வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (08/11/2016)

கடைசி தொடர்பு:19:26 (08/11/2016)

மருத்துவத் துறையின் மைல்கல் - உலக எக்ஸ்-ரே தினம் இன்று!

நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’.

இன்றைய மருத்துவ உலகில் ‘எக்ஸ்-ரே’  பரிசோதனை கண்டுபிடிப்பானது, அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும். வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றன.  

மேலும் பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்கும் என பல செயல்பாடுகளுக்கும் இக்கதிர்கள் பயன்படுகின்றன.


இத்தகைய பெருமை வாய்ந்த ‘எக்ஸ்-ரே’  கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தவதற்காகவும் வருடந்தோறும் உலக ‘எக்ஸ்-ரே’ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘எக்ஸ்-ரே’  கண்டுபிடிப்பு


1895-ல், குறைந்த அழுத்தத்தில் உள்ள வாயுவின் ஊடாக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ரான்ட்ஜென் ஆய்வு செய்தார். அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இருட்டறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்ட ரான்ட்ஜென், ‘பேரியம் பிளாட்டினோ சயனைடு’ எனும் வேதிப் பொருள் தடவப்பட்ட திரையை வைத்து ஆராய்ச்சி செய்தார். அப்போது இரண்டு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பென்சிலின் நிழல் ஒளிர்வதைக் கண்டார். உடனே பல்வேறு தடிமன்களில் பொருட்களை வைத்து அந்தக் கதிர்களை ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு தடிமனும் ஒவ்வொரு நிழலை (பிம்பத்தை) உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். 'எக்ஸ்-ரே' கண்டு பிடிக்கப்பட்ட தினமான நவம்பர் 8-ம் தேதி 'எக்ஸ்-ரே' தினமாகக் கொண்டாடப்படுகிறது.


பெயர் வந்த கதை
இதற்கு எக்ஸ்-ரே என ரான்ட்ஜென் பெயரிட்ட காரணம் விசித்திரமானது. பொதுவாக, கணிதத்தில் தெரியாத ஒரு எண்ணை ‘X’ என வைத்துகொள்வது போல, இந்தக் கதிர்களின் பண்புகளை உடனடியாக அறிந்திராத நிலையில் ரான்ட்ஜென் ‘எக்ஸ்-ரே’ எனப் பெயரிட்டார். எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால், இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார்.  அதற்காக, இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்திருந்த மனைவியின் கை மீது செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார். அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன.  ஆக மனித உடல்களின் மெல்லிய திசுக்களின் வழியாக ஊடுருவிச் செல்லும் இக்கதிர்கள், எலும்பு போன்ற கடினமான பொருள்களின் வழியாக ஊடுருவிச் செல்லாது என்பதை கண்டறிந்தார்.
காப்புரிமை வாங்காத ரான்ட்ஜென்
தனது அரிய கண்டுபிடிப்பால் மருத்துவ உலகின் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ரான்ட்ஜென், தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரவில்லை. ‘எக்ஸ்-ரே ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு காப்புரிமை தேவையில்லை. அதை ரான்ட்ஜென் கதிர்கள் என்று அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என பெருந்தன்மை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

‘எக்ஸ்-ரே’ பற்றிய தகவல்கள்


* முதன் முதலாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டவர், ரான்ட்ஜெனின் மனைவி.
* ரான்ட்ஜெனுக்கு இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901-ம் ஆண்டில்  உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும். ரான்ட்ஜென் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆனால், 'எக்ஸ்-ரே' கதிர்வீச்சு அதற்கு காரணம் அல்ல. மிகவும் பாதுகாப்பான முறையில்தான் அவர் அந்த ஆய்வை மேற்கொண்டார். ஆனால், மேரி கியூரி காரீயத் தடுப்புகள் பயன்படுத்தாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
* எக்ஸ்-ரே மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே எடுக்க வேண்டும். அதிலும் கர்ப்பிணிகளுக்கு முதல் ஏழு வாரங்களில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கவே கூடாது.
* குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்களில், தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, ‘எக்ஸ்-ரே’ பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது.


- ஜி.லட்சுமணன்

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க