வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (07/12/2016)

கடைசி தொடர்பு:20:32 (07/12/2016)

மழைக்காலம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை... தவிர்க்க வேண்டியவை

மழைக்காலம்

கோடை வெப்பத்தின் தாக்கத்தை அனுபவிக்கும் நாம், மழை எப்போது வரும் என அதன் குளிர்ச்சியை அனுபவிக்க ஆர்வமாக இருப்போம். அதே நேரம், மழை மற்றும் பனிக்காலத்தில் சில வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால்  ஜுரம், இருமல், ஜலதோஷம், வரட்சியான தொண்டை, வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாக்கக்கூடும். குழந்தைகளுக்கு தேர்வுக் காலமும் வருவதால், உடல் தொந்தரவும் பரீட்சைக்காக படிக்கவேண்டுமே என்கிற பதட்டமும் சேர்ந்து குழந்தைகளைப் பயமுறுத்தும். எனவே, இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டால், நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெறலாம். குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன என்பது பற்றி விளக்குகிறார், குழந்தைகள் நல மருத்துவர் என்.அரவிந்த் பாபு.


குழந்தைகளுக்கு, எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கக்கூடிய உணவுகளையும், பழ சாலட், சூப் வகைகள், வைட்டமின் சத்துக்கள் அதிகம் தரும் பழச்சாறுகளையும் கொடுக்கவும்.

குளிர்காலத்தில்
 

பெற்றோர் கவனிக்கவேண்டியவை:

* சுடவைத்து ஆறிய தண்ணீரை நிறைய குடிக்க வையுங்கள்.
* 6 மாதத்துக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ஃபுளூ காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும். 
* வீடு மற்றும் உடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
* குழந்தைகள் இருமும்போது, வாயை கர்ச்சீஃப்பால் மூடியபடி இருமச் சொல்லவும்.
* சாப்பிடும் முன் குழந்தையின் கையை சுத்தமாகக் கழுவச் செய்யவும்.
* கண்,வாய்,மூக்கில் கை வைத்துவிட்டு, அப்படியே சாப்பிடக்கூடாது.
* கிருமிகள் வராமலிருக்க, டெட்டால் கலந்த நீரால் வாசல் மற்றும் அறைகளைத் துடைக்கவும்.
* குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, 'ஒண்ணுமில்ல சரியாயிடும்' என பாஸிட்டிவ்வாகப்     பேசவும்.
* மழை, பனிக்குப் பாதுகாப்பான உடைகளை அணிவிக்கவும்.
* தோல் மற்றும் முடியின் மீது அக்கறை காட்டவும்; தோல் வறட்சி ஏற்படும்போது, அரிப்பும் எரிச்சலும்  உண்டாகும். இதுபோன்ற நேரத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.
* குளிரில் அவசியம் வெளியே போகவேண்டியது இருந்தால், தலையைப் பனிபடாமல் பாதுகாப்பது  நல்லது.

செய்யக் கூடாதவை:

* குளிர்தானே என்று அலட்சியமாக எப்போதும்போல இருக்கக் கூடாது.
*. சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருந்த   குளிர்பானங்களைக் கட்டாயம் தவிர்க்கவும். சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ளவும்.
*. ஐஸ்கிரீம், சாக்லேட் கொடுக்க வேண்டாம்.
* குளிர்காலத்தில் சுள்ளென வெயில் அடித்தால், அதைக் காரணம்காட்டி, குளிரான உணவுப் பொருட்களை  அப்போது கொடுக்காதீர்கள்.

குளிர்காலத்தில்


* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் உடல் வேர்க்கும். வெப்பமாக இருக்கிறது என, ஏர் கூலரில் நிற்க  வேண்டாம். இதனால், உடனே சளி பிடிக்கும்.
* குளிர் அதிகமாக இருக்கும்போது, வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்.  காற்றில்  உள்ள தூசு, தும்மல், தலைவலியை உண்டாக்கும்.
*  மழை மற்றும் பனி நேரத்தில் குழந்தைகளை வெளியே கூட்டிப் போகவேண்டியதிருந்தால், மாஸ்க், கையுறை,  காலுறை, தலைக்கவசம், ஸ்வெட்டர் அணிந்துகொண்டுதான் போக வேண்டும். நீண்டதூரப் பயணங்களைத்  தவிர்க்கவும்.
* உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. ஏதாவது ஒரு உடற் பயிற்சியை குழந்தைகளுக்குச்    சொல்லிக்கொடுக்க வேண்டும். காலையில் வாக்கிங் கூட்டிப்போவது நல்லது. இதனால், சுத்தமான காற்றும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும்.
* வெளியில் செல்லும்போது, வெந்நீர் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துச்செல்லவும்.
* கொசுக் கடியிலிருந்து தப்பிக்க, மாலை நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிவைக்கவும்.  
* வீட்டைச் சுற்றிய பகுதிகளில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். டயர்,கொட்டாங்கச்சியை வீட்டின் அருகில் போடாதீர்கள்.* கொசு கடிக்காமலிருக்க உதவும்  வலை மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தி, குளிர்காலத்தின் தொந்தரவில் இருந்து குழந்தைகளைக் காக்கவும்.


- கே.ஆர்.ராஜமாணிக்கம் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்