Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தம்பதிகளிடையே நெருக்கம் வளர்க்கும் உணவுகள்! நலம் நல்லது - 21 #DailyHealthDose

காதல்

‘கூடிப் பெறும் இன்பம்’ என்பது எந்த ஓர் உயிரினத்தின் வாழ்வுக்கும் அடித்தளம். மற்ற உயிரினங்கள் எல்லாம் இனப்பெருக்கத்துக்கு, தன் சந்ததியை உலகில் அதிகரிக்க மட்டுமே கூடும். மனிதன் மட்டுமே தன் வாழ்வின் அங்கமாகக் காதல், காமத்தைக் கொண்டு இருப்பது என்பது சிறப்பு.

ஒரு சிட்டிகைப் பெருங்காயத்தை மோரில் கரைத்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீரும்... அதுபோல தன் காதலியை மகிழ்விக்க, ஏதேனும் அற்புத உணவைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாமா என எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தையே தரும். ஒரு நட்சத்திர விடுதியின் குளுகுளு உணவறையில், பகட்டாக ஆடையணிந்து, மெல்லிய இசை கேட்டபடி, ப்ரீபெய்டு புன்னகையுடன், `உலகின் அத்தனை சுவையையும் கூட்டித் தரவா?’ என்கிற அக்கறையான வினவல் அருகே இருந்தாலும் வராத காதல், கொளுத்தும் வெயிலில் சோளக்காட்டில் வரும்! வைக்கோல் போரில் சாய்ந்துகொண்டு காதலியின் கரம் பற்றி, அவளின் தாவணி ஓரத்தில் முடிந்து எடுத்து வந்த உணவுப் பொருளை சுவைக்கையில் பீறிட்டு வரும்.

அங்கு காதல் தந்ததும், அவள் கொண்டுவந்த உணவு அல்ல. காதலி அருகில் இருப்பதும் கரிசல்காட்டு கரிசனமும்தான். உடலும் உள்ளமும் காதலுக்குத் தயாராகும்போது, சரியான உணவுத் தேர்வும் இருந்துவிட்டால் உத்வேகம் உறுதி. இன்றைய நவீன வாழ்வில், உடலையும் உள்ளத்தையும் காதலுக்குத் தயார்ப்படுத்துவதற்கும்கூட சிறப்பு உணவுகள் அவசியப்படுகின்றன. அவற்றைப் பார்க்கலாமா? 

* காதலுக்கான முதல் தேர்வு பழங்களாக இருக்கட்டும். மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி ஆகியவற்றில் காமம் கூட்டும் திறன் உள்ளதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

காதலுக்கு உதவும் மாதுளை ஜூஸ்

வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் நிறைந்த இந்தப் பழங்கள் மனதை காதலுக்கு வசப்படுத்துவதிலும், களிப்பில் உறவை நீடிக்கச் செய்யவும் பயன் தருகின்றன. குறிப்பாக, பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் உறவுக்கு உறுதி தருவதில் ஆப்பிளைவிட மேலானது என்கிறது உணவு அறிவியல். 

* பேரீச்சை நெடுங்காலமாக அரபு நாட்டின் காதல் சின்னம். இங்கும் சித்த, ஆயுர்வேத மருந்துகளில் காமம் விளைவிக்க `கர்ச்சூர்காய்’ எனும் பேரீச்சங்காய் சேர்க்காத லேகியங்கள் இல்லை. பேரீச்சை காதலுக்கு நல்லது. 

*  ஸ்ட்ராபெர்ரி, காமம் தூண்டும் கனி. `ஆண்களுக்கு `டெஸ்டோஸ்டீரோன்’ எனும் காமம் ஊட்டும் ஹார்மோனை உசுப்புவதிலும், பெண்ணின் மனதை காதலின் பால் கசியவைப்பதிலும் ஸ்ட்ராபெர்ரிக்கு தொடர்பு உண்டு’ என்கிறார்கள் மேற்கத்திய உணவியலாளர்கள். 

* ஸ்ட்ராபெர்ரிக்கு உள்ள அந்தச் சக்தி நம்ம ஊர் நாவல் பழத்துக்கும் உண்டு. 

* மாதுளையின் கனிரசத்துடன் தொடங்கும் மாலைச் சிற்றுண்டி உணவு, காதலியுடனான இரவு விருந்துக்கு ஏற்றது. 

* உலர் பழங்களில் பேரீச்சை, காய்ந்த திராட்சை, அத்தி இவை காதல் வைட்டமின் தருபவை. 

* சைவ உணவு சாப்பிடுபவர்கள் காதலில் அதிகம் ஈடுபடுவார்கள் என்கிறது அறிவியல். எனவே, காய்கறி, கீரைகளுக்கு உணவில் தவறாமல் இடம் கொடுக்கவேண்டியது அவசியம். `காமம் விளைவிக்கும் கீரைகள்’ என சித்த மருத்துவம் ஒரு பட்டியலே தந்திருக்கிறது. `தாளிக்கீரை, தூதுவளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் கொஞ்சம் பாசிப் பயறு, பசுநெய் சேர்த்து சமைத்து உண்டால், ஆண்மை பெருகும்’ என்கிறது சித்த மருத்துவம். 

* காதல், காமம், கருத்தரிப்புக்கு சித்தமருத்துவம் பரிந்துரைப்பது முருங்கைக்காய். முருங்கையின் விதையில் உள்ள ‘பென் ஆயில்’ சத்து காதலுக்கும் காமத்துக்கும் அருமருந்து. 

* அளவோடு சாப்பிடும் கோழிக்கறி, லோப்ஸ்டர் மீன் துண்டுகள் காதலைத் தூண்டும். 

* நீடித்த காதலுக்கு குறைவான உப்பும் காரமும் நல்லது

* `காதல் பானம் என்றால் காபி’ என்கிறார்கள். காஃபின் சத்து கூடுதலாக உள்ள காபி, உணர்ச்சிகளைக் கூட்டும். 

* காதல் மருந்து, சாக்லேட். சாக்லேட்டின் காதல் தூண்டும் மகத்துவம் குறித்துப் பேசாத உணவியலாளர்களே இல்லை என்று சொல்லலாம். சாக்லேட்டில் உள்ள கோக்கோவின் நரம்பைத் தூண்டும் சக்திதான் அதற்குக் காரணம். 

* முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் விதைகள் ஆண்களின் விந்தணுக்களைப் பெருக்கவும், பெண்ணுக்கு அதில் ஈர்ப்பை அதிகரிக்கவும் செய்பவை. 

* ஜாதிக்காய், சாதிபத்திரி இரண்டுமே காதலுக்கான முதல் சித்த மருந்துகள். மிக மிகக் குறைந்த அளவில், சிட்டிகை அளவில் சாப்பிடும் சாதிக்காய், பலவற்றையும் சாதிக்கும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, முன்னதாக, மருத்துவரிடம் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என ஆலோசனை பெறவேண்டியது அவசியம். 

உண்மையில் இந்த உணவுகளுடன் உள்ளப்பூர்வமான நேசமும் சேர்ந்தால், ஆண்-பெண் இருவருக்கும் இடையில் காதல் மலரும்... மகிழ்வைத் தரும். ​

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement