நீங்கள் நலமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் இவைதான்! #BePositive | These are the 10 signs to prove that you are fine

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (22/11/2016)

கடைசி தொடர்பு:18:15 (22/11/2016)

நீங்கள் நலமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் இவைதான்! #BePositive

அறிகுறிகள்

`ங்களைச் சுற்றி இன்னமும் அழகோடு இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஆனி ஃப்ராங்க். 
ஆனி ஃப்ராங்க், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனில் வாழ்ந்த யூதச் சிறுமி. இவரும் ஹிட்லரின் வதைமுகாமில் இறந்துபோனவர்களில் ஒருவர்தான். நாஜிப் படைகளுக்கு பயந்து, இரண்டாண்டுகள் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தபோது ஆனி எழுதிய `தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்’ நாட்குறிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. ஹிட்லரின் படையால் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை வலி மிகுந்த வார்த்தைகளோடு விவரிக்கிறது அவருடைய நாட்குறிப்பு. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு `எந்த நேரமும் நம்மை அள்ளிக்கொண்டுபோய், வதை முகாமில் போட்டுவிடுவார்கள்’ என்கிற சூழ்நிலையில் ஆனி ஃப்ராங்க் எழுதுகிறார்… `…மகிழ்ச்சியாக இருங்கள்!’ நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அதற்கு முன்னால் சில விஷயங்களைப் பார்ப்போம்.

`என்னப்பா… சாதாரண இன்கம் அண்ட் எக்ஸ்பெண்டிச்சர் கணக்கு… அக்கவுன்டன்ஸியில பால பாடம்… அதை டேலி பண்ண முடியலை உனக்கு…’ கடிந்துகொள்கிறார் மேனேஜர். ஒரு கணக்கு உதவியாளராக இருக்கும் நாம் சுருங்கிப்போகிறோம்.  

`தெனோமும்தானே வாங்கிட்டு வர்றே… சர்க்கரை போடாம காபி வாங்கிட்டு வரத் தெரியாது?’ எரிந்துவிழுகிறார் அதிகாரி. ஒரு ப்யூனாக நாம் கூனிக் குறுகி நிற்கிறோம். 
அலுவலகம் போகும் அவசரம்… ஏற்கெனவே தாமதம்… வழியில் நின்று போகிறது இருசக்கர வாகனம். எவ்வளவு உதைத்தும் கிளம்பாமல் அடம்பிடித்து நிற்கிறது. சிக்னலில் சின்னாபின்னப்பட்டு, வண்டியை உருட்டிக்கொண்டு போனால், இருக்கிற ஒரே ஒரு மெக்கானிக் ஷாப்பும் ஷட்டவுண்! ஒரு சராசரி சென்னைவாசியான நாம் பதைபதைத்து, என்ன செய்வதென்று அறியாமல் ரோட்டில் நிற்கிறோம்… 

இவையெல்லாம் சிறிய பிரச்னைகள்… தீர்த்துவிடக்கூடியவை. உண்மையில், எவ்வளவு பெரிய சிக்கலாக, கஷ்டமாக இருந்தாலும்கூட அவையும் தீர்க்கக்கூடியவையே. என்ன… அவற்றுக்கான வழிமுறைகள் மட்டும் மாறுபடலாம். `எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது?’, `நான் என்ன பாவம் செஞ்சேன்… என்னை இந்தப் பாடுபடுத்துறியே சாமி…’, `இதெல்லாம் ஒரு பொழைப்பா… ச்சீ… நாய் பொழைப்பு…’, `என்னால முடியலை…’ இப்படியெல்லாம் சாதாரண மனிதர்களாக புலம்பிப் புலம்பி மருகிப்போகிறோம். `உனக்கும் கீழே உள்ளவர் கோடி…’ என்ற கண்ணதாசனின் வரிகளை ரசிக்க முடிகிற நம்மால், அதைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. தேவையற்ற, எளிதில் தூக்கியெறியக்கூடிய விஷயங்களை எல்லாம் மூளையில் ஏற்றிக்கொண்டு, அன்றாடம் நொந்து திரிவதே நம் வாழ்க்கைமுறையாகிவிட்டது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… பின்வரும் 10 அறிகுறிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் தெரிகின்றனவா என ஒப்பிட்டுப் பாருங்கள்… பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். 

இனி 10 அறிகுறிகள்…  

1.தலைக்கு மேல இருக்கு கூரை… போதாதா பாஸ்? 
இருக்க வீடில்லாமல், ஒண்ட ஒரு குடிசைகூட இல்லாமல் நடைபாதையில், ஊருக்கு வெளியே மரத்தடியில், கோயில் சுற்றுப் பகுதிகளில், ரயில்வே ஸ்டேஷனில், பெரிய பேருந்து நிறுத்தங்களில் இரவு வாழ்க்கையை நடத்துகிறவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கானோர். `இந்தியக் குடிமகன்’ என்கிற அங்கீகாரம் இல்லாமல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அடையாளங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அவர்கள். வெளுத்து வாங்குகிற வெய்யிலோ, அடித்துப் பெய்கிற மழையோ நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. குடியிருக்க வாடகைக்கோ, சொந்தமாகவோ ஒரு வீடு என்று இருக்கிறதுதானே… நீங்கள் பாக்கியவான் சார்… இயற்கை, உங்களை ஆதரித்துக்கொண்டிருக்கிறது. 

2. வயிறு நிறைய சாப்பிட்டாச்சு
சோமாலியா… இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்குக்கூட சாப்பிட ஒன்றும் கிடைப்பதில்லை. வெறும் மண்ணைத் தின்று வயிறு வீங்கித் திரியும் குழந்தைகளை நெட்டில் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் துயரம் நமக்கு வேண்டாம்… இன்று காலை டிபன், மதியம் லஞ்ச், இரவு டின்னர் எல்லாம் உங்களுக்கு உத்தரவாதம்தானே… நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 

3. இதயம் ஆரோக்கியமாக துடிச்சுக்கிட்டு இருக்கு… அப்புறம் என்ன? 
`ராத்திரி படுத்தாரு… காலையில எந்திரிக்கலை… தூக்கத்துலயே உயிர் போயிடுச்சு…’ என்பது பாமரர் புலம்பல். உறக்கத்தில் இதயத் துடிப்பு நின்றுபோனதால் அவர் இறந்திருப்பார் என்பதே உண்மை.  காலை எழுந்தது முதல் இரவு படுத்து உறங்கும் வரை உங்கள் இதயம் உங்களுக்காக ஒத்துழைத்து, விடாமல், சரியாகத் துடித்துக்கொண்டிருக்கிறதுதானே… பிறகென்ன… உங்களை இயற்கை, அரவணைத்துக் காக்கிறது என்று அர்த்தம். 

4. மத்தவங்களுக்கு நல்லது நினைச்சோம்! 
பேருந்தில் பயணம். சிக்னல். இடதுபக்கம், தன்னை அந்தப் பக்கம் அழைத்துப் போய் யாராவது சேர்க்க மாட்டார்களா… என்ற பரிதவிப்போடு நிற்கிறார் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. `அய்யய்யோ… நாம மட்டும் இந்த பிளாட்ஃபார்ம் ஓரமா இருந்திருந்தா, அவரைக் கொண்டுபோய் அந்தப் பக்கம் விட்டிருக்கலாமே..!’ என நினைக்கிறீகளா? இது போதும்… இந்த நல்ல சிந்தனை உங்களுக்கு இருப்பது பெரிய விஷயம். இயற்கை, உங்களைக் கைவிடாது! 

5. குடிக்க சுத்தமான தண்ணி கிடைச்சுது! 
தண்ணீர்… இதற்காக ராஜஸ்தான் எல்லாம் போக வேண்டாம். நம் மாநிலத்தில் இருக்கும் பல ஊர்களில் தண்ணீர் பஞ்சம். நல்ல தண்ணீருக்கு, தாக வேட்கையில் உலகின் பல நாடுகளில் அலையோ அலை என்று அலைகிறார்கள் பாஸ்… இது உண்மை. வீட்டில் காசுகொடுத்து ஃபிக்ஸ் செய்த ஆர்.ஓ வாட்டரோ, 30 ரூபாய் கொடுத்து வாங்கும் மினரல் வாட்டரோ, அலுவலகத்தில் அளவில்லாமல் குடிக்க தண்ணீரோ… ஏன்… குறைந்தபட்சம் கார்ப்பரேஷன் தண்ணீரையாவது நீங்கள் குடிக்கிறீர்கள்தானே! இயற்கை, உங்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

6. யாரோ ஒருத்தருக்கு உங்க மேல ரொம்ப அக்கறை..! 
`நல்லா இருக்கீங்களா...?’, `சாப்டீங்களா..?’, `பார்த்துப் போங்க..!’, `வண்டியில போகும்போது ஜாக்கிரதைப்பா!’, `உடம்பு சரியில்லைன்னா லீவு போட்டுட்டு டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே’, `என்ன வேலையா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட்டுடணும்’… இது போன்ற வாசகங்களில் ஏதாவது ஒன்றையாவது இன்று நீங்கள் கேட்டீர்களா? இதற்குப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை (அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி) பிறகென்ன… இயற்கை உங்கள் மீது பெருங்கருணையோடு இருக்கிறது! 

7. மன்னிச்சுட்டீங்க… மன்னிச்சுட்டீங்க..! 
சகிப்புத் தன்மை இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று அர்த்தம். கனமான செருப்பணிந்த ஒருவர், பேருந்து நெரிசலில் உங்கள் காலை மிதித்துவிட்டு, ‘சாரி’ என்ற ஒற்றை வார்த்தையோடு நகர்ந்திருக்கலாம்... நீங்கள் எதிர் வார்த்தை பேசாமல் நின்றிருப்பீர்கள். ஆடி, சித்திரை மாதங்களில் வீட்டுக்கு நேர் எதிரே கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து சத்தமாக அம்மன் பாடல் கேட்பதாக இருக்கலாம்… `ஒரு வாரம்தானே…’ என்கிற ரீதியில் உங்கள் அன்றாடப் பணிகளை இரைச்சலுக்கு மத்தியில் நகர்த்தியிருக்கலாம்… இவ்வளவு ஏன்… பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சக ஊழியர் கேட்கும் அர்த்தமற்ற, அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் நிதானமாக, சரியாக பதில் சொல்பவராக இருக்கலாம்… இதுபோல எது வேண்டுமானாலும் இருக்கட்டும்… நீங்கள் பொறுமை காக்கிறீர்களா? உங்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை அதிகம் என எடுத்துக்கொள்ளலாம். இயற்கை, உங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும். 

8. உடுத்த உடை இருக்கு! 
`கபாலி’ போல கோட், சூட்கூட வேண்டாம்... அலுவலகத்துக்கோ, வேறு பணிகளுக்கோ, வெளியில் செல்லவோ அணிந்து செல்ல உங்களிடம் கண்ணியமான தோற்றம் தரும் உடைகள் இருக்கின்றனவா? அதுகூட வேண்டாம் பாஸ்… மானத்தை மறைக்கிற உடை உங்களிடம் உண்டுதானே… நீங்கள் அதிர்ஷ்டசாலி! இயற்கை, உங்களை மனதார நேசிக்கிறது என்று பொருள். 

9. நம்பிக்கை இருக்குல்ல..? 
இந்த மாத, வார, அன்றாட சேல்ஸ் டார்கெட்டோ, ப்ராஜக்ட்… எதுவாகவும் இருக்கட்டும். `இது என்ன பெரிய மலையா? நான் கில்லி… முடிச்சிடுவேன்ல?’ என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அன்றாடப் பாடை விடுங்கள்… எப்படியாவது சமாளித்து வாழ்க்கையை ஓட்ட முடியுமென்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அது கூட வேண்டாம்… அடுத்த வேளை உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை… இவையெல்லாம் உத்தரவாதமாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படிப் போடுங்க! இந்த நம்பிக்கை போதும்… இயற்கை, உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளும். 

10. மூச்சுவிட முடியுது
`ஏ யப்பா… என்னா பொல்யூஷன்!’ அங்கலாய்ப்பதை விடுவோம். நடமாடும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ, உறங்கும்போதோ காற்று சீராக உள்ளே வந்தும் போயும்… நீங்கள் நன்றாக சுவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே… மூச்சு என்பது வெறும் காற்று சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை சார். அது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எதையும் எதிர்கொள்ள நீங்கள் திராணியோடு இருக்கிறீர்கள்… உங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுக்க உயிர் உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இயற்கை, இன்னும் பன்னெடுங்காலம் உங்களை பத்திரமாக வைத்திருக்கும். 

 

 

 

இந்த 10 அறிகுறிகள் சின்ன விஷயங்கள்தான். ஆனால், மிகவும் முக்கியமானவை. அதற்காகவே இயற்கைக்குச் சொல்லலாம் மனசார `நன்றி’… எங்கே சொல்லுங்க!

- பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்