உடல் எடை குறைக்க உன்னதமான வழிமுறைகள்! - நலம் நல்லது - 6! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

மருத்துவர் கு.சிவராமன் 

ன்றைக்குக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை நீக்கமற நிறைந்து காணப்படுகிறது உடல்பருமன். ஏதோ எண்ணெயில் பொரித்த உணவும், அதிக இறைச்சியும் மட்டுமே உடல் எடையை உயர்த்துபவை அல்ல. துரித உணவுகளில் மறைமுகமாகக் காணப்படும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு மூன்றுமே உடல் எடை உயர்வதற்கு மிக முக்கியக் காரணிகள். இன்றைக்குச் சந்தையில் கிடைக்கும் குளிர் பானங்கள், கேக், இனிப்புப் பண்டங்கள் எல்லாவற்றிலும் இவை ஒளிந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஓர் உணவு, பரோட்டா.

இன்று தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு பரோட்டா கடைகள் கிளைபரப்பியுள்ளன. பரோட்டா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மைதாவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஆபத்தானவை; நம் உடல் எடையைக் கூட்டுபவை. குழந்தைகள் தொலைக்காட்சி முன் அமர்ந்து, கார்ட்டூன் பார்த்தபடி கண்ட நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதும் அவர்களின் உடல் எடை கூடுவதற்கும், அவர்கள் குண்டாவதற்கும் காரணம். சிறியவரோ, பெரியவரோ உடல் எடையைக் குறைக்க இங்கே சில வழிமுறைகள்... 

* `நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதை மனதில்கொண்டு, ஆற அமர நொறுக்கி, உமிழ்நீர் சுரக்கச் சாப்பிடும் பழக்கம் உடல் எடையை உயர்த்தாது. 

* செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது, நின்றுகொண்டு, நடந்துகொண்டு சாப்பிடுவது என இல்லாமல், தரையில் சப்பணம் இட்டுச் சாப்பிடுவோருக்கு எடையும் தொப்பையும் வரவே வராது. 

* காலையில் காபி / தேநீருக்குப் பதிலாக, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். 

* காலை டிபனுக்கு நெய்யும் முந்திரியும் சேர்க்காத மிளகுத் தினைப் பொங்கல், காய்கறி சேர்த்த வரகரிசி உப்புமா பாத், கம்பு-சோள தோசை, கேழ்வரகு இட்லி இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயச் சட்னி, தக்காளி சட்னி, பாசிப்பருப்பு சாம்பார் சிறந்தவை. 

* பகல் 11 மணிக்கு கிரீன் டீ அருந்தலாம்; கோடைகாலமாக இருந்தால் இரண்டு கப் மோர் நல்லது. 

* மதிய உணவில் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஒரு கப்பில் சாதம் இருக்க வேண்டும். வெங்காயம் / தக்காளி / வெள்ளரி சாலட் / கீரைக் கூட்டு அதோடு ஏதோ ஒரு காய்கறி. இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள, புழுங்கல் அரிசி சாதம்! கிழங்கு, எண்ணெயில் பொரித்ததாக இருக்கக் கூடாது. காய்கறிகளில் துவர்ப்பு, கசப்பு நிறைந்திருக்கும் வாழைப்பூ, கோவைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* மாலை நேரத்தில் கொஞ்சம் சுண்டல், கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால், இரவு உணவை கணிசமாகக் குறைக்கலாம். 

* இரவில் கேழ்வரகு ரொட்டி, கம்பு - சோள தோசை, முழுக்கோதுமையில் செய்த சப்பாத்தி... இப்படி ஏதாவது ஒன்றை உணவாகச் சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள கிழங்கில் செய்யப்படாத தொடுகறி போதும். 

* பால், வெள்ளைச் சர்க்கரை, பிஸ்கட், குக்கீஸ், ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள், துரித உணவுகள், இனிப்புப் பண்டங்கள் பக்கமே போகக் கூடாது. 

* இவற்றோடு வாரம் ஒரு நாள் வெறும் பழ உணவு, இன்னொரு வாரம் திரவ உணவு என இருந்தால் எடை நிச்சயம் குறையும். பழங்களில் அதிக இனிப்பு, உள்ள மாம்பழம், பலாப்பழத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

தொகுப்பு: பாலு சத்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!