ஆர்கானிக் சிறுதானியங்கள் செய்யும் அற்புதங்கள் #SaveFarmers

 சிறுதானியங்கள்

உணவே மருந்து என்றும் மருந்தே உணவு என்றும் வாழ்வியல் வகுத்த பாரம்பர்யம் நமது. சத்துள்ள சிறுதானியங்கள் நம் உணவாக இருந்தன. அவற்றை உண்டு ஆரோக்கியம் காத்து அழகான வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். இன்றோ நாகரிகம் என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட், சாட் உணவுகள், கோலா பானங்கள் எனப் புதியதைத் தேடிப்போய் உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், புற்றுநோய் என நோய் பெருக்கி விழி பிதுங்கி நிற்கிறோம். மறுபுறம் பூச்சிமருந்து தெளித்தும் செயற்கை உரமிட்டும் மண்ணை மலடாக்கியும் ஆற்றைச் சுரண்டி, குளங்களை ஃபிளாட்டுகளாக்கி நீர்நிலைகளை கபளீகரம் செய்தும் விவாசாயத்தையும் விவசாயியையும் நடுத்தெருவில் நிறுத்தி உள்ளோம். நாள்தோறும் தொடரும் விவசாயிகள் தற்கொலையும் பெருகிக்கொண்டே இருக்கும் லைஃப்ஸ்டைல் நோய்களும் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

தினை

 


ஆர்கானிக்குக்கு மாறுவோம்!


சிறுதானியங்கள் நம் ஆரோக்கியம் காக்கும் அற்புத வரங்கள். சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், வரகு, பனிவரகு ஆகியவற்றை சிறுதானியங்கள் என்கிறோம். இவற்றில், கார்போஹைட்ரேட்,  புரோட்டின், நார்ச்சத்து, ஏ, சி, இ மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், தாமிரம், துத்தநாகம், மக்னீஷியம், மாங்கனீஸ் போன்ற தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நம் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சிறுதானியங்களிலேயே கிடைக்கின்றன என்பதுதான் இவற்றின் சிறப்பே. 

கேழ்வரகு


மூன்று வேளையும் அரிசியால் செய்யப்பட்ட உணவுகளையே சேர்ப்பதால் உடலுக்கு கார்போஹைட்ரேட் மட்டுமே கிடைக்கும். இதற்கு மாற்றாக, குறைந்தபட்சம் தினசரி ஒருவேளை ஏதேனும் ஒரு சிறுதானியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


மேலும், உரங்கள், பூச்சிகொல்லிகள் இல்லாத இயற்கைமுறையில் விளைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை உண்ணும்போது நம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

சோளம்

இவற்றால் என்ன பலன்?

தமிழகத்தில் உள்ள விவசாயிகளில் சுமார் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். சிறுதானியங்களின் உற்பத்தியும் குறைவே. ஏன் இந்த நிலை? நம் முன்னோர்கள் உண்ட சிறுதானியங்களைத் தவிர்த்துவிட்டு அனைவருமே அரிசியை நாடுவது ஒரு முக்கியமான காரணம். சிறுதானியங்களையும் ஆர்கானிக் உணவுகளையும் நம் தினசரி மெனுவில் கட்டாயம் ஆக்கும்போது, இவற்றுக்கான தேவை அதிகரிக்கும். சிறுதானியங்களைப் பயிரிட நிறைய நீர்வளமோ, நில வளமோ தேவை இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். குறைந்த அளவு நீரில், கிடைக்கும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தினால்கூட சிறுதானியங்களை விளைவிக்க முடியும் என்கிறார்கள். எனவே, சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது நம் தனிப்பட்ட ஆரோக்கியம் காக்கும் விஷயம் மட்டும் இல்லை. நம்  விவசாயிகளையும் காக்கும் நல்லதொரு விஷயம்... 

சிறிய முடிவுகள்தான் சில சமயம் பெரிய விஷயங்களைச் சாதிக்கும்! கரம் கோப்போம்... நலம் காப்போம்! 

- இளங்கோ கிருஷ்ணன்
    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!