Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர் ரத்த அழுத்தம்... உதாசீனம் வேண்டாம்! நலம் நல்லது-24 #DailyHealthDose

உயர் ரத்த அழுத்தம்

மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோவது... உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மூல காரணங்களில் ஒன்றாக இருப்பது உயர் ரத்த அழுத்தம். `இன்னும் 20 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக உயர் ரத்த அழுத்தம் இருக்கும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். உண்மையில், இது முழுக்க முழுக்கத் தவிர்க்கக்கூடியது; கட்டுப்படுத்தக் கூடியது. உயர் ரத்த அழுத்தம் குறித்த அலட்சியமும் தவறான புரிதலும்தான் அது வருவதற்கான முக்கிய காரணங்கள். 

இது வருவதற்கு மரபும் ஒரு காரணம்தான். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த உயர் ரத்த அழுத்தம், சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதால், 25 வயதிலேயே தலைகாட்டத் தொடங்கிவிட்டது. உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பு பிரதானமான ஒரு காரணம். `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த முதுமொழி. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மானம், ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை உணவில் அள்ளிப் போட்டுக்கொள்வது, குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் அதிகம் குடிப்பது உள்ளிட்ட காரணங்களால் உப்பு நம் உடலில் தப்பாட்டம் ஆட ஆரம்பித்துவிடுகிறது. 

ஊறுகாயில் மட்டுமல்ல... இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. அப்பளம், சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு மற்றும் அத்தனை துரித உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பனீர் பட்டர் மசாலா... என துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய உயர் ரத்த அழுத்தத்தை இளம் வயதிலேயே வரவழைத்துவிடுகிறது. 

சரி... உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா? ஆம், நிச்சயம் அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்ச்சியும் நடந்தபடி இருக்கிறது. சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக்கீரை, தக்காளி, கேரட் வரை பல காய்கறிகளில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவையெல்லாம் மருந்துக்கு துணை நின்று பயன் தரும் உணவுகளே (Functional food ingredients) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது. உயர் ரத்த அழுத்தத்துக்கு மூலிகை மருந்துகள் மட்டும் போதாது, நவீன மருத்துவ சிகிச்சையும் அவசியம். சீனாவில், பிளட் பிரஷர் என்று ஒரு நோயாளி மருத்துவமனைக்குப் போனால், மருத்துவர் அதைக் குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம் கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக ‘தாய்சீ’ நடனத்தையும் பரிந்துரைக்கிறார். நகரமோ, கிராமமோ பிளட் பிரஷர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகமாவதற்கு முக்கியக் காரணம் மதுப் பழக்கம்.  

பிளட் பிரஷர் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை... 

* 45 நிமிடங்கள் அல்லது 3 கி.மீ நடைப்பயிற்சி. 

* 30 நிமிட உடற்பயிற்சி / சைக்கிள் ஓட்டுதல். 

* 25 நிமிடங்கள்... யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும் செய்வது. 

* 15 நிமிடங்கள் பிராணாயாமம். குறிப்பாக, சீதளி பிராணாயாமம் செய்வது. 

* 20 நிமிடங்கள் தியானம். 

* 6 - 7 மணி நேரத் தூக்கம். இதை மற்றும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தூக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அத்தனை நல்லது.   

உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கும் உணவு வகைகள்! 

* முருங்கைக்கீரையை நீர் நிறையவிட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோலச் செய்து, காலை உணவுடன் பருகலாம். 

* மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர்ப் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம். 

* உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ரத்தக் கொழுப்பைக் குறைக்க / கரைக்க, எடை குறைக்கும் தன்மை உடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம். 

* வெந்தயத் தூள், கறிவேப்பிலைப் பொடியை சுடு சாதத்தில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம். 

* கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது என்பதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவும். 

* உணவில் மஞ்சள் தூள், லவங்கப்பட்டையை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. இவை இதயத்துக்கு இதம் அளிப்பவை. 

* வேகவைக்காத சின்ன வெங்காயம், வேகவைத்த வெள்ளைப் பூண்டு இரண்டும் அன்றாடம் உணவில் இடம் பெறட்டும். 

ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கக்கூடியதே! 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement