குழந்தைகள் கூலிங் கிளாஸ் கேட்டால்..!? - பெற்றோர்களுக்கு அவசிய எச்சரிக்கை | Side Effects Of Wearing Sunglasses

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (05/01/2017)

கடைசி தொடர்பு:13:01 (05/01/2017)

குழந்தைகள் கூலிங் கிளாஸ் கேட்டால்..!? - பெற்றோர்களுக்கு அவசிய எச்சரிக்கை

கூலிங் கிளாஸ் அணிந்த சிறுவன்


சாலையோரக் கடைகள் மற்றும் கடைவீதிகளில் விற்கப்படும் மலிவுவிலைக் கண்ணாடிகளை (கூலிங் கிளாஸ், ஸ்டைல் கிளாஸ்) இன்றைய குழந்தைகள் மற்றும் பதின் வயதினர் அதிகம்டாக்டர் பத்மினி மோசஸ் விரும்பி வாங்குகிறார்கள். ஸ்டைலுக்காக அவர்கள் அணிந்துகொள்ளும் இந்த தரமற்ற கண்ணாடிகள் குழந்தைகளின் கண் நலனை பாதிக்கலாம்'' என்று சொல்லும் கண் நல மருத்துவர் பத்மினி மோசஸ், அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினார்.

* ''அழகு, ஸ்டைலுக்காக கண்ணாடி அணிவதே தவறான பழக்கம். அதிலும் மலிவு விலைக் கண்ணாடிகள் அணிவது, சிக்கல்களை அதிகமாக்கும். பிளாட்ஃபாரங்கள், கடைவீதிகள், திருவிழாக்களில் விற்கப்படும் இதுபோன்ற கண்ணாடிகள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பதின் வயதினரை இலக்குவைக்குதான் விற்கப்படுகின்றன. இதுபோன்ற கலர் கலரான கண்ணாடிகளை அணிந்துகொள்வதை குழந்தைகளும் அதிகமாக விரும்புகின்றனர். 

* தரமற்ற கண்ணாடிகளில் பூசப்பட்டிருக்கும் மலிவான கோட்டிங் மற்றும் அதன் நிறம் தண்ணீர் பட்டாலோ, வியர்வையிலோ கரைந்து சருமத்தில் படும்போது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அது தயாரிக்கப்பட்ட மலிவான மெட்டீரியலும் அலர்ஜியை உண்டாக்கலாம். 

* மலிவு விலைக் கண்ணாடிகள் சரியான பொஸிஷனில் இருக்காது என்பதால், மூக்கின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தி காயங்கள், தழும்புகள், அலர்ஜியை உண்டாக்கலாம். 

*  தரமற்ற கண்ணாடிகள் ஜீரோ பவர் (zero power),  பிளாங் பவர் (blank power) எனக்கூறி விற்கப்பட்டாலும், பெரும்பாலான கண்ணாடிகளில் 0.25 என்ற அளவில் பவர் இருக்கலாம். அது கண் நலனில் பிரச்னை, பார்வைத் திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

* அழகுக்காக கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பது நலம். ஒருவேளை அவசியம் என்றால், பாலிகார்பனேட் (polycarbonate) மெட்டலால் செய்யப்பட்ட பிராண்டட் கண்ணாடிகளை, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் அனுமதிக்கலாம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே அணிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக, குழந்தைகள் இதுபோன்ற கண்ணாடிகளை கேட்டதும் வாங்கித் தராமல், அது கண் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது என்பதை எடுத்துக்கூறி தவிர்க்கச் செய்ய வேண்டியது பெற்றோர் பொறுப்பு'' என்ற டாக்டர், அடுத்ததாக, கூலிங் கிளாஸ்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார். 

கூலிங் கிளாஸ் தேர்வு செய்யும் முன்..!
* டிரைவிங்கின்போது கண்கூச்சம், தூசி, எதிர்காற்று போன்றவற்றை தவிர்க்க, யுடிலிட்டி (utility) வகை கூலிங் கிளாஸ்களைப் பயன்படுத்தலாம். 

* புறஊதா கதிர்களின் (Ultraviolet) பாதிப்பில் இருந்து கண்களைப் பாதுகாக்கவல்ல 'யூவி புரொடெக்‌ஷன்' உள்ள கூலிங் கிளாஸ்களாக பார்த்து வாங்கவும். கண்ணாடியில் 'யூவி புரொடெக்‌ஷன் 100 %' என எழுதப்பட்டிருக்கிறதா, அது ஜீரோ பவர் வகை கிளாஸா என்பதையும் உறுதிபடுத்தி வாங்கவும்'' என்ற டாக்டர், ஸ்டைல், அழகுக்காக அணியப்படும் கண்ணாடிகளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதைப் பட்டியலிட்டார். 

பாதிப்புகள் என்ன..?

* ''ஸ்டைலுக்காக அணியும் கண்ணாடிகள் சீரற்ற வடிவம் மற்றும் பல வண்ணங்களில் இருப்பதால், அதை அணிந்துகொண்டு பார்க்கும்போது ஒரு பொருள் சீராகத் தெரியாமல், கண் பார்வையில் ஒளிச்சிதறலை நிச்சயம் ஏற்படுத்தும்.

* கண் பார்வையில் ஒளிச்சிதறல் தொடர்ந்து ஏற்பட்டால், கண்ணுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அது பிற்காலத்தில் தலைவலி, கண்ணில் நீர் வடிவது, கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பார்வைக் கோளாறுகள், கண் எரிச்சல், கண் கூச்சம் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

மொத்தத்தில், அழகுக்காக கண்ணாடி அணிந்து, அதுவே பவர் கண்ணாடி அணியக் காரணமாக அமைந்துவிடும். எனவே, மலிவு விலை கண்ணாடிகள், கூலிங் கிளாஸ்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதே நல்லது'' என்று மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தி முடித்தார், டாக்டர் பத்மினி மோசஸ்.

- கு.ஆனந்தராஜ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்