வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (06/01/2017)

கடைசி தொடர்பு:10:24 (06/01/2017)

காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா ? #HealthTips

து கும்பகோணம் டிகிரியோ, உள்ளூர் கடையில் அரைத்ததோ... காலையில் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பது நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். சிலருக்கு அது ஓர் அடையாளமாகவே ஆகிப்போன அன்றாடச் செயல். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா... அது ஆரோக்கியமானதுதானா? நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். நம் வயிற்றுக்குள் போகும் காபி என்ன செய்யும்... என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

 

 

 

 காபி குடிக்கலாமா

 

 

வயிறு பத்திரம் பாஸ் !

உடல் என்கிற மாயாஜாலம் நிகழ்த்துகிற அற்புதம் ஏராளம். தேர்ந்த ஓர் இயந்திரம் செய்யும் வேலையைவிட எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்துகிற உயிர் இயந்திரம் அது. உணவை செரித்து, அதில் இருந்து சத்துக்களைப் பிரித்துக் கொடுத்து, இதயத்தைத் துடிக்கவைத்து, மூளையை சிந்திக்கவைத்து, நம்மைப் பேசவைத்து, சிரிக்கவைத்து, அழவைத்து... என அது நிகழ்த்துகிற ஜாலங்கள் அநேகம். அதில் ஒரு சிறு துளி உதாரணம்... நாம் சாப்பிடும்போது, வாசனையை நுகரும்போது, சமயத்தில் உணவைப் பற்றி நினைக்கும்போதே... நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகத் தொடங்கிவிடும். அன்றைய தினம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என நினைத்து நாம் அருந்தும் காபி, இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் சுரக்கச் செய்யும். ஏற்கெனவே, இரவில் சாப்பிட்டுவிட்டு, உறங்கி நீண்ட நேரத்துக்கு வயிற்றைக் காயப் போட்டு வைத்திருப்போம். அந்த வெறும் வயிற்றில் காபி குடித்தால் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அதன் செயல்பாட்டைப் பாதிக்கும். வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும். பின்னாட்களில், இதுவே வயிறு தொடர்பான பல பெரிய பிரச்னைகளுக்கும் காரணமாகலாம்.

அசிடிட்டி உள்ளவர்கள் கவனிக்க..!

சிலருக்கு வயிற்றில் ஏற்கெனவே சில பிரச்னைகள் இருக்கும். அதாவது, அசிடிட்டி, அல்சர், `இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம்' (Irritable Bowel Syndrom) எனும் அடிக்கடி மலம் கழிக்கத் தூண்டும் பிரச்னை ஆகியவை. இப்படிப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் காபியைக் கையால்கூடத் தொடக் கூடாது. காபி கொட்டையில் இருக்கும் `காஃபின்’ என்கிற பொருளும் சில அமிலங்களும் சிறுகுடலைக் கடுமையாக பாதித்து, எரிச்சலை ஏற்படுத்திவிடும்.

ஹார்மோன் அலெர்ட் !

நம் உடல் 24 மணி நேர சுழற்சிக்கு உட்பட்டது. இதை ஆங்கிலத்தில், `சர்கேடியன் ரிதம்’ (Circadian Rhythm), `சர்கேடியன் சைக்கிள்’ (Circadian Cycle) என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது, நம் உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்யும். இந்தப் பணிகளை ஒழுங்குபடுத்துபவை, ஹார்மோன்கள். அவற்றில் கார்ட்டிசால் (Cartisol) என்கிற ஸ்டீராய்டு ஹார்மோன்தான் நம்மை எப்போதும் எச்சரிக்கை உணர்வோடும் விழிப்போடும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் ஒரு நாளைக்கு மூன்று முறை உச்சக்கட்ட நிலையில் இருந்து பணியாற்றும். நாம் பயத்தில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இந்த ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். அப்படி ஒரு நாளின் மூன்று முறைகளில் காலையில் 8 மணி முதல் 9 மணி வரைக்கான நேரம், கார்ட்டிசால் செயல்படும் முதல் காலம். அந்த நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது, கார்ட்டிசாலின் செயல்பாட்டைச் சீர்குலைத்துவிடும். இப்படி காபி சாப்பிடுவது தொடர்ந்தால், அந்த ஹார்மோன் அழியும் நிலையேகூட உண்டாகி, உடலுக்கு வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

உடல் வறட்சி உஷார் !

`காலையில் வெறும் வயிற்றில் காபி சாப்பிடுவது, நாளின் பிற்பாதியில் நாக்கு மற்றும் உடலை வறட்சி அடையச் செய்துவிடும்’ என எச்சரிக்கின்றன சில ஆய்வுகள். அதன் காரணமாக, நாம் உடலில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவைக் கடுமையாகப் பாதிக்கும். சரியான அளவில் நம் உடலில் இருந்து வியர்வையாகவோ, சிறுநீராகவோ நீர் வெளியேறவில்லை என்பது, உடலுக்குப் பல பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.

வேண்டாமே உயர் ரத்த அழுத்தம் !

`வெறும் வயிற்றில் காபி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வழிவகுக்கும்’ என எச்சரிக்கிறார்கள் சில மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தம் பற்றிச் சொல்லவே வேண்டாம். சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்ற மெகா வியாதிகளுக்கு ஆரம்பப்புள்ளியே உயர் ரத்த அழுத்தம்தான். எனவே, காலை காபியா... அதிலும் வெறும் வயிற்றில் காபியா? `நோ’ சொல்லிப் பழகுவோம். `பிறகு, எப்போதான் காபி குடிக்கலாம் பாஸ்?’ என்று கேட்கிறீர்களா? காலை சிற்றுண்டிக்குப் பிறகு 10:00 மணியில் இருந்து 11:30 காபி அருந்த அருமையான நேரம். நம் வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு ஊறு ஏதும் விளைவிக்காத அற்புதமான தருணம். அந்த நேரத்தில் காபி குடிக்கலாம்... மணக்க மணக்க!

-  பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்