மார்பகப் புற்றுநோய், மூட்டுவலி... தடுக்கும் கோலாட்டம்! | Breast cancer, arthritis... Preventing Kolattam!

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (09/11/2016)

கடைசி தொடர்பு:15:03 (09/11/2016)

மார்பகப் புற்றுநோய், மூட்டுவலி... தடுக்கும் கோலாட்டம்!

                                 

கோலாட்டம் பெண்களின் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் பயனளிக்க வல்லது என்று கூறும்  ஈரோடு, ‘கலைத்தாய்’ கிராமிய பயிற்சி அறக்கட்டளையின் நிர்வாகி மாதேஷ்வரன், இன்றைய பெண்கள் தங்களின் உடல்நல ஆரோக்கியத்துக்கு கோலாட்டம் கற்கவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.

''இரு கைகளைத் தட்டுவதன் மூலம் கிடைக்கும் ஓசைதான், கும்மி விளையாட்டு. அதிலிருந்து உருவானதுதான் கோலாட்டம். கும்மியும் சரி, கோலாட்டமும் சரி பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட விளையாட்டுகள்.

அதிக வெப்பநிலை சார்ந்த பாலை நிலப்பகுதி மக்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது கோலாட்டம். அப்பகுதியில் வசிக்கும் பெண்களின் உடலில் உஷ்ணம் மிகுந்திருக்கும் என்பதாலும், அவர்களின் உடல் சூட்டினைத் தணிக்கவும், உடல்நிலைப் பிரச்னைகளை இயற்கையாகவே தடுக்கவும், சரிசெய்யவும்... அப்பெண்களால் கோலாட்டம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. மூங்கில் குச்சியினைப் பயன்படுத்தி கோலாட்டத்தை ஆடும்போது, அக்குச்சியின் வாயிலாகவும், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மூலமாகவும் உடலின் வெப்பம் தணியும்.

5 வயதில் இருந்து எல்லா வயதுப் பெண்களும் கோலாட்டம் விளையாடலாம். பல திசைகளிலும் மாறி மாறி கோலாட்டம் விளையாடுவதால், பாதம் முதல் உச்சந்தலை வரை பெண்களின் உடல் உறுப்புகள் நன்கு வலிமை பெறும். குறிப்பாக, இந்த ஆட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் குடல் பிரச்னைகள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படும். 

சிறு வயதில் இருந்து கோலாட்டம் விளையாடும் பெண்களுக்கு கர்ப்பப்பைப் பிரச்னைகள், செரிமானப் பிரச்னைகள் அதிகம் நேராது. இரு கைகளிலும் கோல்களைப் பிடித்து மேலும் கீழுமாக உடலினை அசைத்து விளையாடும்போது, பெண்களின் மார்பில் அதிர்வுகள் ஏற்படும். அவை, பெண்களின் மார்பில் இருக்கும் தேவையற்ற கட்டிகளைக் கரைத்து வியர்வையின் மூலமாக வெளியேற்றிவிடும். மார்பகப் புற்றுநோய் அதிக அளவில் பெண்களை தாக்கிவரும் இன்றைய சூழலில், நமக்கு முந்தய தலைமுறைப் பெண்களில் பெரும்பாலானோர் இப்பிரச்னை பற்றியே அறியாமல் இருந்ததற்கும், இன்றைய பெண்களின் பிரதானப் பிரச்னையான மூட்டு வலி அவர்களை அண்டாமல் இருந்ததற்கும் கோலாட்டமே காரணமாக அமைந்துள்ளது.

கர்ப்பிணிகளும் கோலாட்டம் விளையாடலாம். ஆனால், மற்ற பெண்களைப்போல் வேகமான உடல் அசைவுகளுடன் வளைந்து, குதித்து விளையாடாமல், மிதமான மூன்று நிலைகளில் விளையாடலாம். அதாவது, கைகளை தலைக்கு மேல் தூக்கி, வயிற்றுக்கு நேராக, குனிந்து கால் பகுதிக்கு நேராக என மெல்லிய உடல் அசைவுகளைக் கொண்டு விளையாடலாம். இதனால் உடலுக்கு பலம் கிடைப்பதுடன் பிரசவம் எளிதாக நடைபெறவும் வழிவகுக்கும். பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும்.

பிடிவாதம் மற்றும் கோபம் அதிகம் கொண்ட பெண்களுக்கு அந்த குணாதிசயங்களை கோலாட்டம் கணிசமாகக் குறைக்க வல்லது. இவ்விளையாட்டை தனிநபராகவும், கூட்டமாகவும் விளையாடலாம். மற்ற விளையாட்டுகளைப்போல பக்கவாத்திய இசை தேவையில்லாததுடன், இசையை உருவாக்கக்கூடிய விளையாட்டு இது. 

                                 

 

கோலாட்டத்தில், வாய் திறந்து பேசாமலேயே மற்றவர்களிடம் இரு கோல்களின் வாயிலாகவே சைகை மொழியில் பேசுவார்கள். கோலின் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஓர் அர்த்தம் உருவாக்கலாம். கோலாட்டத்தில் 20-க்கும் அதிகமான அசைவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு அசைவையும் நான்கு முறை விளையாட வேண்டும். இப்படி விளையாடும் ஒவ்வொரு அசைவுகளுமே ஒவ்வொரு வகையான உடல் உறுப்புகளுக்கு பயிற்சியும், சக்தியும் கொடுக்கும். 

கோலாட்டம் எவ்வளவு நேரம் விளையாடினாலும் உடல் தசைகளுக்கு வலி ஏற்படாது, பசி எடுக்காது. விளையாடி முடித்ததும் நன்றாகப் பசி எடுக்கும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும். தொடர்ந்து பயிற்சி செய்த நிலையில், நடுவில் சில காலம் ஓய்வு கொடுத்து மறுபடியும் விளையாடினாலும், இடைப்பட்ட காலங்களில் உடல் வலியோ, தசை வலியோ இருக்காது.

புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள் அதிகபட்சமாக நான்கு நாட்களில் கோலாட்டத்தினை நன்கு கற்றுக்கொள்ளலாம். புதிதாகக் கற்றுக்கொள்பவர்களும், கர்ப்பிணிகளும் பயிற்சியாளர்களின் துணையின்றி கோலாட்டத்தினை விளையாடக்கூடாது. நன்றாக விளையாடத் தெரிந்தவர்களுக்கு பயிற்சியாளர்களின் உதவி தேவையில்லை.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கோலாட்டத்தை மறக்கக்கூடாது என்பதற்காகவே திருமண, சுப நிகழ்ச்சிகளில் கோலாட்டம் விளையாடி ஆடிப்பாடும் நிகழ்வுகள் நம் முன்னோர்களால் கலாச்சாரமாக கட்டமைக்கப்பட்டன. ஆனால் இன்றைய தலைமுறையினர் இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளாமலும், அதைப் பின்பற்றாமலும் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்கு உரியது. 

கோலாட்டம், பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், பல உடல்நலப் பிரச்னைகளில் இருந்து அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கும் ஏற்ற அருமையான பயிற்சி!"

- கு.ஆனந்தராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்