வெளியிடப்பட்ட நேரம்: 07:21 (23/11/2016)

கடைசி தொடர்பு:07:21 (23/11/2016)

கறிவேப்பிலை… தூக்கி எறியாதீர்! நலம் நல்லது-13 #DailyHealthDose

 

வெண்பொங்கல், ரசம், கூட்டு, பொரியல்… எதுவாகவும் இருக்கட்டும். சாப்பிடும்போது நம் கை தானாக ஒன்றைத் தூக்கிப் போட்டுவிடும். அது, கறிவேப்பிலை. உண்மையில், இது வேம்பைப் போன்ற மகத்துவமுள்ள மருத்துவ மூலிகை. உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் காக்கும் அற்புத மருந்து!

* இதை நிழலில் உலர்த்தி, பொடித்தால் அதுதான் கறிவேப்பிலைப் பொடி. தினமும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால், தலைமுடி கொட்டுவதைத் தவிர்க்கலாம். 

* கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு சேர்த்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.  

* இது, பீட்டாகரோட்டின் நிறைந்தது. பார்வைத்திறனை மேம்பட வைக்கும். 

* இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை, புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவை. புற்றுநோய்க் கட்டியின் வேகமான வளர்ச்சியைக் குறைப்பதிலும், புற்றுக்கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை பயன் அளிக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. உடனே, புற்றுநோய்க்கு இதன் சட்னி நல்ல மருந்து என நினைத்துவிடக் கூடாது. கறிவேப்பிலையை துவையலாக, பொடியாக, குழம்பாக உணவில் சேர்த்து வந்தால், சாதாரண செல்கள் திடீர் எனப் புற்றாக மாறுவதைத் தடுக்கலாம்.

* அஜீரணம், பசியின்மை, பேதி முதலியவைதான் குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள். இவற்றுக்கெல்லாம் கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என நம் சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

* இதன் பொடியை சோற்றின் முதல் உருண்டையில் போட்டுப் பிசைந்து, சாப்பிட்டால் ஜீரணத்தைத் தூண்டி, பசியூட்டும். சரியாக சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது கல் உப்பு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, சுடுசோற்றில் போட்டுக் கலந்து சாப்பிட வைத்தால் பசியின்மை போகும். 

* சிலருக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும்போலத் தோன்றும். வெளியே கிளம்புவதற்கு முன்னர் மலம் கழித்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணுவார்கள். இது, இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் எனப்படும் கழிச்சல் நோய். இதற்கு இது நல்ல மருந்து. சுண்டை வற்றல், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சம பங்கு எடுத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இந்தப் பொடியை கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் போட்டு சாப்பிட்டால், கழிச்சல் நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும். இதேபோல், அமீபியாசிஸ் கழிச்சல் நோய்க்கும் இந்தப் பொடி பயன் தரும். 

கறிவேப்பிலை

* கறிவேப்பிலையில் கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆல்கலாய்டுகள்தான் சர்க்கரைநோய், மாரடைப்பு நோய்களில் மருந்தாகப் பயன்படவைக்கின்றன. 

* உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்க, உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்-ஐ (HDL - High Density Lipoprotien) சாதாரண மருந்தால் உயர்த்துவது கடினம். நடைப்பயிற்சி இதற்கு சிறந்த வழி. அதேபோல கறிவேப்பிலையும் நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்த உதவும். 

* சர்க்கரைநோய், கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே தினமும் கறிவேப்பிலையைச் சாப்பிட்டு வந்தால், இந்த இரு நோய்களுக்கும் செயல்பாடு உணவாக (Functional Food) கறிவேப்பிலை இருக்கும். 

கறிவேப்பிலை மணமூட்டி… நம் உடலுக்கு நலமூட்டவும் செய்யும். எனவே… கறிவேப்பிலையை ஒதுக்காதீர்! 

தொகுப்பு: பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்