Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அலர்ஜி... விரட்ட அருமையான வழிகள்! நலம் நல்லது-37 #DailyHealthDose

அலர்ஜி

 

த்திரிக்காய் அலர்ஜி, கருவாடு அலர்ஜி, வேர்க்கடலை அலர்ஜி... என ஆரம்பித்து மாடிக் காற்று அலர்ஜி, என ஒவ்வாமைப் பிரச்னைக்குக் காரணங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. உலக அளவில் ஒவ்வாமை பிரச்னை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமையைக் கசக்குவது எனத் தொடங்கி சில நேரங்களில் உதடு, முகம் வீங்குவது, சிறுநீர்த் தடைபடுவது, மூச்சிரைப்பு... என ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவரவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்தும் ஏற்படும் அலர்ஜி, சில நேரங்களில் அனப்பைலாக்டிக் ஷாக் (Anaphylactic shock) எனும் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும் அபாயம் உடையது. ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்ஸிமா போன்ற நோய்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அடாபிக் டெர்மிடிட்டிஸ் (Atopic Dermatitis), வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. இப்படி, அலர்ஜியால் ஏற்படும் இன்னல்களை, நோய்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி... அலர்ஜி பிடியில் இருந்து தப்பிக்க என்ன வழி? 

* இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் பசியாறுவது சிறந்த வழி.

தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தது என்பதற்காக, லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு புதிய கலவை உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள். ரசாயனம் செறிந்த உணவுகளும், வேதிப்பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் குடியிருக்கும் நுண்ணுயிர்க் கூட்டத்தை அழித்துவிடும். அதுவரை, உணவின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதால், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை, முக எலும்புப் பதிவுகளில் சைனசைடிஸ், மூச்சுக்குழல் பாதையில் ஆஸ்துமா, தோலுக்கு அடியில் எக்சிமா என ஏற்படக் காரணமாகிவிடும். 

* எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். `மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

* சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. இது, அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கி, அலர்ஜி, சைனசிடிஸைத் துரத்தக்கூடியது. 

* அறுகம்புல் நச்சு நீக்கி; அலர்ஜியை நீக்கக்கூடியது. இது `கரப்பான்’ எனப்படும் எக்ஸிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் `அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமானது. அடாபிக் டெர்மடிட்டிஸ் (Atopic Dermatittis) எனும் அலர்ஜியால் சருமத்தின் நிறம் கறுத்து, அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து. 

* அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்பு, வஞ்சிர மீன் குழம்பு, கருவாடு, நண்டு, இறால் இவை எல்லாம் ஆகாதவை. 

* பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும். 

* சோயா, காளான்கூட சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்... கவனம். அதேபோல, சோப்பை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதும் அலர்ஜி தரும்... அதிலும் கவனமாக இருக்கவும். 

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா? 

* கரப்பான் ஒவ்வாமை இருந்தால், சோளம், கம்பு, தினை ஆக்கியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சோளம், கம்பு, வரகு தானியங்களை கரப்பான் நோய் உடையவர்களும் அரிப்பைத் தரும் பிற தோல் நோய்க்காரர்களும் தவிர்ப்பது நலம் என்கிறன சித்த மருத்துவ நூல்கள். 

* குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும், கோதுமை சேர்த்த பேக்கரி உணவுகளையும் தோல் நோய் உள்ளவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். 

அலர்ஜியைப் போக்க... 

* சோப்புத் தேய்த்துக் குளிக்காமல், `நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது நல்லது. 

* வேப்பங்கொழுந்து - 1 டீஸ்பூன், ஓமம் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும். 

* கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், `அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம். 

தேவையற்றதைத் தவிர்ப்போம்... ஒவ்வாமையை ஓரங்கட்டுவோம்! 

தொகுப்பு: பாலு சத்யா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement