அயோடின் சத்து ஏன் அவசியம் தேவை? | Global Iodine definition day

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (21/10/2016)

கடைசி தொடர்பு:17:24 (21/10/2016)

அயோடின் சத்து ஏன் அவசியம் தேவை?


 

யோடின் ஒரு நுண்ணிய உணவு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் 'தைராக்ஸின்' ஹார்மோன் உதவுகிறது. அந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட உதவுவது அயோடின். இன்றைய நாளை, அயோடின் குறைபாடு தினமாக உலகமே அனுசரிக்கிறது. அது ஏன்? விளக்கமளிக்கிறார் சாத்தூரைச் சேர்ந்த பொது மருத்துவர் அறம்.

அயோடின் தினத்தின் நோக்கம் :

ஒரு குழந்தை அம்மாவின் வயிற்றில் சிசுவாக உருவாவது முதல், வயதாகி முதுமைப் பருவம் அடைவது வரை, மனிதர்களின் வளர்ச்சியில் அயோடின் ரொம்ப முக்கியமானது. உலக மக்களுக்கு அயோடின் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தவே 'உலக அயோடின் குறைபாடு தினம்' அனுசரிக்கப்படுகிறது.

'அயோடின்' என்ற பெயர் எப்படி உருவானது?

'அயோடின்' என்ற சொல் கிரேக்க மொழியின் ‘ioeides’ என்னும் சொல்லில் இருந்து உருவானது. பொதுவாக, அயோடினை சூடுபடுத்தும்போது ஊதா அல்லது செந்நீலம் ஆகிய  நிறங்களில், இவற்றின் புகை இருக்கும். இதன் வேதியியல் குறியீடு ‘ I ’. 

அயோடின் குறைபாடு என்றால் என்ன?

நம் உடலில், கழுத்தின் முன்பகுதியில், தைராய்டு சுரப்பி காணப்படுகிறது. இந்த சுரப்பி ரத்தத்தில் உள்ள அயோடினையும் சில புரதப் பொருட்களையும் இணைத்துக்கொண்டு, தைராக்ஸின் மற்றும், ட்ரை - அயோடோ - தைரோனின் எனும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. அயோடினின் அளவு ரத்தத்தில் குறைந்தால், மேலே குறிப்பிட்ட இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இந்த 2 ஹார்மோன்கள் இல்லையென்றால், உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. இவ்வாறு ரத்தத்தில் அயோடின் குறைவதையே, அயோடின் குறைபாடு என்கிறோம்.

அறிகுறி:

தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டால், மனிதனுடைய முன்கழுத்தில் வீக்கம் உண்டாகும். இப்படி வீக்கம் ஏற்பட்டிருந்தால், அயோடின் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

அயோடின் வேண்டிய அளவு:

ஒவ்வொருவரின் உடலுக்கும் சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. பால், முட்டை, கடல் மீன், மாமிச உணவு மற்றும் தானிய வகைகளிலும் இயற்கையாகவே அயோடின் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் :

உடல் வளர்ச்சி குறைவு, பசியின்மை, மலச்சிக்கல், மனச்சோர்வு, உடல் சோர்வு, அதிக தூக்கம், உடல் பருமன் அதிகரித்தல், குரலில் மாற்றம், தோல் கடினத்தன்மை அடைதல், முடி உதிர்தல், பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சிக் குறைவு போன்ற பல பிரச்னைகளை அயோடின் குறைபாடு உண்டாக்கிவிடும்.

பாதிக்கப்பட்டவர்கள்: 

·    உலகம் முழுவதும் 54 நாடுகளில் அயோடின் சத்துக் குறைபாட்டு நோய்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

·    உலகம் முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் அயோடின் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

·    இந்தியாவில் 200 மில்லியன் பேர் அயோடின் குறைபாடு உடையவர்களாகவும், 71 மில்லியன் பேர் நோய் பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
 

அயோடின் குறைபாட்டை நீக்க இந்திய அரசு மேற்கொண்ட திட்டங்கள்:

·    1962 -ல் தேசிய முன்கழுத்துக் கழலை கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

·    1994 -ல் இருந்து தேசிய அயோடின் குறைபாட்டு நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டம் (NIDDCP) செயல்பட்டு வருகிறது.

·    உணவுக்குப் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கட்டாயம் கலக்கப்பட வேண்டும் என 1984 - ம் ஆண்டு, சட்டம் நிறைவேறியுள்ளது.

·    தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 124 லட்சம் டன் அயோடின் கலந்த உப்பு தயாரிக்கிறார்கள். ஆனால், நம் இந்தியாவின் தேவையோ, ஆண்டுக்கு 50 லட்சம் டன் தான்.

·    இந்திய அளவில் அயோடின் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 324 மாவட்டங்களில், 263 மாவட்டங்களில் அயோடின் குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டறியும் முறை:

 

·    பிறந்த எல்லா குழந்தைக்கும் உடலில் தைராய்டு அளவைக் கண்டறிய TSH (Thyroid stimulating harmone )  பரிசோதனை மேற்கொள்ளலாம்.  பெரும்பாலும் அயோடின் குறைபாட்டுப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணப்படுத்திவிட முடியும்.

·     கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும், கர்ப்பம் உறுதியானதும் TSH பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

கட்டுரை - சி.சிங்கராஜ் , லோ. பிரபுகுமார் (மாணவப் பத்திரிகையாளர்கள்) 
படம்- கா.அசோக் பால் ராஜன்  (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்