய ஒளி உடலில்படும் வகையில் நிற்பதன் மூலம், வைட்டமின் டி சத்துக்களைப் பெறலாம்.
புகைப் பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா மற்றும் எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

வெயிலோடு விளையாடு!


பள்ளிகளில் மாணவர்களுக்குப் படிப்பில் நாட்டத்தை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், அவர்களை விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தவேண்டும். அவர்களைத் தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
ஆக, உலக எலும்பு அடர்த்திக் குறைவு நோய் தினம் சொல்லும் செய்தி... எலும்பு ஆரோக்கியத்தைக்  கருத்தில் கொண்டு, வெயிலோடு விளையாடுங்கள்; ஆனால், அது காலை மற்றும் மாலை வெயிலாக இருக்க வேண்டும்.

பெரியவர்கள் காலை 6-8 மணிக்குள் சூர்ய நமஸ்காரம், தோட்ட வேலை என வெயிலில் செய்ய வேண்டிய வேலைகளை செய்யலாம். இதனால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.

காலையில் வரும் இளம் வெயிலை 2-3 நிமிடங்கள் வரை பார்ப்பது நல்லது.

வலிமையான எலும்புகளை பெற உடற்பயிற்சி செய்யுங்கள்.

வெயில் உடல்நலத்துக்கு நல்லது!

- ஜி.லட்சுமணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement