Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்! #ChildCare

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து; `ஷொட்டு' கொடுத்து வளர்க்க வேண்டும். பாராட்டி, ஊக்குவித்து வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்கிறது; தனித்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் சாதனை படைக்கிறது. மாறாக, எப்போதும் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது, குழந்தைகளைக் குறுகவைத்துவிடுகிறது. 

``அந்த பையனை பாரு... எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயும் இருக்கியே!”, ``எப்பப் பாரு விளையாட்டு... நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரப்போறே?” இப்படி எப்போதும் அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட்டு, மட்டம் தட்டி, குறைகூறி, குற்றம் சொல்லிச் சொல்லி குழந்தைகளின் தனித்திறமையை மங்கிப்போகச் செய்துவிடுகிறார்கள் பலர். குழந்தைகளின் இயல்பான ஈடுபாட்டில் இருந்து வேறெங்கோ திசைதிருப்பிவிடுகிறார்கள். அதனாலேயே குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக, தனித்திறமையோ, தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக வளர்கிறார்கள். நம்மைப்போலத்தான் குழந்தைகளும். நம் எல்லோருக்குமே ஏதோ ஓர் அங்கீகாரம் தேவையாக இருக்கிறது. ஒரு சின்ன பாராட்டு, மலையளவு தெம்பைத் தந்துவிடும்; அதுவேதான் குழந்தைகளுக்கும். 
குழந்தைகளிடம் நாம் பேசவேண்டியவை, பேசக் கூடாதவை, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் கவனமாக இருத்தல் எனச் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்... குழந்தைகள் உங்களை மட்டுமல்ல, தங்களையும் உணர்ந்துகொள்வார்கள்.

குழந்தைகளுக்கு அன்றாடம் சொல்லவேண்டிய எட்டு விஷயங்கள் இங்கே... 

1. இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெரியவர்களுக்கே இருப்பதில்லை. குழந்தைகளுக்கு இருந்தால் அது அபூர்வம், பாராட்டப்படவேண்டிய விஷயம் அல்லவா! அம்மா தன் எட்டு வயது மகளோடு நகரப் பேருந்தில் செல்கிறார். இருவருக்கும் உட்கார இருக்கை கிடைத்துவிடுகிறது. அடுத்த நிறுத்தத்தில், ஒரு தந்தை தன் நான்கு வயது மகனோடு பேருந்தில் ஏறுகிறார். கூட்ட நெரிசல். நிற்பதற்கே தள்ளாடுகிறான் அந்தச் சிறுவன். அப்போது, அந்தச் சிறுமி, “இங்கே வந்து உட்காருப்பா” என்று நகர்ந்து, தன் இருக்கையில் கொஞ்சம் இடம் கொடுக்கிறாள். பேருந்தில் இருந்து இறங்கியதும் அந்தத் தாய், மகளின் தலையை வருடி, “இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!” என்கிறார். குழந்தைகளின் நடத்தையில் நல்ல விஷயங்கள் தென்படும்போது சொல்கிற இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகம் கொள்ளவைப்பவை; நன்னடத்தைப் பக்கம் அவர்களைத் திசை திருப்புபவை.  

2. ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு! 

குழந்தை மாதாந்திரத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியதாக இருக்கட்டும்; பள்ளி ஃபுட்பால் போட்டியில் கலந்துகொள்ள பெயரைக் கொடுத்துவிட்டு வந்ததாக இருக்கட்டும்; அவ்வளவு ஏன்... பிரேயரில் அன்றையச் செய்திகளை வாசித்ததாகவே இருக்கட்டும்... “ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு!” என மனமாரச் சொல்லுங்களேன். இது வெறும் வாசகம் அல்ல; அவர்களுக்குத் தங்கள் மேலான மதிப்பைக் கூட்டும் மாமந்திரம். தொடர்ந்து, இதுபோலப் பல செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் அவர்களுக்கு எழும்.  

3. உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன்!

“அப்பா, டிராயிங் போட்டியில எனக்கு இரண்டாவது பரிசு” என்று வந்து நிற்கிறது குழந்தை. பள்ளி, டியூஷன், ஹோம்வொர்க்... என அன்றாட வேலை பளுக்களைத் தாண்டி குழந்தையின் தனித் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது. அப்போது மறக்காமல், “உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன் கண்ணா!” என்று நல்ல வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்ட வேண்டும். ஒரு நல்ல செயலைச் செய்து முடிக்கும்போது அவர்களுக்கு இது தேவையாக இருக்கிறது. 

4. உன்னால மட்டும்தான்டா இது முடியும்! 

எல்லா வேலைகளையும் எல்லோராலும் சிறப்பாகச் செய்ய முடியாது. ஆளுமைப் பண்போ, விளையாட்டில் சூரத்தனமோ, ஞாபகத்திறனில் அபாரத் தன்மையோ... ஏதோ ஒரு ஸ்பெஷல் அம்சம் குழந்தையிடம் இருக்கலாம். அப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்து முடிக்கும்போது, ``உன்னால மட்டும்தான்டா இது முடியும்” எனச் சொல்லிப் பாராட்டுவது, தங்கள் தனித்தன்மையே பலம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். 

5. நான் உன்னை முழுமனசோட நம்புறேன்!

நம்பிக்கை ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. குழந்தையை மனதார நம்புங்கள். அதை அவர்களிடம் தெரிவிக்கவும் செய்யுங்கள். நம்மைப் பெற்றோர் நம்புகிறார்கள் என்கிற எண்ணத்திலேயே தவறு செய்யத் துணிய மாட்டார்கள். நம்பிக்கை என்ற அடித்தளத்தை இடுவது குழந்தைகளை நேர்மையான மனிதனாக வளர்க்கும். 

6. இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! 

தயக்கம் பல நேரங்களில் பெரிய தடை; ஒரு நல்ல தொடக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது... அது மியூஸிக் கிளாஸோ, கராத்தே பயிற்சியோ, நீச்சலோ... குழந்தை தயங்கினால், அதை உடைக்க வேண்டும். ``இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!” போன்ற வாசகம், அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்புக்குரியவர்கள், தன் மேல் பெற்றோர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும். 

7. இதை செஞ்சு முடிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும்! 

`குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல...’ என ஒரு பழைய பழமொழி உண்டு. இன்றைய பிள்ளைகளின் பாடச்சுமை என்பது அப்படித்தான். இந்தச் சூழலில் குழந்தைகள் செய்கிற ஒவ்வொரு செயலையும் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பது மிக அவசியம். இரவு 9 மணி வரை படித்துவிட்டு, குழந்தை “அம்மா... நாளை டெஸ்ட்டுக்கு ரெடியாயிட்டேம்மா!” என்று சொல்கிறது. அப்போது, “வெரிகுட்! நீ படிச்சு முடிச்சிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்!” என்று அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்க முடியாதபடிக்கு சொல்லி உற்சாகப்படுத்தவேண்டியது மிக அவசியம். 

 

 

 

 

8. இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்! 

பிறந்த நாள், திருமண நாள் போல குழந்தைகளுக்கும் சில தினங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த தினம், செஸ் போட்டியில் சாதனை படைத்த நாள், பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற ரிசல்ட் வந்த தினம்... எதுவாகவும் இருக்கட்டுமே! அதைக் குறித்து வைத்திருந்து, குழந்தைகளிடம் அதைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. “இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்!” என்கிற வாசகம், அந்த நாளை அவர்களுக்குத் தனிச்சிறப்புள்ளதாக மாற்றிவிடும்.

- பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement