Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தைராய்டு... தவிர்ப்போம்! நலம் நல்லது-25 #DailyHealthDose

தைராய்டு

தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் `தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அதற்கு `தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால் `ஹைப்போதைராய்டு’, அளவு அதிகமானால், `ஹைப்பர்தைராய்டு’, முன் கழுத்து வீங்கியிருந்தால் `காய்ட்டர்’ என நோய்களாக அறியப்படுகின்றன. இந்த நோயை இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. இப்போதெல்லாம் காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக `தைராக்சின்’ மருந்தை எடுத்துக்கொள்வோர்தான் அனேகம் பேர். 

தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. ஆனாலும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு `அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி... போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களுக்கு மாதவிடாய் சீர்கேடு, `பாலிசிஸ்டிக் ஓவரி’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது போன்றவற்றுக்கும் தைராய்டு சுரப்பு குறைவது ஒரு காரணம். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அதை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். பெண்களுக்கு மாதவிடாய் 30 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்வதில் பிரச்னை ஏற்பட்டாலோ, கருத்தரிப்பு தாமதம் ஆனாலோ தைராக்சின் சுரப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதற்கு மட்டும் அல்ல... உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சருமம் உலர்ந்து போவது... எனப் பல நோய்களுக்கான ஆரம்பப்புள்ளி தைராய்டு சுரப்பு குறைவதுதான். 

உப்பு

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள சுமார் 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. அதன் முடிவு ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெரும்பாலானவர்கள், ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்படுவார்கள்; அவர்களுக்கு உடல் சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை பல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டது. எனவே, இந்தியர்கள் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் சேர்க்க முடிவுசெய்தது அரசு. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, நாம் அன்றாடம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். அதன் விளைவாக, பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையுடைய உப்பளத்தில் கிடைக்கும் உப்பைத் தவிர்த்துவிட்டு, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சாதத்தில் கலந்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். இந்த செயற்கை உப்பு நமக்கு நன்மை அளிக்காது. 

தவிர்க்கவேண்டியவை...

* தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் சில உணவுகள் (Goitrogenic) உள்ளன. அவற்றில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம்பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைபோதைராய்டு நோயோ இருந்தால், கடுகு, முட்டைக்கோஸை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

* சந்தையில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்களில் அதிகமாகச் சேர்க்கப்படுவது சோயா புரதம். இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்துக்குக் காரணமாகிவிடும். இதைத் தவிர்ப்பது நல்லது. 

உஷார்..! 

* பல புற்றுநோய்கள் பெருகிவரும் இன்றையச் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகமாகிவருகிறது. Pappillary, Follicular, Medullary, Anaplastic... என நான்கு வகைகளில் இந்தப் புற்று வரலாம். இவற்றில் வெகு சாதாரணமாக வரக்கூடியது Pappillary. தைராய்டு கோளத்தில் வீக்கம் ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு, அந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருந்தால், Anaplastic-ஐ தவிர, மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்திவிடலாம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை. 

உணவில் சேர்க்கவேண்டியவை, பின்பற்றவேண்டியவை..

* அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் - டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். குறிப்பாக, வஞ்சிர மீன் குழம்பு அதிகப் புரதம்கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும். 

* சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பையும் அதிகமாக்கும். 

* பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம். 

* `அகர் அகர்’ எனப்படும் கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய் தூள் சேர்த்து இந்த இனிப்பைச் செய்து சாப்பிடலாம். 

* `ஸ்பைரூலினா’ என்ற சுருள்பாசி மாத்திரைகள், ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதவர்கள் இதைச் சாப்பிடலாம். 

* யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. `சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும்’ என்கின்றன ஆராய்ச்சிகள். 

தைராய்டு சுரப்பு குறைவு நோயாளிகள், வெறும் மாத்திரையை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், சரியான உணவு முறை, யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து வெளியே வரலாம். 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement