Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose

மறதி

 

புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபக சக்திக்கும் தொடர்பு இல்லை. இதற்கு வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பலரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும்,`நேத்துப் படிச்சது இன்னைக்கு மறந்து போச்சே...’ என்கிற கவலை நம்மில் பலருக்கும் உண்டு. மறதி பிரச்னை தீவிரமாகும்போது அதை `அல்சைமர்’ என்கிறது மருத்துவ மொழி. 

`கார் சாவியை எங்கே வெச்சேன்னு தெரியலியே?’, `காதலிகிட்ட புரொபோஸ் பண்ணின தேதியை மறந்துட்டேனே..’, என்பவை எல்லாம் ஆரம்பகட்ட மறதிக் குறைபாடு என்கிறது நவீன மருத்துவம். இப்படி கொஞ்சமாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்... என்பதை எல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சைமர் நோயின் உச்சகட்ட அபாயம்.

வயதானவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது அல்சைமர் என்கிற இந்த நோய். `2020-ம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித வயோதிகர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதேபோல், ஓய்வுக்காலம் வந்த பிறகுதான் இது வரும் என்பது கிடையாது. செல்லத் தொப்பையோடு, தலைக்கு டை அடித்துக்கொள்ளும் வயதிலும் மறதி நோய் வர வாய்ப்பு இருக்கிறது. 

`அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி... 
`அடடா... மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி... 
மற்றவர், `அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்த்துக்கொள்ளூம் மறதி... 
`சார்... அவர் மறதி கேஸ். எழுதிக் கொடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி...
`எதுக்குக் கிளம்பி வந்தோம்?’ என யோசித்து நடுவழியில் திணறும் மறதி... 
`நான் யார், என்ன செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாமல் போகும் மறதி... 
ஒட்டுமொத்தமாகச் செயல் இழந்து முடங்கும் மறதி... 
என அல்சைமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப் பார்க்கிறது நவீன மருத்துவம். இவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். 

சாதாரண வயோதிக்கத்துக்கும், இந்த மறதி நோய்க்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான், இந்த மறதி நோயை அதிகரிப்பவை என எச்சரிக்கிறது, உலக சுகாதார நிறுவனம். ஓர் ஆச்சர்யமான விஷயம், மெடிடேரேனியன் டயட் (Mediterranean diet) சாப்பிட்டால் மறதி நோய் வருவது குறையும் என்பது. மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் பாரம்பர்ய உணவுகளை `மெடிடேரேனியன் டயட்’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள், அதிக ஆன்டிஆக்ஸிடென்ட்டுகளையும், அழற்சியைக் குறைக்கும் (Anti-Inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இக்கிலாந்து விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மத்தியத் தரைக்கடல் உணவுகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளிக் கீரை, கம்பு, கேழ்வரகு முதலான சிறுதானியங்களும், பாரம்பர்ய இந்திய உணவுகளும் கொஞ்சமும் சளைத்தவை அல்ல. கூடுதலாக, மருத்துவக்குணம்கொண்ட பல தாவர நுண்சத்துக்களையும் கொண்டவை. 

ஞாபகசக்தி அதிகரிக்க சில வழிமுறைகள்... 

* வல்லாரைக் கீரையை சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைட்ஸ் (Asiaticosides), மூளைக்குச் சோர்வு தராமல், அறிவைத் துலங்க வைக்கும். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பர்ய உணவகங்களில் பிரபலமான உணவுகள். 

* 'பிரம்மி’, பாரம்பர்ய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள `பேக்கோசைட்ஸ்’ (Baccosides) பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிரம்மி வாங்கி சாப்பிடலாம். 

* தினசரி 20 முதல் 40 நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யலாம். இவை மறதியைப் போக்கும்; ஞாபகசக்தியைப் பெருக்கும். 

எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அந்தக் காலத்தில் இருந்த அக்கறை மட்டுமே. நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத் திட்டமிடத் தவறினால், மறதி நோய் கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம் மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement