வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (10/12/2016)

கடைசி தொடர்பு:12:19 (10/12/2016)

ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன்! #WeekEndRecipe

ஜிஞ்சர் சிக்கன்


வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து ரோகினி சிக்கன் சுவைக்க, அசத்தலான ஜிஞ்சர் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 100 கிராம்  
இஞ்சி - 50 கிராம் 
தக்காளி - 100 கிராம் 
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள்(தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
புளித்த தயிர் - 50 மில்லி
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். இஞ்சியின் தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து, மீடியம் அளவுத்  துண்டுகளாக நறுக்கவும். தயிரை கட்டியில்லாமல் அடிக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை நன்கு வதக்கவும். அதனுடன் நறுக்கிய இஞ்சி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள்(தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கிய பின், சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து தக்காளி நன்கு வேகும்வரை கிளறவும். 

சிக்கன் கலவையில் தயிரைச் சேர்த்துக் கலக்கிக் கிளறிவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கலவையில் எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். சிக்கன் நன்கு வெந்து கிரேவி செட் ஆனதும், இறுதியாக எலுமிச்சை சாறு, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும். 

சாதத்துடன் சாப்பிட, ஜிஞ்சர் சிக்கன் சுவையாக இருக்கும். மேலும், ஜிஞ்சர் சிக்கனில் கணிசமாக இஞ்சி சேர்க்கப்பட்டிருப்பதால், இவை சாப்பிட்டதும் எளிதில் ஜீரணமாகும்.
 

- கு.ஆனந்தராஜ்
படம்: த.ஶ்ரீநிவாசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க