தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!

 

 

ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தால், எத்தகைய தரமான இயந்திரமும் பழுதாகிவிடும். அப்படியிருக்க, தினமும் உடலாலும் மனதாலும் வேலைசெய்யும் மனிதனுக்கு ஓய்வு மிக அவசியம் அல்லவா? உடம்புக்கும் மனதுக்கும் பூரண ஓய்வு தருவதற்காக இயற்கை ஏற்படுத்திய ஒரு ஏற்பாடே தூக்கம். தூக்கம் மட்டும் இல்லையென்றால், மனிதனின் உடல், மன ஆரோக்கியம் கெட்டுவிடும்.


ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் நமது தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருப்பதைக் காண்கிறோம். குறிப்பாக, ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இடையில் பலமுறை எழுவது, தூக்கத்தில் இருந்து விழித்த பின்னர் மீண்டும் தூக்கம் வர அதிக நேரம் பிடித்தல் என நிம்மதியான தூக்கம் என்பது கனவாகிவருகிறது. தூக்கத்துக்காகப் பலரும் தூக்க மாத்திரைகளை நாடுகிறார்கள். ஆனால், இந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் உயிருக்கே உலை வைத்துவிடும். தூங்கும் நேரம் மிக அதிகமானாலும் சரி! குறைந்துபோனாலும் சரி! பிரச்னைதான்!


இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாததற்குச் சில பழக்க வழக்கங்களும், உண்ணும் உணவுகளும்கூட காரணமாக இருக்கலாம். எனவே, நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால், சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். 


செய்ய வேண்டியவை...

தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கச் சென்று,  குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்துகொள்வதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* தூங்கச் செல்வதற்குக் குறைந்தது  ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும்.

* இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.

* தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

* மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பது போன்றவையும் தூக்கத்தை வரவழைக்கும்.

* தூங்குவதற்கு முன்னர், மன அமைதி கிடைக்க, உறவினர்கள் அல்லது  நண்பர்களுடன் ரிலாக்ஸாக அரட்டை அடிக்கலாம்.

* படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது.

* தூக்கத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள, மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

* இரவில் பசும்பால் குடிப்பது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து சாலட் செய்து, ஒரு கப் அளவுக்கு சாப்பிடலாம். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

 


செய்யக் கூடாதவை...

* தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

* தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கு முன் டீ, காபி, மது என எதையும் குடிக்கக் கூடாது.

* இரவுகளில் பயமூட்டும் த்ரில்லர் அல்லது பயங்கரமான ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும்.

* தூங்குவதற்கு முன் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க வேண்டாம். ஏனெனில் அவை சிந்தனையைத் தூண்டுவதால் மூளை சுறுசுறுப்பாகி விடும், இதனால் கூட தூக்கம் பாதிக்கும்.

* நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக்க கூடாது.

* நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடாதீர்கள்.

* மதியம் மற்றும் மாலை நேரத் தூக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது இரவு தூக்கத்தை பாதிக்கும்.

* படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதோ,  டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது.

*  இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றில் மின்னணுப் புத்தகத்தை ( e book) படிப்பதைத் தவிர்க்கலாம்.

* இரவுகளில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, மாமிசம், எண்ணெயில் பொரித்த சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

- ஜி.லட்சுமணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!