வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (03/11/2016)

கடைசி தொடர்பு:18:28 (03/11/2016)

குழந்தைகளுக்கு மருந்துகளைச் சரியாகத்தான் கொடுக்கிறோமா? - பெற்றோர் கவனத்துக்கு... #KidsSafety

 

குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் வீட்டில் எல்லோருமே பதற்றம் அடைவார்கள். உடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள். ஆனால், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சரியான அளவில், சரியான நேர இடைவெளியில் கொடுப்பதில் பல பெற்றோர்களும் கவனம் செலுத்துவதில்லை. இந்த கவனக்குறைவால் நோய் குணமடைவதில் சிக்கல் ஏற்படுவதில் தொடங்கி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேரும் விபரீதம் வரை ஏற்படலாம்.


''படிக்காத பெற்றோர்கள் மட்டுமல்ல,  படித்த பெற்றோர்களும் குழந்தைகளுக்கு மருந்து தருவதில் தவறுகள் செய்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று'' என்று உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த், குழந்தைகளுக்கு மருந்து தரும்போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்களை வலியுறுத்துகிறார் இங்கு...

1.  குழந்தைகளின் மருந்துகளை, பெரியவர்கள் மருந்துகளோடு சேர்த்து வைக்கக்கூடாது. குழந்தைகளின் மருந்துகளுக்கு என்றே தனியாக ஒரு பாக்ஸ் பராமரிக்க வேண்டும். அது நீலம் அல்லது சிவப்பு வண்ணத்தில் பளிச் எனத் தெரிவதுபோல இருப்பது நல்லது. 'குழந்தைகளின் மருந்து' என்று  பெரிய எழுத்துக்களில் எழுதி ஒட்டி, குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் அதை வைக்கவேண்டும்.

 

2. மருந்து கொடுக்கும் அளவு, கால இடைவேளை, கொடுக்கும் முறை என டாக்டர் சொல்லும் விஷயங்களை பதற்றத்தில் பெற்றோர்கள் மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால் அப்போதே மருந்துச் சீட்டிலோ அல்லது வீட்டுக்கு வந்த உடனே மருந்து பாட்டில்கள் மீதோ அந்தக் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வது நல்லது. இது, பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் பட்சத்தில், வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி குழப்பமில்லாமல் குழந்தைக்கு மருந்து கொடுக்கவும் வழிசெய்யும்.

3. மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை ஃபார்மஸியில் சரியாகத் தந்துள்ளார்களா, அதன் எக்ஸ்பயரி டேட் உள்ளிட்டவற்றை சரிபார்த்துக்கொள்ளவும். காய்ச்சல், இருமல், சளி என எதுஎதற்கு எந்தெந்த மருந்து என்று அறிந்துவைத்துக்கொண்டு குழந்தைகளுக்குக் கொடுப்பது சிறப்பு. அதை மருத்துவர், செவிலியர், ஃபார்மசிஸ்ட் என்று உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

4.  சிரப் போன்ற மருந்துகளை சில பெற்றோர்கள் குத்துமதிப்பான அளவில் ஸ்பூன்களில் குழந்தைகளுக்குத் தருவார்கள். அது தவறு. 2ml, 5ml, 6ml, 10ml என டாக்டர் சொன்ன மிலி அளவு மாறாமல் இருக்க, குறிப்பிட்ட மருந்துடன் கொடுக்கப்படும் மெஷரிங் கப்களையே பயன்படுத்த வேண்டும்.

5. சில பெற்றோர்கள் குழந்தைக்கு நோய் குணமடையவில்லை என்றால், டாக்டர் பரிந்துரைத்த அளவுக்கும் அதிகமாக மருந்து கொடுப்பது, டாக்டர் பரிந்துரைத்த கால இடைவேளையைக் குறைத்துக்கொள்வது என்று மருந்து தருவார்கள். இது மிகத் தவறு. குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் அளவைவிட அதிகமாக மருந்தை அதற்குக் கொடுத்தால் அது விபரீதங்களை ஏற்படுத்தும். எனவே, நோய் குணமடைவதில் தாமதம் ஏற்பட்டால், மருத்துவரை நாடி அவர் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை முறை, மருந்து ஆகியவற்றை மாற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

6. பொதுவாக, குழந்தையின் எடையைப் பொருத்தே மருந்தின் அளவை மருத்துவர் பரிந்துரைப்பார். வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் அவர்களின் எடை  மாறுபடும். அதனால் ஒரு குழந்தைக்கு கொடுத்த மருந்தை, அதே அளவில் மற்றொரு குழந்தைக்கு பெற்றோர்கள் தாங்களாகவே கொடுப்பது தவறு. அதே சளி, காய்ச்சல்தான் இந்தக் குழந்தைக்கும் என்றாலும், மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே மருந்து கொடுக்க வேண்டும்.

 

7.  எப்போதும் மருந்துகளை வெப்பமில்லாத இடத்தில்தான் வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கச் சொல்லி மருத்துவர் வலியுறுத்தும் மருந்துகளை அவ்வாறே வைத்துப் பயன்படுத்த வேண்டும். வெயில், சூடு படும்படியான இடங்களில் மருந்துகளை வைத்தால் அதன் தன்மையில் மாறுபாடு ஏற்படலாம் என்பதால் அப்படி வைக்கக் கூடாது. மேலும், மருந்து பாட்டில்களின் மீதே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளையும் பின்பற்றுவது முக்கியம்.

குழந்தைகளுக்கு மருந்துகொடுக்கும் அளவு பெரும்பாலும் ஸ்பூன் கணக்கில்தான் சொல்லப்படுகிறது. ஆனால், ஒவ்வொருவரின் வீட்டிலும் வெவ்வேறு அளவுகளில் ஸ்பூன் இருக்கும். பொதுவாக ஒரு ஸ்பூன் எவ்வளவு மிலி கொள்ளளவு கொண்டது எனச் சொல்லும் வீடியோவை அவசியம் பாருங்கள்.

8.  சில டோஸ்கள் மருந்து கொடுத்ததுமே, நோய் குறைந்துவிட்டது என பெற்றோர்கள் குழந்தைக்கு மருந்து தருவதை நிறுத்திவிடுவார்கள். அது தவறு. டாக்டர் ஐந்து நாட்களுக்கு மருந்து தரச் சொல்லி பரிந்துரைத்து இருந்தால், நோய் குறைந்தாலும்  ஐந்து நாட்களுக்கும் அதைக் கொடுத்தே ஆக வேண்டும். நோய் குறைந்துவிட்டது என்று நினைத்தாலும் அதன் வீரியம் உள்ளுக்குள் இருக்கும், மேலும் சில ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ச்சியாகக் கொடுத்தால் மட்டுமே நோயில் இருந்து முழுமையான குணம் பெற முடியும் என்பதால், மருந்தை பாதியில் நிறுத்தும் தவறைச் செய்யக் கூடாது.

9. கசப்பு, குமட்டல் போன்ற காரணங்களால் சில குழந்தைகள் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிட மிகவும் அடம்பிடித்தால், அதை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற மருந்துகளைக் கொடுக்கலாம் என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது. மாறாக, மருத்துவரிடம் அதைத் தெரிவித்து, வேறு ஃப்ளேவரில் அதற்கு மாற்று மருந்து வாங்கிக் கொடுக்கலாம்.

10.  குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள், மருந்துச் சீட்டுகளை எல்லாம் ஒரு ஃபைலில் சேகரித்து வைக்கவும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என உடல் நோவு ஏற்பட்டு மருத்துவரிடம் செல்லும்போது, இதற்கு முன் அது எப்போது ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது, எந்த இடைவெளியில் இப்போது நேர்ந்துள்ளது உள்ளிட்டவற்றை எல்லாம் அவர் அறிந்துகொள்ளவும், அதற்கு ஏற்றபடி சிகிச்சையளிக்கவும் இது உதவியாக இருக்கும்.

- என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்