மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஃபிஷ் மொய்லி! #WeekEndRecipe

ஃபிஷ்

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ஃபிஷ் மொய்லி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப்  பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:
மீன்(ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ
நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
கீறிய பச்சை மிளகாய் - 5
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்ப்பால் - தண்ணீர் சேர்க்காமல் எடுத்த முதல் பால் ஒரு கப், சிறிதளவு தண்ணீர் சேர்த்து எடுத்த இரண்டாம் பால் ஒரு கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை:
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் எலுமிச்சைசாறு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்தவுடன் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன், இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பால் சேர்த்து, பின்பு ஊறவைத்திருக்கும் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு சிறிது நேரம் வேகவைக்கவும். பின்னர் அடுப்பின் தீயைக் குறைத்து, முதலில் எடுத்த தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கிவிட்டு பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் வேகவிட்டு குழம்பு கொதி வந்ததும் இறக்கவும்.

ஃபிஷ் மொய்லி, சாதம் மற்றும் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.அதே போல், கோவன் ஃபிஷ் கறியும் ஒருமுறை செய்து பாருங்கள்.

- கு.ஆனந்தராஜ்
படம்: த.ஶ்ரீநிவாசன்

    

 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!