Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேண்டாம் வெள்ளை அரிசி..! சிவப்பு அரிசி ஏன் சிறப்பு? #MustKnowFact

`சாப்பிட்டுட்டுப் போங்க!’ என்கிற தமிழர்களின் உபசரிப்பு அர்த்தமுள்ளது. `வயிறார சாதம் சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்!’ என்கிற விருந்தோம்பல் அது. ஆனால், நமக்கே தெரியாமல், விருந்துக்குப் பயன்படுத்துவது கொஞ்சம்கூட சத்தே இல்லாத உணவை; அதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஓர் உணவை! உங்களுக்குத் தெரியுமா... சிவப்பு அரிசி சாதாரண அரிசியைவிட ரொம்பவே பெஸ்ட்!

சிவப்பு அரிசி

இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின்  மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது. எத்தனையோ நெல் ரகங்களை விளைவித்திருக்கிறார்கள் நம் முன்னோர். அவற்றில் முக்கியமானது சிவப்பு அரிசி. இதை, `தீட்டப்படாத அரிசி’, `முழு அரிசி’ என்றும் சொல்வார்கள். அந்தத் தங்கத்தைவிட்டுவிட்டு, வெள்ளை அரிசி என்கிற கவரிங்குக்குப் பின்னால் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம்.

`மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி போரடித்த...’ என ஒரு பழைய பாடல் உண்டு. அறுவடை முடிந்து, களத்துக்குக் கொண்டு வரும் கதிரில் இருந்து நெல்லைப் பிரிக்க `போரடித்தல்’ என்ற ஒரு முறை உண்டு. இதற்கு, மாடுகளைப் பயன்படுத்துவார்கள். மாட்டால்கூட செந்நெல்லைப் பிரித்து எடுக்க முடியாது; அது அத்தனை வலுவானது என்பதால் ஆனைகட்டிப் போரடித்தார்கள் என்றும் இந்தப் பாடலுக்கு அர்த்தம் சொல்வார்கள். அந்த செந்நெல்தான் சிவப்பு அரிசி.

அரிசி, நம் பாரம்பர்யமான உணவு தானியம். 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் நெல் விளைவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், சமீபத்திய தொல்லியல் ஆய்வு 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் விதைகள், அதைப் பயிரிட உதவும் விவசாயக் கருவிகள் இருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறது. அரிசி, தன் நீண்ட வரலாற்றில் ஆசியக் கண்டத்தில் மட்டுமே நிலைத்திருக்கிறது. உலகில் பெரும் அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படுவது ஆசியாவில்தான்.

சீனா, தாய்லாந்து, வியட்நாம் இந்த மூன்றும்தான் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள். இன்றைக்கும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரிசி அதிகமாக விளைவிக்கப்பட்டாலும், இவற்றில் அதிகம் நாம் பெறுவது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத்தான். சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே.சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம்.

சிவப்பு அரிசி... ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்! எப்படி?

இதயத்துக்கு இதம்!

நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்கலாம்! 

முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான். 

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு... மருந்து!

மாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்னைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. 

டைப் 2 சர்க்கரை நோயைக் குறைக்கும்! 

இதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது. 

இன்னும், ஆஸ்துமா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், மாரடைப்பைத் தவிர்ப்பதில், பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில்... என இதன் பலன்கள் பட்டியல் வெகு நீளம். 

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.

- பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement