Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகத்துவம் மிக்க மணமூட்டிகள்! நலம் நல்லது-35 #DailyHealthDose

மணமூட்டிகள்

லகில் மசாலாக்களை உணவாகச் சேர்க்கும் பழக்கம் இந்தியாவிலும் சீனாவிலும்தான் அதிகம். மற்ற நாட்டவர்கள் மணமூட்டிகளை, தேநீர்க் கலவையாக மட்டுமே அறிந்துவைத்திருந்தனர். இன்றைக்கும் பல நாடுகளில் அப்படித்தான். நீந்துவதில் கப்பலையும், பறப்பதில் விமானத்தையும் தவிர அனைத்து ஜீவராசிகளையும் விருந்தாகப் படைக்கும் நாடுகள் பல இருக்கின்றன. அங்கு எல்லாம் கோழி, மீன், ஆடு என இறைச்சிகள் பலவும் உப்பு, புளி, காரம், மசாலா என மணமூட்டிகள் இல்லாமல் பத்தியமாக வேகவைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். `மொத்தமாக திரிச்சா மணம் மட்டும் அல்ல; கூடவே நல்ல பலன்களும் போய்விடும்’ என்பது அவர்களின் எளிய கூற்று. அது தாவர மருத்துவக்கூறுப்படி உண்மையும்கூட. மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், அன்னாசிப் பூ, கிராம்பு, வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு, பெருங்காயம்... என நாம் அன்றாடம் சேர்க்கும் அனைத்துமே மணமூட்டிகள் மட்டும் அல்ல, மூலிகைகளும்கூட. அவற்றின் மணத்தையும் மகத்துவத்தையும் சேர்த்து அறியலாமா?

தாளிப்பது ஏன்?

ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்ததும் தாளிப்பது நம் வழக்கம். இதற்குப் பின்னால் ஒரு மருத்துவப் பின்னணி உண்டு. வெளிநாட்டு உணவுக் கலாசாரத்தில் `டிரெஸ்ஸிங்’ என்கிற அலங்கரிக்கும் முறை உண்டே தவிர, `தாளிதம்’ கிடையாது. சமைக்கும்போது, சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அதன் மூலப் பொருட்களும் கலக்கும். அப்போது ஏற்படும் மாறுதல்களால், நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாக நல்ல நிலையில் வைத்திருக்கும் பொருள்) எனும் எட்டு வகை கார, நறுமணப் பொருட்களைக் கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர் வழக்கமாக்கி வைத்திருந்தனர். இப்போது உள்ள தாளிக்கும் முறைக்கும் அந்தக்கால முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்போதுபோல, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை அப்போது தாளிக்கப் பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்குப் பதிலாக, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தப்பட்டன. சமைத்த பிறகு உணவில் இவை சேர்க்கப்படும்போது, சுவையைப் பெருக்கும்; ஜீரணத்தைச் சீராக்கும். உணவால் உடலுக்கும் எந்தக் கெடுதலும் நேராமல் பார்த்துக்கொள்ளும்.

எப்படி?

* எந்த இனிப்புச் செய்தாலும், அதில் சிறிது ஏலக்காய் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால், இனிப்பால் அஜீரணம் ஏற்படாது; சளி சேராது. இனிப்பு, உடலில் வேகமாகச் சேராமல் இருக்கவும் ஏலத்தில் இருக்கும் விதை உதவிடும். 

* எந்த அசைவ உணவைச் சமைத்தாலும், பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை அவசியம் அதில் சேர்க்க வேண்டும். மிளகு, ஒரு நச்சு நீக்கி. ஒவ்வாமை ஏற்படாமலும், மூக்குப் பகுதியில் சளி சேராமலும் பாதுகாக்கும். மிளகில் உள்ள பைப்பரைன் (Piperine) எனும் அல்கலாய்டு மிகச் சிறந்த ஜீரண நோய் எதிர்ப்பாற்றல் தரும் பொருள் (Immune Modulator). பூண்டு, இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதை நாம் பயன்படுத்திவருகிறோம். உணவை எளிதில் ஜீரணிக்க சுக்கு உதவும்; உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராமல் இருக்கவும் உதவும்.

* மடி, ஆசாரம் என பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! உங்கள் ரத்தக்கொழுப்பை சீராக வைத்துக்கொள்ளவும் இதயம் சீராக இயங்கவும் இவை இரண்டும் கண்டிப்பாக உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் சிறு பூண்டு, சின்ன வெங்காயம்தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். பூண்டில் இருக்கும் அல்லிசின் (Allicin) எனும் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணுயிரியாகவும் செயல்படுகிறது.

* வாழைக்காய் பொரியல், உருளைப் பிரட்டல், சுண்டல் வகைகள் செய்யும்போது, முடிவில் பெருங்காயத் தூள் சேர்க்க மறக்கவே கூடாது. பெருங்காயம், மணமூட்டி மட்டும் அல்ல; உடலில் வாய்வு சேராமலும் அஜீரணம் ஆகாமலும் காக்கும். குடல் புண்களையும் ஆற்றும்.

* அகத்தைச் சீர்செய்வதால், `சீரகம்’ என்று பெயர். மந்தம் ஏற்படுத்தும் எண்ணெய்ப் பதார்த்தங்களைச் செய்யும்போது, பொன் வறுவலாக வறுத்த சீரகத்தைச் சேர்க்க வேண்டும். குடல் புண்களை ஏற்படுத்தும் `ஹெலிகோபேக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் நுண்ணுயிரியைக் குடலில் வளரவிடாமல் செய்ய உதவுபவை, சீரகமும் லவங்கப்பட்டையும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். இது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்லது.

* ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ச்சத்து நமக்குத் தேவை. வெந்தயம், சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, சப்பாத்தி என அத்தனை உணவுகளிலும் வெந்தயத்தைச் சேர்க்கலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய முக்கியமான மூன்று பிரச்னைகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. இது ஒரு செயல்படு உணவு (Functional Food).

* மணமூட்டிகள் வகைகளிலேயே தலைச்சிறந்தது மஞ்சள். இதை ஏதோ ஒருவிதத்தில் உணவில் நாம் சேர்த்துவருவதால்தான், பல நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கின்றன. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி. இயற்கை நுண்ணுயிர்க்கொல்லி (Natural Antibiotic). புற்றுநோய் செல்களை அழிக்கும் சிறந்த மருந்து. கார உணவுகளில், காய்ந்த மிளகாயின் கார்சினோஜெனிக் (Carcinogenic) இயல்பை, மஞ்சள் மாற்றிவிடும். அதனால்தான் மிளகாய் சேர்க்கும்போது, மஞ்சளும் சேர்க்கப்படுகிறது. எல்லா வகைப் பொரியல்களிலும், கூட்டுகளிலும் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்குச் சேர்த்தால் மருத்துவச் செலவும் கண்டிப்பாகக் குறையும்.

மணமூட்டிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்க, இந்த மணமூட்டிகள் அஞ்சறைப் பெட்டியில் அவசியம் இருக்க வேண்டும்.

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement