சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose | Laughter is the best medicine

வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (19/12/2016)

கடைசி தொடர்பு:07:42 (19/12/2016)

சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

 

மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு! அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது. பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு நாளைக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்ததும் ஒரு நாளைக்கு 15-20 முறைதான் சிரிக்கிறோம். மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு... திருக்குறள் முதல் வாட்ஸ்அப் ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்வது இதைத்தான். இதில் பலருக்கும் பிரச்னை என்னவென்றால், பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித்தர முடியாத இந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது என்பதுதான். 

ஏன் சிரிக்க வேண்டும்?

* மனிதன் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஏனென்றால், உயிர் வாழப் பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தானே! `வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது வழக்குமொழி மட்டும் அல்ல... விஞ்ஞான உண்மையும்கூட. எபிநெஃப்ரின் (Epinephrine), நார்-எபிநெஃப்ரின் (Norepinephrine), கார்டிசால் (Cortisol) ஆகியவை மனஅழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனாலேயே, இயல்பாகவே மனஅழுத்தம் குறைகிறதாம். இயல்பிலேயே சிரிப்பை அடக்கிவைத்து, அதன் காரணமாகவே நம் ஊர்ப் பெண்களுக்கு ஏற்படுபவைதான் மனஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவை. 

* சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச் செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் படிதலும்தான் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு எனப் பல பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யும். 

* பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டி பயமுறுத்தும் புற்றுநோய்களுக்கும், அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணமே. 

* உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு! 

* சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.

* `தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பதுபோல, `தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். 

சிரிப்பு

சிரிப்புக்கு நேர் எதிரானது கோபம். `கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ எனச் சொன்னவர் அரிஸ்டாட்டில். அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும். 

கோபத்தை திசை திருப்புவது எப்படி? 

* `கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்த விநாடியிலேயே, சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே தடலாடியாக நிறுத்திவிட வேண்டும். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, `அது அவசியமா?’ என யோசிக்க வேண்டும். பல சமயங்களில், `அது அநாவசியம்’ எனத் தெரியும். 

* கோபம் உண்டாகும் தருணங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்துவிடவும்; கோபத்தை வளர்க்கும் அட்ரினலின் ஹார்மோன் கட்டுப்படும். 

* நெருக்கமானவர் நம் மீது தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டே இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், காதல் தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப் பார்த்து, சிந்தியுங்கள். கூலாகிவிடுவோம். 

* அடிக்கடி தேவையற்றதற்கெல்லாம் வரும் கோபத்துக்குப் பின்னணியாக மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல மருத்துவர் உதவியும்கூட தேவைப்படலாம். கோபப்படாமல், அவர் உதவியை நாடவும். 

* கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், பொறாமை... எனப் பல வடிவங்களை எடுக்கும். 

சிரிக்கச் சில வழிகள்... 

* `ஓ போடு’வில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... இவையெல்லாம் சிரிப்புக்கு சினேகிதர்கள். சிரிப்பைக் கொண்டுவர, இவற்றில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம். 

* `வாட்ஸ்அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் படத்தில் அவரின் சேட்டைகளைப் பார்ப்பது... என  தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் தொற்றாநோய்களை தள்ளிப்போடலாம்... தவிர்க்கலாம்

* வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்யுங்கள். யானை அம்பாரி ஏறவைத்து விளையாடுவது தொடங்கி, முகத்தில் சேட்டை ரியாக்‌ஷன்களைக் கொடுத்து அவர்களைச் சிரிக்கவைப்பது வரை எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்கும். அவர்களின் மனங்களும் மலரும். 

* சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள் போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்களுக்காவது அவற்றைப் பார்த்து ரசிக்கலாம். 

சிரித்துப் பாருங்கள்... அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு சொர்க்கமாகவே தெரியும். 

தொகுப்பு: பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close