Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose

தூக்கம்

 

லகின் மிக உன்னதமான இயந்திரம் மூளை! அதன் தங்கு தடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர, நோய் இல்லாமல் வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரப்பதற்குத் தூண்ட... மேலும் பல செயல்பாடுகளுக்கு தினசரி 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், கட்டாயம். அதிலும் கும்மிருட்டில் தூங்க வேண்டும். 

அது என்ன கும்மிருட்டு உறக்கம்? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட் மேட்சோ,  படமோ பார்த்துக்கொண்டே அசந்து தூங்குவதற்குப் பெயர் தூக்கம் அல்ல. `விடி விளக்கு வெளிச்சம்கூட இல்லாத இருட்டில் நடைபெறும் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சுரக்கும். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும்’ என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த மெலடோனின் சுரப்புதான் நம் உடல் இயந்திரத்தை இரவில் சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார்நிலையில் வைக்கிறது; புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கிறது. பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால்கூட மெலடோனின் சுரக்காது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே சித்தர் தேரையர், `பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடியிருக்கிறார். 

ஏன் தூங்க வேண்டும்? 

ஒருவர், தினமும் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருப்பார்; இன்னொருவர், நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருபவராக இருப்பார்; மற்றவர், சரியான நேரத்தில் வீட்டுக்கு வருபவராக இருந்தாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவராக இருப்பார். இந்த மூவருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். 

தூக்கமின்மை, முதலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். பிறகு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி வரும். இறுதியாக, மன உளைச்சலை ஏற்படுத்தி, மன நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும். சட்டையைக் கிழித்துக்கொண்டு, கல்லெடுத்து அடிப்பவர்கள், மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் மட்டும் அல்ல... நம்மில் ஐந்தில் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கிறோம். உறக்கம் இல்லாமல், மன மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் சிரிக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் பலரும் மன நோயாளியாகத்தான் இருக்கிறோம். இதற்கு, சரியான உறக்கம் இன்மையே முக்கியக் காரணம். 

வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடலுக்கு நல்லதல்ல. தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவை பரோட்டாவில் ஆரம்பித்து, ஃபலூடாவில் முடிக்கும் பழக்கம் உறக்கத்துக்கு எதிரி. நன்றாக வீசிப்புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிக அளவில் மாவில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும், சிலருக்கு குடல் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், கண்டிப்பாக உறக்கம் கெடும். எனவே, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். 

நல்ல தூக்கம் வேண்டுமா? 

* இரவுகளில் கொஞ்சம் பழத்துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிடலாம். கடைசி உருண்டையைச் சாப்பிடும்போதே, உறக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும். 

* பணி இடங்களில் இருந்து தாமதமாக வீடு திரும்புவோர், இரவு உணவை வேலை பார்க்கும் இடத்திலேயே 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. தூங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது மிகவும் நல்லது. 

* ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். `மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலை செய்கிறேன்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தினமும் 45 நிமிடங்களுக்கு மித வேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப்படுத்தும்; மனதை ஒருநிலைப்படுத்தி தூங்கவைக்கும்.  

* கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக்கிழங்குப் பொடி, மாதுளம்பழம் இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் இயற்கை உணவுகள் அல்ல... மருந்துகள்! 

வீட்டில், வாழ்க்கைத்துணை, குழந்தைகளிடம் நீடித்து நிலைத்திருக்கும் அன்பு, செல்ல அரவணைப்பு எல்லாமே மன அமைதியைத் தரும்; நல்ல தூக்கத்தையும் தரும். இதை மனதில் கொள்வோம். நல்ல தூக்கத்தால் மட்டுமே உண்மையிலேயே இரவை `குட்நைட்’ ஆக்க முடியும்! 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement