உடல் எடையை இப்படியும் குறைக்கலாம்! தமிழக அரசின் 'திடீர் சேவை' | You can reduce body weight by this way too...! - Tamil Nadu governments's sudden care!

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (26/10/2016)

கடைசி தொடர்பு:18:00 (26/10/2016)

உடல் எடையை இப்படியும் குறைக்கலாம்! தமிழக அரசின் 'திடீர் சேவை'

 

ண்டு தோறும் அக்டோபர் 26-ம் தேதி, உலகின் பல பகுதிகளிலும் 'உலக உடல் எடை குறைப்பு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சேவையான 104 மருத்துவ உதவி மையத்தின் சேவையிலும், இன்றைய தினம், 'உலக உடல் எடை குறைப்பு' தினமாக அனுசரிக்கப்படுவதாக 104 சேவை மையம் அறிவித்துள்ளது. 

குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும், வேறு சில தினங்களிலும் உடல் எடை குறைப்பு தினம் அனுசரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இன்றைய தினத்தின் ஸ்பெஷலாக, தமிழ்நாடு அரசின் 24 மணிநேர 104 மருத்துவ உதவி மையத்தில், உடல்நலம் மற்றும் மனநலத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உடல் எடை குறைப்பு தொடர்பாக மருத்துவ ஆலோசனைகள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென, பயிற்சி பெற்ற செவிலியர்கள் ,மருத்துவர்கள், அரசு மருத்துவ கல்லூரியிலிருந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் ஆகியோர் மருத்துவ தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

உணவுக்கட்டுப்பாடு, உணவு வகைகள், ஊட்டச்சத்துக்கள், உணவு உண்ணும் முறை, தினமும் மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சிகள், யோகா முறைகள், உடல் எடையை கட்டுப்படுத்த அல்லது குறைக்க உதவும் இயற்கை மருத்துவம், சிகிச்சை முறைகள் ஆகியவை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை  வழங்கி வருகின்றனர்.
தன்னம்பிக்கை பிறக்கவும், தாழ்வுமனப்பான்மையில் இருந்து விடுபடவும் உளவியல் ஆலோசகர்களால் மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும், 24 மணி நேரமும் 104 மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், 104 மருத்துவ உதவி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
"உடல் எடை கூடுவதற்கு பல காரணங்கள் உண்டு,  தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, சுய மருத்துவம், ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு பிரச்னை, மரபியல் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரித்தவர்கள், இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிலர் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர். நண்பர்கள், பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தன்னம்பிக்கை குறைந்து, கிண்டல் கேலிக்கு ஆளாகி பாதிக்கப்படுவதையும்  காண முடிகிறது. 

அதிக உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களுக்கான அடிப்படை காரணமாக அமைந்துவிடுவதாகவும் சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதனால், இந்த 'உலக உடல் எடை குறைப்பு தினத்திலாவது', உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்வோம் என உறுதி ஏற்போம்" என்றார் 104 மருத்துவ உதவி மையத்தில் சேவையாற்றி வரும் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி.

- ரா.வளன்      


 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close